பார் - அன்பு மேம்படும் அடியார்கள் மிகவும் அணைவார்களுக் கெல்லாம் முன்பு போலவே அவ்வவர் வேண்டுவனவற்றை விருப்போடும் முடித்துக் கொடுப்பாராகி; 21 1849. (இ-ள்.) அன்ன...நாளில் - அத்தன்மையில் விரும்பி இனிது ஒழுகி வருகின்ற அந்நாளில்; மன்னு...போற்றிட - நிலைபெற்ற சீகாழிப்பகுதியில் அவதரித்த மறைப்பிள்ளையாராகிய திருஞானசம்பந்த நாயனாருடைய பெருமைகளைப் பலவாறும் சொல்லி உலகம் போற்றிடக் கேட்டு; மற்றவர்...சிறந்தார் - அவருடைய திருவடிகளைச் சென்னியுற வணங்கி அவருடன் கலக்கும் விருப்பமிக்க சிறப்புப் பொருந்தியவரானார். 22 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டுரைக்க நின்றன. 1848. (வி-ரை.) பின்பு - தம்மால் துறக்கப்பட்ட மனைவியாரைத் திருக்கோயிலினின்று அழைத்து உடன்கொண்டு மனையின் மீண்டணைந்த பின்பு. முன்னையிற் பெருகிய மகிழ்ச்சி வந்த எய்த -முன்னையில் முன்னாள்களினும்; பெருகிய மகிழ்ச்சி வந்து எய்துதற்குக்காரணம் சிவனருள் சுரந்துஅம்மையாரது அன்பின் திறத்தை வெளிப்படச் செய்தது. வந்து - எய்த - என்ற குறிப்புமது. பூசனை முன்னைநாள் அயவந்தி நாயனாருக்கு ஆதிரை நாளிற்செய்த பூசனைபோலப், பின்னும் அளவில்லாத பூசைகள். அவர் வேண்டுவ விருப்புடன் முடிப்பார் - இது அடியவர் பூசை - "காதலாலவை யிரண்டுமே செய்கருத்துடையார்" (1832) என்றபடி முன்நியதியாகச் செய்த சிவன் பூசையும் அடியார் பூசையும் முன்னையினும் சிறப்பாகச் செய்தனர் என்க. அன்பு மேம்படும் அடியவர் - அன்பு மேம்படும் - அன்பினால் மேம்பட்ட என்றும் - அன்பின் மேம்படச் செய்யும் என்றும் உரைக்க நின்றது. மிக அணைவார் - முன்னையினும் அதிகமாக. "ஆளு நாயக ரன்ப ரானவ ரளவிலார்" (444). முன்னையினும் மிக அணைவதற்குக் காரணம் இறைவன் திருவருள் நிகழ்ச்சியால் இவர்களது அன்பின் பெருமை உலகறியச் செய்யப்பட்டதாம். முன்போல் - இறைவன் பூசையினை "இன்பு றுந்திறத் தெல்லையில் லாதவாறு இயற்றி" என்ற ஆசிரியர், இங்கு அடியவர் பூசையினை "முன்போல் - முடிப்பார்" என்ற தென்னையோ எனில்; அடியவர் மேன்மேல் மிக அணைந்தாரேனும் அதனால் அன்பினால் வேண்டுவ முடித்துக் கொடுத்தலிற் குறைவுபடாது முன்புபோலவே முடித்தனர் என்பதாம். முடிப்பார் - முடிப்பாராகி; ஒழுகு நாளில் என்றதுடன் கூட்டிமுடிக்க. 21 1849. (வி-ரை.) அமர்தல் - விரும்புதல் - இருத்தல் என்றலுமாம். இனிது ஒழுகுதலாவது மனமுவந்து ஒழுகுதல். மன்னு பூந்தராய் - மன்னுதலாவது பலவூழிகளினும் நீர்ப்பெருக்கில் ஆழ்ந்து படாது மிதந்து பின் நிலைபெற்றிருத்தல். பூந்தராய் - சீகாழியின் 12 திருப்பெயர்களுள் ஆறாவது பெயர். பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையார். பிள்ளையார் என்ற இப்பெயர்க்காரணம் அவர் புராணம் - 69 - ஆவது பாட்டிற் பார்க்க. வையகம் பன்னிப் போற்றிட - என்க. வையகம் - உலகில் உள்ள அறிவுடையோர். வையகம் - வையகத்துள்ள அறிவோரைக் குறித்தது. ஆகுபெயர். "உலகெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே" என்றதனாலும் இது பெறப்படும். "உலக முவப்ப" (முருகு) முதலியவை காண்க. பன்னுதல் - பலவற்றானும் எடுத்துச் சொல்லுதல். போற்றுதல் - துதித்தல். போற்றிட - போற்றியிடலால், அது கேட்டு, அது கேட்டு என்பது இசையெச்சம். |