ஊரல்ல; அடவிகாடே" (தேவா); விலங்கு வாழ்வுக்குரியன என்பதாம். நாயனாரது மனையின் தன்மை இச்சரித விளைவுகள் பற்றியும் உணர்ந்துகொள்க. ஒருமை அன்புற்ற பூசை என்றும், முறைமையால் வருபூசை என்றும் தனித்தனி கூட்டுக. ஒருமை யன் பாவது - பூசையினன்றிப் பிறிதொன்றினும் செல்லாதது; "பொது நீக்கித் தனைநினைய வல்லார்க்கு" (தேவா); மாறிமாறி வெவ்வோறு வழிகளால் வேறுவேறு பொருள்களிடத்துச் செல்லும் பொறிபுலன் கரணங்கள், அவ்வாறு செல்லாது ஒரு வழியே பூசையில் கலந்து நிகழ உள்ள அன்பு என்றலுமாம். முறைமையால் வருதலாவது ஆகமங்களுள் விதித்த முறையில் அமைவதும், முன் செய்தவத்தில் ஒருவர்க்கு முறையில் வந்து கிடைப்பதும் ஆம். முற்ற வேண்டுவன - பூசை முற்றுவிக்கச் சாந்தம் - மலர் முதலிய சாதனங்கள் யாவும்; குறைவறக் கொண்டு - சிறு முயற்சியாற் கிடைப்பனவற்றை மட்டும் கொண்டு, கிடையாதவற்றை அன்பினால் நிரப்பி என்றமையாது, எல்லாவற்றையும் பொருளானும் அளவானும் சிறிதும் குறைபாடின்றி அமைத்து, கொண்டு - எடுத்துக்கொண்டு, "தேடாதன அன்பினி னிரப்பி" (1242) என்று சண்டீச நாயனார் புராணத்துட் கூறுவது ஒரு விதிதான்; ஆனால் அது பூசைக்குரியனவாய் விதித்த சாதனங்கள் கிடையாதபோது அதுபற்றிப் பூசையை விட்டுவிடாது கிடைத்தனவற்றைக் கொண்டு ஏனையவற்றை அன்பினா னிரப்பிச் செய்தல் வேண்டுமென்னும் கருத்துக்கொண்டது. "போதும் பெறாவிடிற் பச்சிலை யுண்டு புனலுண்டெங்கும், ஏதும் பெறாவிடி னெஞ்சுண்டு" என்ற பட்டினத்துச் சுவாமிகள் திருவாக்குக் காண்க. மனைவியார் தாம்மொடும் கூட - இல்லறத்தில் வாழ்வோர் உலக தர்மங்களைப் போலவே சிவ தருமங்களையும் மனைவியுடன் கூடியே செய்தல்வேண்டும். மனைவியுடன் கூடி நடத்தும் இல்லற தருமங்களின் கருத்தும் பயனும் ஆவது சிவதரு மங்கள் செய்து வீட்டின்பம் பெறுவதேயாம். இப்புராணத்தினுள் இல்லறத்திலிருந்து முத்தியடைந்த சிறுத்தொண்ட நாயனார், திருநீலகண்ட நாயனார், இளையான்குடிமாற நாயனார், இயற்பகை நாயனார் முதலிய எல்லா நாயன்மார்களின் சரிதத்தாலும் இவ்வுண்மை பெறப்படுதல் காண்க. மனைவியார்க்கு இத்தருமங்களில் ஒத்த பங்குடைமையும் கருதுக. இவ்வாறன்றி நாயகன் ஒரு வழியும் மனைவி மற்றொரு வழியுமாகி, ஒருவர் செய்ய நேரும் சிறு வழிபாட்டிலும் மற்றவர் கூடாமலும் பிணங்கியும் சிவப்பணியில் மனஞ் சேராது இந்நாளில் நடைபெறும் இல்வாழ்க்கைகள் சிறிதும் பயன்பெறாது ஒழிவன என்க. மனைவியார் தம்மொடும் கூட - தம்மொடும் என்றலே அமையுமானும் கூட என்றது சரித நிகழ்ச்சியில் அன்றிரவு "உன்னை யானினித் துறந்தன னீங்கு" (1842) என்று நீக்கப்பட்டுப், பின் மறுநாள் "மாத ராரையுங் கொண்டு" (1847) கூடி நிகழவுள்ள வரலாற்றுக் குறிப்புப்பெற வைத்ததாம். இறைவர் கோயில் - "அயவந்தி" என்ற கோயில். எல்லையில் தவத்தோர் - குரு, இலிங்கம், சங்கமம் என்று சிவம் விளக்கப்பெறும் மூன்றிடங்களுள் ஒன்றினிடத்துச் செய்யும் வழிபாடே சிவப்பேறு பெறுவிக்கவல்லது. இந்நாயனார் இம்மூன்றிடங்களினும் வழிபாடு செய்யும் தவமுடையராதலும், அதன் பயனாக ஆளுடைய பிள்ளையாரது "திருக் கல்லியாணத்தினி லுடனே - நம்பர்தாள் சேர்ந்தார்" (1864) ஆதலும் குறிக்க எல்லையில் தவம் என்றார். 8 |