1836. | 1அணைய வந்துபுக் கயவந்தி மேவிய வமுதின் துணைம லர்க்கழல் தொழுதுபூ சனைசெயத் தொடங்கி இணைய நின்றங்கு வேண்டுவ மனைவியா ரேந்த உணர்வின் மிக்கவ ருயர்ந்தவர்ச் சனைமுறை யுய்த்தார். |
9 (இ-ள்.) அணைய வந்துபுக்கு - திருக்கோயிலினுள்ளே அணையும்படி வந்து உட்புகுந்து; அயவந்தி...தொடங்கி - அயவந்தி யென்னும் அக்கோயிலின்கண் விளங்க வெழுந்தருளிய அமுதராகிய சிவபெருமானின் துணைமலர்க்கழல்களை வணங்கிப் பூசை செய்யத் தொடங்கி; இணைய நின்று...ஏந்த - தம்முடனே இணையாக நின்றுகொண்டு அவ்விடத்து வேண்டுவனவற்றை யெல்லாம் மனைவியார் எடுத்த எந்த; உணர்வின்...உய்த்தார் - உணர்வின் மிக்க அவர் உயர்வுடைய பூசனை முறைகளை யெல்லாம் செய்தனர். (வி-ரை.) அணைய வந்து புக்கு - அணைய - திருக்கோயிலின் உள்ளே இறைவர் எழுந்தருளியுள்ள இடத்தை அணையும்படி; வந்து - விதிமுறைப்படி வலம் செய்து வணங்கி வந்து; புக்கு - உள்ளே உரிய இடத்தினிற் புகுந்து. அமுது - இறத்தலையும் பிறத்தலையும் போக்குதலின் அமுது என்றார். அமிருதம் என்னுஞ் சொற்கு இறைவனே செம்பொருள். ஏனைய பொருட்கு உபசாரம். மிருதம் - அழிவு; அஃதில்லாதவன் - அழிவின்மையைத் தருபவன் - என்ற பொருள் சிவனுக்கே பொருந்துவதாம். தத்ப்ரஹ்ம ததோவாம்ருத முச்யதே - அது பிரமம் அதுவே சிவன் என்று கூறப்படுகின்றது என்பது முதலாக உபநிடதங்கள் கூறும். துணைமலர்க்கழல் - துணைக்கழல் - மலர்க்கழல் என்று தனித்தனி கூட்டுக. துணைக்கழல் - இரண்டு திருவடிகள். அடியவர்க்கு உற்ற துணையாகிய கழல் என்றலும் குறிப்பு. தொழுது - இது பூசை தொடங்குமுன் செய்யவேண்டிய வணக்க விதி. "சுவாமி! அடியேனது பூசையினுள் விரும்பி வீற்றிருந்து அடியேன் செய்யும் பூசையினை யேற்றருளவேண்டும்" என்று வேண்டிக்கொண்டு பூசை தொடங்க வேண்டும் என்னும் ஆகமவிதி குறித்தது. இணைய...ஏந்த இணைய நிற்றல் - பூசைத்துணையாய் உடன் நிற்றல். நின்று - கீழ் அமராது நின்றுகொண்டு. அங்கு வேண்டுவ - பூசையில் அவ்வப்பகுதிக்கு உரிய பொருள்களை அவ்வவ்விடத்திலும் அவ்வக் காலத்திலும் ஏந்த - எடுத்த ஏந்தி நிற்க; கொடுத்தல் என்பதன்றி, ஏந்துதல் மரபு. உணர்வின் மிக்கவர் - உணர்வின் மிகுதலாவது சிவபூசையே உறுதிப் பொருளாம் என்று உணர்ந்து அவ்வுணர்ச்சியில் உறைத்து நிற்றல். உயர்ந்த அர்ச்சனை முறை - உயர்ந்த - பிற எல்லாவற்றினும் உயர்ந்த! இயற்கை யடைமொழி; இவ்வியல்பெல்லாம் முன்னர்த் திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணத்தும் சண்டீசர் புராணத்தும் விரித்து உரைக்ப்பட்டன. ஆண்டுக் கண்டுகொள்க. உய்த்தல் - எவ்வாற்றானும் குறைபாடின்றிக் கொண்டு செலுத்துதல். 9 1837. | நீடு பூசனை நிரம்பியு மன்பினா னிரம்பார், மாடு சூழ்புடை வலங்கொண்டு, வணங்கிமுன், வழுத்தித் தேடு மாமறபை் பொருளினைத் தெளிவுற நோக்கி, நாடு மஞ்செழுத் துணர்வுற விருந்துமுன் னவின்றார். |
10 |