1787. | அளவில்சனஞ் செலவொழியா வழிக்கரையி லருளுடையார் உளமனைய தண்ணளித்தா யுறுவேனிற் பரிவகற்றிக் குளநிறைந்த நீர்த்தடம்போற் குளிர்தூங்கும் பரப்பினதாய் வளமருவு நிழறருதண் ணீர்ப்பந்தர் வந்தணைந்தார். |
5 1785. (இ-ள்.) வடிவுதான் காணாராயும் - திருவடிவத்தினைத் தானும் காணதவராயினும்; மன்னுசீர்...கேட்டு - நிலைபெற்ற சிறப்பினையுடைய திருநாவுக்கரசு நாயனாருடைய திருத்தொண்டின் திறத்தினையும், பெருமானார் வைத்த திருவருளினையும் கேட்டு; அவர் நாமத்தால்...செய்து - அவரது திருப்பெயரால் படி நிகழும் திருமடங்களும் தண்ணீர்ப்பந்தர்களும் முதலாக உள்ள முடிவில்லாத அறங்களைச் செய்து; முறைமையால் வாழும் நாளில் - அந்நியதியின் அமைந்து வாழ்கின்ற நாளிலே. 3 1786. (இ-ள்.) பொருப்பரையன்...திருநாவுக்கரசர் - மலையரசன் மகளாராகிய இளம்பிடி போன்ற பார்வதியம்மையாருடன்ணையும் சிவக்களிற்றினது திருப்பழனம் என்னும் தலத்தினைப் பணிந்து திருப்பணிசெய்யும் திருநாவுக்கரசர்; ஒருப்படு...விருப்பினொடும்; உடைய பெருமானது பிற பதிகளையும் ஒன்றுபட்டதாதலினால் வணங்கும் விரும்பினோடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் - திங்களூரின் பக்கத்தில் வழி வருவாராகி; 4 1787. (இ-ள்.) அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் - அளவில்லாத சனங்கள் சென்று கொண்டிருத்தலை நீங்காத நல்ல வழியின் கரையிலே; அருள் உடையார் உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றி - அருள் உடைய பெரியோர்களது உள்ளத்தைப்போலக் குளிர்ந்த கருணைத் தன்மையினையுடையதாய், உறும் வேனில் வெம்மையின் துன்பத்தையெல்லாம் போக்கி; குளம் நிறைந்த...பரப்பினதாய் - குளமும் நிறைந்த நீரினையுடைய தடமும் போலக் குளிர்ச்சி நீங்காது முழுதும் தங்கும் பரப்பினையுடையதாகி; வளமருவு நிழல்தரு தண்ணீர்ப்பந்தர் வந்து அணைந்தார் - வளம் பொருந்திய நிழலைத் தரும் தண்ணீர்ப் பந்தரினை வந்து அணைந்தனர். 5 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவுபடுத்தி உரைக்கின்றன. 1785. (வி-ரை.) வடிவுதான் காணாராயும் - தான் - தானும். உம்மை வடிவும் கூட எனச் சிறப்பின்கண் வந்தது. காணாராயும் - கேட்டு - உம்மை எச்சவும்மை. அடிமையும் - அருளும் கேட்டு - (அதனால்) என்க. "ஆட்பா லவர்கட்கருளும் வண்ணமு மாதி மாண்பும்" (திருப்பாசுரம்.) அடிமை - அடிமைத் திறம். அடிமை செய்யும் பண்பும் தன்மையும்; அருள் - அவ்வடிமைத் திறத்திற் ஏற்றவாறு அருள் வைக்கும் இறைவனது அருட்பண்பு, அடிமை - அருள் - என்பன ஈண்டு முறையே உலகர் புறத்துக் காண நிகழ்ந்த புற நிகழ்ச்சிகளைக் குறித்தன. கேட்டு அடியார் சொல்லக் கேட்டு; அடிமையும் அருளுமாகியவற்றைப் பேசுதலும் பிறவற்றைப் பேசாமையும் அடியார் செய்கை; ஆதலின் "என்னை யாண்ட நிகரிலா வண்ணங்களும், சிட்டன் சிவனடியாரைச் சீராட்டுந் திறங்களுமே சிந்தித்து" (திருப்பல்லாண்டு) என்றபடி அவற்றைப் பேசக் கேட்டலும், பிறவற்றைக் கேளாமையுமுடைய அடியார்கள் அவற்றைக்கேட்டு ஈடுபட்டு மனமுருகுவர் என்க. கேட்டு - கேட்டு - அவர் நாமத்தால் அறங்கள்செய்து - முன்னர், அளவைகள்...மேதி மற்றும் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகலாறு விளைந்தது முன்னைத் தவத் |