பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1031

 

 

தூயதொண்டனார் தூய என்பது பின் சரிதவிளைவினுள், மனைவியார் இறைவரது திருமேனியில் வாய் நீர்பட ஊதியதனை அனுசிதம் என்று அவரை நீத்த செய்திக் குறிப்புப்பட நின்றது.

அயவந்தி அமர்ந்த - அயவந்தி கோயிலின் பெயர். அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல்.

நாயனார் - தலைவர். சிவபெருமான் ஒருவரே நாயனார்வர். "அழகிது நாயனீரே" என்ற கண்ணப்பர் புராணமும் பிறவும் காண்க. அத்தன்மையே தாமும் பெற்றுள்ளா ராதலின் அடியார்களும் நாயன்மார்கள் எனப்படுவர். "நாயன்மாரணைந்த போது" (470).

அருச்சனை புரிந்திட - ஈண்டு அருச்சனை என்பது பூசை அங்கமாகிய அர்க்கியம் - பாத்தியம் - மஞ்சனம் நீறு - சாந்து - மாலை - புகை - ஒளி - அமுது - துதி - முதலிய எல்லாவற்றையும் உள்ளடக்கிய பூசை பொதுப் பெயராய் நின்றது. "முறைமையால் வரும் பூசைக்கு முற்றவேண்டுவன, குறைவறக் கொண்டு" (1835) என்று மேற்கூறுதல் காண்க.

நயந்தார் - அன்பினால் நினைந்து மேற்கொண்டனர்.

நாயனாரையு மருச்சனை புரிந்திட - இங்கு நாயனார் செய்ய மேற்கொண்டது சிவதீக்கை பெற்ற அந்தணர்களான மகா சைவர்கள் செய்யத்தக்க ஆன்மார்த்தமாகச் செய்யும் விசேட விதியாகிய சிறப்புப் பூசை. இது பரார்த்த விதியன்று. ஆதலின் "மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர்" என்ற ஆகமத்தொடு முரணாமை காண்க.

7

1835.

உறையு ளாகிய மனைநின்று மொருமையன் புற்ற
முறைமை யால்வரு பூசைக்கு முற்றவேண் டுவன
குறைவ றக்கொண்டு மனைவியார் தம்மொடுங் கூட
இறைவர் கோயில்வந் தெய்தின ரெல்லையி றவத்தோர்.

8

(இ-ள்.) உறையுளாகிய மனை நின்றும் - இருப்பிடமாகிய தமது வீட்டினின்றும்; ஒருமை,,,கொண்டு - ஒன்றித்த அன்பு பொருந்திய முறையினால் வரும் பூசையினைச் செய்வதற்கு வேண்டும் பொருள்களை யெல்லாம் குறைவில்லாமல் அமைத்துக் கொண்டு; மனைவியார் தம்மொடுங்கூட - மனைவியார் தம்முடனே; இறைவர்...தவத்தோர் - சிவபெருமானுடைய திருக்கோயிலின் வந்து எல்லையில்லாத தவத்தோராகிய நாயனார் சேர்ந்தனர்.

(வி-ரை.) உறையுள் ஆகிய மனை - உறையுள் - உறையும் தன்மை பெற்ற பொருள்; இடம் குறித்தது; விளையுள் - கடவுள் என்புழிப்போல. உயிரின் மேம்பாட்டுக்கு வேண்டப்படுவனவாகிய பொருள்கள் எல்லாம் நிலைபெற உறையும் என்பது குறிக்க மனை என்று வாளா கூறாது உறையுளாகிய மனை என்று விசேடித்தார். அப்பொருள்களாவன, "நித்தல் பூசனை புரிந்தெழு நியம"த்துக் (1833)குரிய இடமும், பிற சாதனங்களும், பூசனைக்குரிய நாயகரும், நடுமனை வேதியும், (1857) அதில் "அறாத செந்தீயும்" (1858), அடியவர் கூட்டம் அமுது செய்து உறையும் இடங்களும், அடியவர் கூட்டங்களும் என்றிவை முதலாயின. இவை உறைதற்கு இடம் பெற்று அமைந்தனவே மக்களுக்கு உறையுள் ஆகிய மனைகள்; இவை ஒன்றுக்கும் ஒரு சிறிதும் இடம்பெறாது உடலுக்காவனவும் ஆகாதனவுமே யமையும் இந்நாள் "நாகரிகர்" இடம்பட அமைக்கும் மனைகள் மக்களுக்கு உறையுளாகா மனைகளேயாம் என்பது போதரும். "அவையெல்லாம்