இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1793. (வி-ரை.) ஒருகுன்ற...வருகின்றோம் - "என் மனையில் வந்தருளிற்று என்? " என்று அப்பூதியார் கூறியதனையே தொடர்ந்து கொண்டு வாகீசர் தம்மை இன்னவர் என்று அறியாமலேயே தாம் வந்த வரலாற்றையும், மனைக்கடைத் தலையிற் சார்ந்ததன் கருத்தினையும் அறிவிக்கின்றபடி. குன்ற வில்லாரைத் திருப்பழனத்துள் இறைஞ்சி - பல தளிகளிலும் வேறு எங்கும் கயிலாயநாதனையே காணலாமே என்று நாயனார் தாம் அருளியவாறே பல தலங்களிலும் சென்று சிவபெருமானையே எங்கும் கண்டிறைஞ்சும் தன்மையாற் கூறினார். "ஆலயந் தானு மரனெனத் தொழுமே" (போதம் - 12. சூத்.) என்றபடி நாயனார் சீவன்முத்த நிலையிற் சரித்தனர் என்க. வருகின்றோம் - பன்மை இறைபணி நிற்றலின் பெருமை குறித்தது. வழிக் கரையில் - வரும் வழியில் ஓரத்தில். "அளவில்சனஞ் செலவொழியா வழிக்கரையில்" (1787). நீர் வைத்த - தண்ணீர்ப்பந்தர் என்க. வைத்த - வைப்பித்த என்க; பிறவினை விகுதி தொக்கது. நீர் - "அமுதமுமாம் தண்ணீரும்" என்றபடி தக்கவாறு அமைந்த நீர் என்ற குறிப்புப் பொருளும் தந்து நின்றது. வாய்ந்த வளம் - வாய்ப்பாவதுமுன் 1787-இல் உரைத்த நலங்களின் தொகுதி. நிழல் தண்ணீர்ப்பந்தர் - தண்ணீர்ப் பந்தருக்கு நீரினைப் போலவே குளிர் நிழலும் இன்றியமையாது வேண்டப்படுவதென்பது. முன் 1787-இல் பந்தர், அமைப்பித்தவர் கொண்ட மனப்பான்மையின் சார்புபற்றிக் கூறினார்; இங்கு அதனை நுகர்ந்தவர்களின் சார்புபற்றிக் கூறினார். கண்டு - கேட்டு - எண்ணும்மைகள் தொக்கன. கண்டதனைக்கொண்டு, காணாதனவும் கேட்டனவுமாகிய பிறஅறங்களின் தன்மையினையும் தெரிந்து என்றபடி. அத்தகைமை புரிகின்ற அறம் பிற - அது போலவே அரசுகளின் பெயராக செய்யப்பட்டனவும், உரியவாறு அவ்வவற்றிற்கு வாய்ந்த வளந்தருகின்றனவும் ஆகிய பிற அறங்கள். அவை, "சாலை குளம்-கா - (1789) என்று முன் அங்கு அறிந்தார்பாற் கேட்டவை; கேட்டவையும், கண்ட அத்தகையனவே என்பது காண்டலும் கருதலுமாகிய இரண்டு அளவைகளாலும் அறிந்தன என்பார் கண்டு கேட்டு என இருவகையும் கூறினார். புரிகின்ற - இடைவிடாது மேற்கொண்டு - விரும்பிச் - செய்கின்ற. அணைந்தோம் - வழியே சென்றுவிடாது, இந்த உமது மனைக்கடையின்கண் என்ற இசையெச்சம். புகல்வார் - மேலும் புகல்வாராகி; முற்றெச்சம், புகல்வார் - மொழிந்தார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. இதனால் "வடிவுடையீர் - என் மனையில் வந்தருளிற்று" என்ற பகுதிக்கு விடையாகத் தாம் வந்த வரலாற்றைக் கூறினார். இனி, "என்?" என்றதற்கு விடைபோலத் தாம் வந்த கருத்தினை கேட்டு மேல்வரும் பாட்டாற்கூறுகின்றார். 1794. (வி-ரை.) அடியார்க்கு - அடியார்க்குதவும் பொருட்டு. "அளவில் சனஞ் செலவொழியா வழிக்கரையில்" (1787) அமைத்தபடியால் இது எல்லாருக் |