(இ-ள்.) நீடு...நிரம்பார் - நீடும பூசனை முற்றுப்பெற்றதாயினும் அன்பினால் நிரம்பாதவராய்; மாடு...வலங்கொண்டு-பரமனார் எழுந்தருளிய உள்ளிடத்தைச் சூழ்ந்த பிரகாரத்தை வலமாக விதிப்படி சுற்றிவந்து; வணங்கி நிலமுறக் கீழே விழுந்து வணங்கி யெழுந்து; முன்வழுத்தி - திருமுன்பு நின்று துதித்து; தேடு...நோக்கி - பெரிய மறைகள் தேடுகின்ற பொருளைத் தெளியும்படி கூர்ந்து அழுந்திய பார்வை செய்து; நாடும் அஞ்செழுத்து உணர்வுற - நாடுகின்ற திருவைந்தெழுத்து உணர்ச்சியிற் பொருந்த; இருந்து முன் நவின்றார் - திருமுன்பு இருந்து விதிப்படி எண்ணினார். (வி-ரை.) நீடு பூசனை நிரம்பியும் - நீடு பூசனை - அன்பினால் முற்றச் செய்து நீடிய பூசை. நீடுதல் - எவ்வகையாலும் குறைபாடின்றி நிறைதல். இடையறாது என்றும் நீடும் என்றலுமாம். "மாறி லாதவிப் பூசை" (1146) "ஏத நீங்கிய பூசை" (1144) முதலியவை காண்க. நீடுபூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் பூசனை - ஆகமங்களின் விதித்த அருச்சனை விதிமுறைகள் யாவும் அன்பினோடு நிறைவாக இயற்றிய பின்னும் அன்பினால் நிரம்பாதவராய்; மனம் அமைதி பெறாதவராய். மாடுசூழ்புடை - மாடு - இறைவர் எழுந்தருளிய இடத்தின் பக்கம். சூழ்புடை அதனைச் சூழ்ந்த உட்பிரகாரத்தின்கண். ஏழனுருபு தொக்கது. வணங்கி - கீழ்வீழ்ந்தெழுந்து நின்று விதிப்படி மூன்று முறை, ஐந்து முறை முதலாக வீழ்ந்து வணங்குதல் குறித்தது. முன் துதித்து - திருமுன்பு நின்று தோத்திரித்து. தேடு மாமறைப் பொருளைத் தெளிவுற நோக்கி - தேடும் பொருள் - பொருமறை தேடும் பொருள் என்பது உலகமாயினான், உலகங் கடந்து நின்றான் என்று பல முறையாலும் பரப்பிரமத்தின் தன்மைகளைப் பேசுதல் குறித்தது. "தனி முதலாம் பரன் என்று பன்முறையாற் றுணிந்த மறைமொழி" (789) "அருமறைப் பயனாகிய வுருத்திரம்" (1037) என்ற விடத்துரைத்தவை பார்க்க. தெளிவுற நோக்குதலாவது பிற ஒன்றும் தோன்றாது அப்பொருளே கருத்தில் உரு வெளிப்படும்படி அழுந்தி யறிதல்; "உயிரா வணமிருந்து.... உற்றுநோக்கி"; (தேவா). நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் - நாடும் - என்றதனை "எவ்வெவ் கோட்படு பொருளும்" என்ற பாட்டினால் எமது மாதவச் சிவஞான முனிவர் காஞ்சிப்புராணத்தினுள் விளக்கினமை காண்க. சமயாசாரியர்கள் அருளிய ஸ்ரீ பஞ்சாக்கரத் திருப்பதிகங்கள் நான்கினுள்ளும் காண்க. "அருளும் மெய்யஞ்செழுத்து" (1394) என்று முன் விதந்தோதியதும் கருதுக. உணர்வு உற - பொருள் தமது உணர்வில் முற்றும் பொருந்த. முன் இருந்து - என்க. திருமுன்பு விதத்தி ஆசனநிலையில் அமர்ந்து. இங்கு இருந்து என்றதனால் முன் சொன்ன வலங்கொள்ளு தலும் வணங்கு தலும் வழுத்து தலும் நோக்கு தலும் என்றவை இவ்வாறன்றி நடத்தல், கிடத்தல், நிற்றல் என்ற நிலைகளில் விதிப்படி இயற்றப்பட்டன என்பதும் பெறப்படும். நவின்றார் - தவிலுதல் கணித்தல் "கணிக்கின்ற" (1838) என்று மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க. "உருவெணத் தவமாமே" (தேவா); இது வெளிப்பட வாக்கினாற் சொல்லுதல் அன்று; மத்திமை வாக்கினாலே பிறர் கேட்காத வண்ணம் சொல்லுதல். இங்குக் கூறிய ஐந்தும் பூசைக்கங்கமல்லாவிடினும் பூசை நிரம்பியபின் இறுதியில் இயன்றவளவு செய்யத்தக்கன என்பது விதி. வாசிகம், காயிகம், உபாஞ்சு என்பவற்றுள் இஃது உபாஞ்சு ஆகும்; இவற்றை முறையே பிரதக்கிணம், நமக்காரம், தோத்திரம், தியானம், செபம் என்பர். "நான்செய்பூசை செபந்தபந்தியான ஞான, மெல்லா முடிந்தபின் கொல்லுகண்டா யிறைவா!" (பட்டினத்தார்). 10 |