என்றும், மூன்றைக் கற்புத் தீயுடன் நான்காகப் பெருக்குவர் என்றும் உரைக்க நின்ற கவிநயம் காண்க. கண் - நினைத்தல் என்று கொண்டு, கண்ணும் - நினைக்கும் மாடவார் என்றலும், கண் - முத்தீ வளர்க்கும் இருபிறப்பாளரின் கண் போன்ற மனைவியார் என்றும் உரைத்தலுமாம். நாயனாரது மனைவியார்க்கு இறைவர் அருளிய சரித வரலாறும் சிறப்பும் குறிப்பாலுணர்த்தப் பட்டன. வாய்ந்த கற்புடன் நான்கென - வாய்ந்த - இயல்பின் வாயக்கப்பெற்ற. முன்னர் "வாய்த்த மங்கல மறையவர்" (1828) என்பதனுடன் ஒப்புநோக்குக. கற்பு - "கற்பு" என்பது தீ எனப்படும். நளன் கதையில் தமயந்தியின் கற்பினால் வேடன் எரிக்கப்பட்ட வரலாறும் அவ்வகையே பிறவும் காண்க. ஆயின் ஈண்டுக் கற்பென்பது கொழுநன் கற்பித்த வழிநிற்றல் என்ற சாதாரண உலகநிலைத் தன்மையேயன்றி மூலமாகிய சிவபெருமான் கற்பித்த வழிநிற்றல் என்ற உயர்ந்த கற்பினையும் குறிப்பித்து நின்றது. இப்புராணத்தினுள் நாயனாருடைய மனைவியாரது வரலாறும், காரைக்காலம்மையார் - மங்கையர்க்கரசியம்மையார் வரலாறுகளும் ஈண்டுச் சிந்திக்கற்பாலன. இருபிறப்பாளர் - மூன்று தீ வளர்த்துளார்; அத் தீயை அவர் மடவார் நான் கென வளர்ப்பர் - என்றது கணவர் தேடும் பொருளைக் குறைவுபடாது காப்பதும் வளர்ப்பதும் இல்லக்கிழத்தியர் கடமைகளுள் ஒன்று என்று இல்லறநிலை விதிக் குறிப்பும்பட நின்றது. இரண்டு மூன்று நான்கு என்று (எறும்) எண்ணலங்காரச் சுவைபடவும் நின்றது காண்க. மடவார் - மடமாவது அறிந்தும் அறியாது போன்றிருத்தல் என்ப. மேற்கொள்ளப்பட்ட மடமைக்குணம். 3 1831. | சீல முய்த்தவத் திருமறை யோர்செழு மூதூர் ஞான மிக்கநான் மறைப்பொருள் விளக்கிய நலத்தார் ஆலம் வைத்தகண் டத்தவர் தொண்டார மன்பர் "நீல நக்கனா" ரென்பவர் நிகழ்ந்துளா ரானார். |
4 (இ-ள்.) சீலம்...மூதூர் - சிறந்த நல்லொழுக்கத்தை வழுவாது செலுத்திய அந்த மறையவர்கள் வாழும் செழிப்புடைய பழைய ஊரில்; ஞாலம்...நலத்தார் - இந்நிலவுலகத்தில் சிறந்த நான்மறைப் பொருளை விளக்கிய நன்மையையுடையவர்; ஆலம்...அன்பர் - விடத்தை வைத்தமிடற்றையுடைய சிவபெருமானுக்குத் தொண்டு பூண்டொழுகும் அன்புடையவர்; "நீலநக்கனார்" என்பவர் - நீலநக்கர் என்று சொல்லப்பெறுவர்; நிகழ்ந்துளார் ஆனார் - உலகம் புகழச் சிறந்து வாழ்த்துவார் ஆயினார். (வி-ரை.) சீலம் - நல்லொழுக்கங்களின் தொகுதி. உய்த்தல் - விடாது நேர் கொண்டு செலுத்துதல். மறையோர் - மூதூர். "மறையோர் விளங்குவது" (1207) என்ற விடத்துரைத்தவை பார்க்க. "மறையவர் முதற்பதி" (1828). மிக்க நான்மறைப் பொருள் ஞாலம் விளக்கிய என்க மிகுதல் - ஏனைய எல்லாவற்றினும் சிறப்புடையதாதல். நான்மறைப் பொருள் - "ஆய்ந்த சொல் பொருள் நீறு" (1830) என்று முன்னும், "வேத வுள்ளுறை யாவன" (1835) என்று பின்னும் வைத்து விளக்குதல் காண்க. ஞாலம் விளக்கிய - உலகத்தினை விளங்கச் செய்த. விளக்குதல் - தமது ஒழுக்கத்தினால் உலகறியச் செய்தல். |