1829. | நன்மை சாலுமப் பதியிடை நறுநுதன மடவார் மென்ம லர்த்தடம் படியமற் றவருடன் விரவி அன்ன முன்றுறை யாடுவ; பாடுவ சாமம் பன்ம றைக்கிடை யுடன்பயிற் றுவபல பூவை. |
2 (இ-ள்.) நன்மை சாலும் அப்பதியிடை - நலங்கள் பொருந்திய அந்தப்பதியில்; நறுநுதல்...படிய - நறிய நெற்றியினையுடைய பெண்கள் மெலலிய மலர்களையுடைய தடாகத்திற் குளிக்க; மற்று அவருடன்...ஆடுவ - மற்று அவர்களுடன் ஒருங்கே முன் துறையில் அன்னங்கள் தாமும் தோய்ந்து ஆடுவன; பல் மறைக்கிடையுடன் சாமம் பாடுவ பல பூவை - வேதமோதும் சிறுவர்களது பல கூட்டங்களுடனே சாமம் பாடுவனவாகிய பல பூசைகள்; பய்றிறுவ - அவர்களை அவ்வேத பாடங்களைப் பிழை நீங்கிப் பயிலச்செய்வன. (வி-ரை.) நன்மை சாலும் - சாலுதல் -மிகுதியும் பொருந்துதல். நன்மை - சிவ சாதனம். நறுநுதல் - நறுமை - மணம் - "தேங்கமழ் திருநுதல்" (முருகு) : நுதலின் மணமாவது அதனில் துட்டும் திலகம் சாந்து முதலியவற்றாலாவது, இயற்கை மணமுமாம். மற்று அவருடன் - மற்று - தம் இனமல்லாவிடினும் அவருடன் என்று வினை மாற்றின்கண் வந்தது. விரவி - கலந்து. விரவுதல் பழக்கத்தாலும், இனம் போலும் என்றணை தலாலும், தமக்கு ஒரு தீமையும் செய்யார் என்ற உறுதியாலுமாம். முன் துறை - துறைமுன் - துறையில் முன்னிடம்; மடவார் நீரினுள் சிறிது ஆழத்தினுட் சென்று படிய, அன்னங்கள் அவ்வாறு செல்ல மாட்டாமையின் நீர்த்துறையின் ஆழமில்லாத முன் துறையில் ஆடுவ என்க. ஆடுதல் - நீராடுதல் - நீரினுள் தோய்தல். நடிப்பன என்றலுமாம். முன்துறை - இல் முன் என்பது முன்றில் என்று வருவது போல வந்தது. சாமம் பாடுவ - பலபூவை என்க. பாடுவ பூவை - பாடுவனவாகிய பூவைகள்; சாமம் - வேதப் பொதுமை குறித்தது. சாமவேதம் என்றலுமாம். ஏழு சுரங்களும் பொருந்தப் பயிலப்படும் சிறப்பு அதற்குரியது. கிடை - மறை பயிலும் சிறுவர் கூட்டம்; பயிலுமிடமுமாம். "ஓது கிடைசூழ் சிறுவர்களும்" (1208); 81 - 1063 - 1222 முதலியவை பாாக்க. போதில் வந்து பயின்று தங்கிக் கிடத்தலின் கிடை எனப்படும். கிடையுடன் சாமம் பாடுவனவாகிய பூவை பயிற்றுவ - என்றது, கிடைகள் நகர்ப்புறத்தில் சோலை சூழ்ந்த இடங்களில் அமைவன; அங்குப் பூவைகள் தங்கும்; அவை பெரியோர் பயிலும் மறைகளைக் கேட்டுப் பழகியிருத்தலால், சிறார்பயின்று ஓதும்போதும் பிழைகண்ட விடத்துத் தாம் முன் கேட்டபடி பிழையின்றிப் பாடுதலால் சிறார் திருந்துவர்; இதனை அவை சிறாரைப் பயிற்றுவதாக உபசரித்தார். "பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசை கேட்டு, வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலை யாமே" (மேகராகக் குறிஞ்சி); என்றும், "பெரிதிலங் கும்மறை கிளைஞரோ தப்பிழை கேட்டலாற், கருதுகிள்ளைக்குலந் தெரிந்துதீர்க் குங்கடற் காழியே" (5 - செவ்வழி) என்றும் வரும் ஆளுடைய பிள்ளையார் தேவாரக் கருத்துக்கள் இங்குக் கருதற்பாலன. இதற்கு இவ்வாறன்றிப் பூவைகள் தம் கிளைகளுக்குப் பயிற்றுவிக்கின்றன. என்பர் ஆறுமுகத் தம்பிரானார்; பயிற்றுவ என்பதனைத் தன்வினையாகக் கொண்டு பூவை பயில்வன என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை. பல - மறைப் பகுதி பலவற்றை என்றலுமாம். |