(இ-ள்.) மேலே சீறிக் கிடக்கின்றது ஓர் ஆடும் பாம்பு; அது தன் பக்கத்தில் ஒருவரையும் சார வொட்டாது; அது வல்லாமல், முன்பு தலை ஓடுகள் கோத்து அணிந்ததுண்டு; வெள்ளை எலும்பு மாலையும் அணிந்துகொண்டு ஓர் இடப ஏற்றினை ஏறி வருவதுமுண்டு; இறைவரே அன்பினாலே உம்மிடம் வந்து அடைவது எவ்வாறு? பாம்பு ஆடிச் சீறி அடைபவரை அடைய வொட்டாது; இடபம் பாயும்; தலையோடுகளைக் கோத்த மாலையும் எலும்பு மாலையும் அனுசிதம் என்பது. விடங்கவேடம் உள்ளங் கவர்ந்து ஆட்கொள்ளவல்ல சிறப்பினைப் போற்றியது; ஆளுடைய நம்பிகளது "அடிகே ளுமக் காட்செய வஞ்சுதுமே" என்ற திருக்கோத்திட்டை என்னும் பதிகக் கருத்துக்கள் இங்குச் சிந்திக்கத் தக்கன. 17 ஏறலா லேறமற் றில்லையே யெம்பெருமா னாறெலாம் பாயு மவிர்சடையார் - வேறோர் படங்குலவு நாகமுமிழ்பண்டமரர் சூழ்ந்த தடங்கடனஞ் சுண்டார் தமக்கு. 18 (இ-ள்.) எம் பெருமானும், அவிர் சடையாரும், நஞ்சுண்டவரும் ஆகிய சிவபெருமானுக்கு இடப ஏற்றினையன்றி ஏறிவருவதற்கு வேறு ஊர்தியில்லையே. "கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே, யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடீ" (திருச்சாழல்) என்ற திருவாசகக் கருத்துச் சிந்திக்க. இல்லையே - இல்லை என்று உடன்பாடும், இல்லையோ? என்று வினாவுமாகப் பொருள்கொள்ள நின்றது. ஆறு எலாம் - கங்கையாறு முழுமையும்; சூழ்ந்த - சூழ்ந்து கடைந்த; நாகம் - வாசுகி; அடியவரை ஆட்கொள்ள வெளிப்படுங் காலத்துப் புண்ணிய வடிவாயுள்ள இடபத்தினையே மேற்கொண்டு இறைவர் எழுந்தருளூவர் என்பது. 18 தமக்கென்று மின்பணி செய்திருப் பேமுக்குத்தாமொருநா ளெமக்கொன்று சொன்னா லருளுங் கொலாமிணை யாதுமின்றிச் சுமக்கின்ற பிள்ளைவெள் ளேறொப்ப தொன்றுதொண் டைக்கனிவாய் உமைக்கென்று தேடிப் பெறாதுட னேகொண்ட வுத்தமரே. 19 (இ-ள்.) ஒப்பாக ஒரு பொருளுமின்றித் தம்மைச் சுமக்கின்ற வெள்ளை மழலிடையினைப்போல வேறொன்றைத் தம் தேவியாராகிய உமையம்மையாருக்கென்று தேடிக்கொள்ளாமல் அவரைத் தம் இடப்பாகத்தில் வைத்துக்கொண்ட உத்தமராகிய சிவபெருமான் தமக்கு எந்நாளும் இனிய பணிகளைச் செய்துகொண்டிருக்கின்ற எங்களுக்காக ஒன்று வேண்டிக்கொண்டால் அருளுவாரா? நிந்தைத் துதியாக வைத்த வேற்றுப்பொருள் வைப்பணி. அருள் வடிவாகிய அம்மையாரை எஞ்ஞான்றும் பிரியா நிலைமையில் ஏற்றின்மேல் உடனே வைத்தனர் என்பது உத்தமர் என்றதன் குறிப்பு. இணையாதுமின்றி என்றதனால் வேறு இது ஒப்பதொன்று தேடிப்பெற இயலாது என்பது குறிப்பு; என்றும் - ஒருநாள் - பல காலமும் பணிசெய்து கிடப்பின் ஒருநாள் வெளிப்பட்டருளுவர் என்பது குறிப்பு. "பன்னா ளழைத்தால்...எதிர்ப்படுமே" (தேவா). ஒருநாள் - வினை நீங்கிப் பக்குவமாகும் பாலம். உமையைத் தம்மோடு வேற்றுமையின்றி அபேதமாக்கியது போல எம்மையும் தம்முளடக்கிப் பிறிதொன்றுங் கொடாது அபேதமாய் வைப்பாரென்பது கருத்து என்றுரைப்பர் முன் உரைகாரர். 19 |