ஈண்டிய புகழின் பாலார் - ஈண்டுதல் - அணுகுதல். புகழ் இவரை நோக்கி வந்து ஈண்டிற்று என்க. "ஆக்க மதர்வினாய்ச் செல்லும்" என்புழிப்போல. எல்லையில் தவத்தின் மிக்கார் - அளவில்லாத முற்செய்தவங்களான் மேம்பட்டவர். தவம் - முற்செய் தவம். "மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்" (ஏயர்கோ - புரா - 239); "ஒப்பரிய தவங்செய்தே னாதலினா லும்மடிகள், இப்பொழுது தாங்கிவரப் பெற்று" (திருஞான - புரா - 935). எல்லையில் - என்பது அவை இவரிடத்து நின்ற மிகுதிப்பாட்டினையும் குறித்தன. தவத்தின் மிக்காராதலின் அரசின் பாதம் அறியாமுன்னே அடைந்து அன்பினரானார் என்று காரணங் கூறியபடி. சரித விளைவுக்குக் காரணமாயின சிறப்பினால் கலந்த அன்பினர் என்று எடுத்துக்கூறிய இயைபும் காண்க. ஆண்ட அரசு - என்க. ஆண்ட - ஆளுடைய இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட என்பது. இச் சரி தவிளைவுக் குறிப்பும் ஆம். அரசு - திருநாவுக்கரசு. அடைந்து - வழிபாட்டினாற் புகலாக அடைந்து. அடைந்து - கலந்த - அன்பினராய் - என்று கூட்டுக. கலத்தல் - உணர்வு வகையினால் ஒன்றுபடுதல். அவர் அறியாமுன் - தம்மை அவர் அறியாத முன்பு. காண்டகு காதல் - உள்ளடங்காமல் வெளிப்பட்டுப் பிறர் கண்டுகொள்ளத் தக்கதாய் அறியா முன்னேயும் வாக்கின் வேந்தர் காண்டகு காதல் என்று கூட்டி, வேந்தர் காணத்தக்க அடிமைத்திறம் என்பதுமாம். இப்பொருளில், காதல் கூரும்படி கலந்த என்று முடிக்க. நாயனாரது நாடும் நகரமும் முதலியவை முன்னர்க் (1465) கூறியமையின் இங்குக் கூறாமலே தொடங்கினார். குணத்தின் மிக்கார் - என்பதும் பாடம். 1 1784. | களவு பொய் காமங் கோப முதலிய குற்றங் காய்ந்தார் வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார்; மனைப்பா லுள்ள அளவைக ணிறைகோன் மக்க ளாவொடு மேதி மற்று உளவெலா மரசி னாமஞ் சாற்றுமவ் வொழுக்க லாற்றார்; |
2 (இ-ள்.) களவு...காய்ந்தார் - களவும், பொய்யும், காமமும், கோபமும் முதலாகிய எல்லாக் குற்றங்களையும் ஒழித்தவர்; வளமிகு...நிலையினார் - வளம் மிகுந்த இல்லற வாழ்க்கையில் நின்றவர்; மனைப்பால்...ஆற்றார் - வீட்டினிடத்துள்ள முகத்தல் - நீட்டல் - முதலிய அளவுக் கருவிகளும், துலைக்கோல் போன்ற எடுத்தலளவைக் கருவிகளும், மக்களும்; பசுக்களுடனே எருமைகளும், மற்றும் உள்ள எல்லாமும் திருநாவுக்கரசு நாயனாருடைய திருநாமம் சூட்டி அழைக்கும் அவ்வொழுக்க நெறியின் நின்றவர்; (வி-ரை.) களவு...காய்ந்தார் - முன்பாட்டிற் குணத்தால் மிக்கார் என்றுரைத்த தன்மையினைத் தொடர்ந்து, நற்குணங்களை மிக்குடையோரும் தீக்குணங்களையும் ஒரோவழி உடையவராயிருப்பக் காண்டுமாதலின் அவ்வையப் பாட்டினை நீக்குதற்கு, ஈண்டு இவ்வாறு தீக்குணங்களையெல்லாம் அறவேயொழித்தவர் என்றுறுதி கூறினார். குணத்தின் என்று வாளா கூறியதுபோலன்றி, களவு முதலிய என்று எடுத்துக்காட்டியும், முற்றும்மை தந்தும், காய்ந்தார் என்று வலியுறுத்தியும் கூறினார். ஒரு நம்பி என்ற முதனூற் கருத்தை விரித்தவாறு. களவு - பொய் - முதலிய குற்றம் - "அறவிது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம்" (1811); "இப்போ திங்கவ னுதவான்" (1814) எனவரும் பிற்சரித |