பக்கம் எண் :


974திருத்தொண்டர் புராணம்

 

1792.

 கடிதணைந்து வாகீசர் கழல்பணிய மற்றவர்தம்
 அடிபணியா முன்பணியு மரசினெதி ரந்தணனார்
"முடிவிறவஞ் செய்தேன்கொன்; முன்பொழியுங் கருணைபுரி
 வடிவுடையீ ரென்மனையில் வந்தருளிற் றென்!" னென்றார்.

10

(இ-ள்.) கடிது...பணிய - (அப்பூதியார்) விரைவில் வந்தணைந்து வரகீசருடைய திருவடிகளை வணங்க; மற்றவர்...எதிர் - அவர் தம்முடைய திருவடிகளில் பணிந்து வணங்குவதற்கு முன்னமே தாம் பணிகின்ற திருநரவுக்கரசர் முன்பு; அந்தணனார் - அந்தணராகிய அப்பூதியார்; முன்பொழியுங் கருணைபுரி வடிவுடையீர் ! - முன்னே பொழிகின்ற கருணை புரியும் திருவடிவினையுடைய பெரியீரே!; முடிவில் தவம் செய்தேன்கொல்! என் மனையில் வந்தருளிற்று - முடிவில்லாத தவத்தை முன்னம் செய்திருந்தேன் போலும் தேவரீர் அடியேனது மனையில் வந்தருளிச் செய்தது; என் என்? என்றார் - தேவரீரது வருகை என்ன அதிசயம்! என்று கேட்டனர்.

(வி-ரை.) கடிது அணைந்து - அடியார் அடைந்ததனைக் கேட்டவுடன் விரைந்து வந்தணைந்தமை அன்பின் உறைப்பு.

கழல் பணிய - திருவேடத்தைச் சிவனெனவே கண்டு வழிபடும் தன்மை குறித்தது. "நேய மலிந்தவர் வேடமும்...அரனெனத் தொழுமே" (போதம் - 12 சூத்). "வடிவுடையீர்!" - என்றதன் கருத்துக் காண்க. ஆளுடைய பிள்ளையாரும் "தொண்டர் திருவேட நேரே தோன்றியதென்று தொழு" தனர் (திருஞான - புரா - 21) என்பதும் ஈண்டுக் கருதுக. 1405-ல் உரைத்தவையும் பார்க்க.

அவர்தம் அடிபணியாமுன் பணியும் அரசு - திருவேடங் கண்டு அடியவரைப் பணிய அப்பூதியார் முற்பட்டனர்; அடியார்பால் அவரினும் அன்பு மிக்க அரசுகள் அவரைப் பணிய அதனினும் விரைந்தனர் என்க. ஒருவரை ஒருவர் ஒரே காலத்தில் பணிதல். இவ்வாறு பணிதலில் ஒருவரை ஒருவர் முற்படுதல் அடிமைத் திறத்தின்பால் வைத்த அன்பின் உறைப்பு. "முன் பிறைஞ்சின ரியரவரென் றறியா முறைமையால்" (244) என்றது காண்க. "தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம்" என்பது நாயனாரது மனநிலை. அப்பூதியாரது அப்பின்றிறம் அவரது வேடத்தாலும் அறியக் கிடப்ப தொன்றென்க.

முடிவில் தவஞ் செய்தேன்கொல்...மனை வந்தருளிற்று - மனையில் தாமே வந்தருளுதற்குஎல்லையில்லாத தவம் முன்பு செய்திருந்தாலன்றிக் கூடாது; அவ்வாறு தவஞ் செய்ததை யானறியேன்; ஆயினும் இப்பேறு கைகூடப் பெற்றமையால் யான் தவஞ் செய்தேனாகல் வேண்டும் என ஐயப்பாடும், அனுமானத்தாற்போந்த துணிபும் உடன் கூறுவார் செய்தேன் கொல்? என்று வினாவரையாற் கூறினார். தாம் அவரைக் காணும் தன்மையானன்றி உணர்வு வகையாக தியானப் பொருளாகக் கொண்டு அவரது திருநாமத்தையே சிந்தித்திருந்ததுவே அறியாமலே அவர் திருவாக்கிற் போந்தது. முடிவில் தவம் என்றமையால் இனிச் சிவன் கழல் சேரும் நிலையினைப் பெறும் வரையில் அத்தவமே செய்து வருதலும் குறிப்பு.