பக்கம் எண் :


1026திருத்தொண்டர் புராணம்

 

அத்தலத்தில் வளர்த்துள்ளார்கள்; நீந்து...தீயை - பிறவிக் கடலினின்றும் நீந்தத் துணைசெய்கின்ற நல்ல அறங்களின் தன்மையில் வளர்க்கும் அந்தத்தீயினை; வாய்ந்த...மடவார் - பொருந்திய கற்புத்தீயுடன் கூட்டி நான்கு தீயாகப் பெண்கள் வளர்ப்பார்கள்.

(வி-ரை.) ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு - ஆய்ந்த -ஆராய்ந்து துணிந்த; நீறு - திருநீற் றன்பின் வழுவாத சிவன் அடிமைத்திறம். "இழைத்த வன்பினிலிறை திருநீற்றுமெய் யடிமை பிழைத்தி லோமெனில்" (544) என்றும், "பரவிய திருநீற்றன்பு" (488) என்றும் கூறியனவும், பிறவும் பார்க்க. மெய்ப்பொருணாயனார், ஏனாதிநாத நாயனார் சரிதங்களின் உள்ளுறைகளும் காண்க.

வளர்க்கும் அக்காப்பில் - நீறே பொருள் என்று விடாது பற்றும் அன்பும், அடிமைத் திறமுமே காவலாக அக்காவலுக்குள். தீ வளர்த்தல் - சிவ வழிபாடு : சிவபூசை விதிகளுள், பூசிக்கும் இடத்தை இடையூறு வாராமற் காக்க மந்திர மயமாகிய மதிலும் அகழியும் காவலாக அமைப்பதொரு அங்கமரம் என்பது ஆகம விதி; 1164 பார்க்க. இங்கு மறையவர்களும் மடவாரும் வளர்க்கும் சிவமாகிய முத்தீயினுக்குக் காவலாக வகுத்தது. திருநீற்றுக்காப்பு என்பதாம். காவல்களுட் சிறந்தது திருநீற்றுக் காப்பாகும். "மந்திர மாவது நீறு" என்ற தமிழ்மறைத் திருவாக்கும் நீறு காப்பாகும் தன்மை குறித்தது. திருநீற்றுக் காப்பு என்ற வழக்கும் காண்க. "வேறு பல காப்புமிகை யென்றவை விரும்பார், நீறு திரு நெற்றியி னிறுத்திநிறை வித்தார்" (திருஞான - புரா - 43), "இறைவர்திருநீற்றுக் காப்பேந்தி முன்சென் றீந்த தாயார் சாத்தி" (மேற்படி 262); திருநீற்றையே மெய்ப்பொருளாகத் துணிந்து அதனைக் காப்பாகக் கொள்ளாதார் எரிவளர்த்தல் - வேள்வி செய்தல் முதலியவை முதல்வராகிய சிவபெருமானையடையத் துணை செய்யாது பயனின்றிக் கழியும் என்பது குறிப்பு. திருநுறு இரட்சை என்று போற்றப்படுவதும் காண்க. காப்பில் - காவல் பொருந்திய அந்நகரத்தில் என்றும், அத்திருநீற்றிற் பொருந்திய என்றும் உரைப்பாருமுண்டு.

மூன்று தீ - தட்சிணாக்கினி - காருகபத்தியம் - ஆகவநீயம் என்பன. 1207-ல் உரைத்தவை பார்க்க. இருபிறப்பாளர் வேதியர்; உபநயனச் சடங்கிற்பெறும்பிரமோபதேசத்தினால் இவர்கள் வேறுமொரு பிறப்புப் பெறுகின்றார் என்பது மரபு.

நீந்தும் - நல்லறம் - பிறவிக்கடல் நீந்தத் துணைசெய்யும் நல்ல சிவதன்மம். நீந்துதல் - நீந்துவிக்கும் எனப் பிறவினைப் பொருளில் வந்தது. பிறவிக்கடல் என்பது இசையெச்சம். நல்லறம் - நல்ல சிவதன்மம்; "நல்லசிவ தன்மத்தால்...நானழிய - வல்லதனால்" (களிறு).

வளர்க்கும் அக்காப்பு - ஈண்டு வளர்க்கும் என்றது விடாமற் பிடித்து வழுவாது ஒழுகிக் காக்கும் என்ற பொருளில் வந்தது. வளர்க்கும் அத்தீ - மந்திர வேள்வி வேட்டெரிக்கும் தீ வளர்க்கும் என்றும் பொருள். நாயனாரது சரிதக் குறிப்பும்பட நின்றது.

வளர்ப்பர்கள் மடவார் - தீயை அவியவிடாது பாதுகாத்தல் மனைவியர் கடனாதல்குறிப்பு; மணஞ்செய்வேள்விச் சாலையில் அதற்கு வளர்த்த தீயினை இல்லறத்தில் நாடோறும் காத்து இறுதி நாளில் அதனாலே எரிக்கப்படும்வரை வளர்த்துவருதல் அந்தணர்க்கு விதித்த விதி. "புகைவிடும் வேள்விச் செந்தீ வில்லுடன் கொண்டு போவார்" (திருஞனா - புரா - 1202) என்பது காண்க. இச்சரிதத்தினுள் அம்மையார் வளர்த்த தீ நல்லூர்ப் பெருமணத்துக் கொண்டுபோகப்பட்டு அங்கு எம்பிரானாகிய பெருந்தீயுடன் கூடி முடிந்ததும் காண்க. ஈண்டு வளர்ப்பர்கண் என்றது இரட்டுற மொழிதலால் அவியாது காப்பர்.