யைக் காட்டினார் என்க. "புண்ணியக் கங்கை நீரிற் புனிதமாந் திருவாய் நீரில்" (671) என்றது இங்கு நினைவு கூர்தற்பாலது. மேனியைக்காட்டி - முன்னர் நாயனார் அநுசிதம் நிகழ்ந்ததாகத் தாம் கண்டதும் மேனிதான்; இப்போது காட்டியதும் அத்திருமேனிதான்; ஆயின் முன்னர்க்கண்டது அன்பினை மனத்தினுட் கொள்ளாது தாம் கண்டது. இஃது அவ்வாறன்றி அன்பின் திறங் காணுமாறு இறைவர் காட்டக்கண்டது என்பார் காட்டி என்றார். "காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே; காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" (தேவா). "உனக்கவன்றன் செயல் காட்ட நாளைநீ யொளித்திருந்தால், எனக்கவன்றன் பரிவிருக்கும் பரிசெல்லாங் காண்கின்றாய்" (807) என்ற கருத்தை இங்கு வைத்துக் காண்க. உள்ளம் வைத்து - (கொப்புள் கொள்ளாது தடுக்கும் பதைப்புடன்) அன்பு கொண்டு என்ற பொருளில் வந்தது. மனைவியார் உள்ளம் வைத்து என்க. முன் துமிந்த பால் ஒழிய - முன். "முன் துமிப்பவர்" (1839); "முன் அணைந்து" (1842) என்றவை பார்க்க. பால் - பக்கம். ஒழிய - தவிர - நீங்க. இப்புறம் சிலம்பியின் கொப்புள் கொள்ளும் - என்க. இப்புறம் - துமியாத இப்பக்கம். இப்புறம் - இகரச்சுட்டு மேனியை நாயனார் காண அவர்பக்கம் திருப்பிக்காட்டிய அணிமை குறித்தது. கொள்ளும் தன்மை காண்க - என்றருளியபடி தன்மை காண்க. என்றது இசையெச்சம். நீர்ச்சடையொடு நின்று - என்பதும் பாடம். 18 1846. (வி-ரை.) பெருங் கனவு - பெருமையினைப் புலப்படுக்குங் கனவு; பெருமைதருங் கனவு - பெரியோன் அருளிய கனவு என்றலுமாம். கனவினை நனவெனக் கருதி - கனவுநிலையிற் கண்டது பயன்றருவதனால் நனவு போன்ற தென்பதன்றி, நனவில் நேரே கண்ட காட்சியே யாம் என்று கொண்டு. அஞ்சலி குவித்துடன் விழித்து - அஞ்சலி குவித்து என்னாது குவித்துடன் விழித்து என்றது "கொழுநற் றொழுதெழுவாள்" (குறள்) என்புழிப்போலநின்றது. கனவின் தொடர்பில் அஞ்சலி குவித்துக்கொண்டே விழிப்பு நிலையினை அடைந்தார். முழுதும் தம்மை மறந்து விடாது துயின்றனனராதலானும், களவினை நனவெனக் கருதினாராதலானும் கைகுவித்துக் கொண்டே விழித்தனர் என்பது. குவித்து - உடன் - விழித்து என்றது குவித்தலும் விழித்தலுமாகிய இரண்டு செயல்களும் உடனே நிகழ்ந்தன என்றதாம். ஆடினார் - பாடினார் - துதித்தார் - இவை யாவும் அருள் வெளிப்பாடு கண்டதொரு காரணம்பற்றியே தொடர்ந்து நிகழ்ந்தமையின், வினையெச்சங்களாற்கூறி அழுதார் என்று ஒரு வினை முடிபாக்கி உரைக்காது தனித்தனி வினைமுற்றுகளாற் கூறினார்; நிகழ்ச்சி முறையில் அன்பு மிகுதிப்பாட்டினால் தொடர்பின்றிநிகழும் தனிச்செயல்களாய்த் தோற்றப் பட்டமை குறித்தற்கு. முற்றெச்சங்களாகக்கொள்ளினு மிழுக்கில்லை. பாடுதல். பெருமைகளைக் கீதங்களாகப் பாடுதலும், துதித்தல் - பெருமைகளை எடுத்துக் கூறித் தோத்திரித்தலுங் குறித்தன. "இத்தனையு மெம்பரமோ வைய வையோ வெம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே" (தேவா) என்றபடி மறித்து மறித்து எண்ணுதலால் இவை நிகழ்ந்தன என்றலுமாம். கருணையே போற்றி நின்று அழுதார் - ஏகாரம் தேற்றம். கருணை தம் மனைவியார் செய்த அநுசிதத்தினை உசிதமாகக் கொண்ட திருவருட் பெருமையும்; அத்துணையானே, தவறாக எண்ணிய தம்மையும் பொருளாக்கொண்டு தெருட்டி |