மங்கை...தகைத்தால் - திருச்சாத்தமங்கையின் அமைவது என்று உலகமெல்லாம் புகழ்கின்ற தகைமையுடையது. (வி-ரை.) பொருட்டு - கொட்டை. பொருகயல் - ஒன்றினோ டொன்று பிறழ்ந்து தம்மிற் போர் செய்வனபோல உள்ள. காய்த்த செந்நெலின் - செந்நெல் முதிர்ந்து விளைந்த பயிர். நெல் - நெற் பயிருக்கு வந்தது. காடு - மிகுதி யுணர்த்தியதன்றியும், மக்கள் கைவினைச் செயற்கையாலன்றித் தன்னியல்பின் வளைந்து தலைதடுமாறிக் கிடக்கும் நிலைபோன்ற தன்மையும் குறித்தது. wild paddy என்பர் நவீனர். காடு - காடு போன்றதனைக் காடென்ற துபசாரம். "கமுகின் காடு" (832); காவிரி நாடு. சோழநாட்டிலே : காவிரி பாயும் நாடு, என்ற சிறப்பினாற் சோழநாட்டின் பெயராய் வழங்குவதாயிற்று. மங்கலம் வாய்ந்த - என்க. மங்கலங்கள் எல்லாம் தாம் தங்குதற்கு வாய்ப்புடைய தக்க இடம் இதுவே யென்று கொண்ட என்பது குறிப்பு. மங்கலமர்வது - சிவத்தன்மைச் சிறப்பு. இது மேல் 1830 - 1832 பாட்டுக்களில் விரிக்கப் படுவது. "நீதித்திகழ்" என்ற திருவந்தாதியினை விரித்தபடி; பொருகயல் - "சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய" (பிள் - தேவா - குறிஞ்சி - இடைச்சுரம் - 2); பொருதல் - தாக்கி எழுவன போன்று துள்ளித் துள்ளி மேல எழுதல். பொருதல் போன்றதை பொரும் என்ற துபசாரம். உகளுதல் - துள்ளிப் புரளுதல். பூத்த பங்கயம் - என்று மங்கல மொழிகொண்டு தொடங்கிய, வாய்த்த மங்கலம் என்று முடித்துக் காட்டியது ஆளுடைய பிள்ளையாரது திருமண மங்கலத்துடன் சிவமங்கலமாகிய முழு மங்கலத்தோடு முடிவுறும் இச்சரித வரலாற்றுக் குறிப்புத் தருவது. தாமரை, மறையவர்களுக்குரிய அடையாள மாலையாவதும் குறிப்பு. பங்கயங்கள் நெல்லின் இடையில் தோன்றுதல் மறையவர் வளர்க்கும் செந்தீவேள்வித் தேற்றம் பெறும் குறிப்பு மேல் நமிநந்தியார் புராணத்தினுள் (1868) கூறுவதும் கருதுக. இத்தன்மை பற்றித் திருநாளைப் போவார் புராணத்தினுள் (1024ன் கீழ்) உரைத்தவையும் பார்க்க. சாத்தமங்கை - உலகம் தூய்மை பெறப் பூப்போலச் சாத்திக் கொள்ளும் மங்கைபோல விளங்கும் ஊர் என்பது பொருளென்பர். காவிரி நாட்டில் - மறையவர் முதற்பதி வனப்புச் சாத்தமங்கையில் அமைவது என்று புகழ்வுறும் தகைத்து என்று கூட்டுக; இவ்வாறன்றிக் கிடக்கை முறைபற்றிக், காவிரி நாட்டுச் சாத்தமங்கை என்று உலகம் புகழுந் தன்மையுடையது மங்கல மறையவர் முதற்பதியாகிய சிறப்பு; எனப் புகழ் வுறுதற்குக் காரணம் மறையவர் முதற்பதி வனப்பு என்க. என்று உரைத்தலுமாம். இனி இவ்விரண்டு வகையானுமன்றி நாட்டில் வனப்பு வாய்ந்த முதற்பதி சாத்தமங்கை என்று புகழ்வுறும் தகைத்து என்று கூட்டியுரைப்பர் இராமநாதச் செட்டியார். மறைப்பயனாகிய திருவைந்தெழுத்தினை யன்புசெய்தும் அத்திருவைந்தினையே கேட்கும் திருவடி சேர்ந்த இந்நாயனாரது புராண முழுமையும் ஐந்து சீருடைய கலிநிலைத்துறை யொன்றினாலே பெற யாத்த கவித்திறமும் தகுதியும் சிந்திக்க. பொருகயல் உறங்கும் - உலகெலா நிகழ்வுறும் - வாழ்பதி - என்பனவும் பாடங்கள். 1 |