பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1053

 

(இ-ள்.) பதிகம்...பரவி - திருப்பதிகமாகிய புதிய மலர் மாலையினாலே தமது பெருமானை அணிந்து துதித்து; அதிகம்....அருளி - தமது பெரிய நட்பினைத் திருநீலநக்கருக்குக் கொடுத்தருளி; என்றும் புதிய....பூசுரனார் - பழைய மறைகளை என்றும் புதியதாகவேயுள்ள செந்தமிழினால் மொழிந் தருளிய அந்தணராகிய ஆளுடைய பிள்ளையார்; எதிர்...எழுந்தருளினார் - மேலும் தொழச்செல்லும் தலங்களில் எழுந்தருளுவாராயினார்.

(வி-ரை.) பதிக நாண்மலர் - புதிய செந்தமிழ் என்று இப்பாட்டிற் கூறியதற்கேற்ப நாண்மலர் என்றார். நாண்மலர் - அன்றலர்ந்த புதிய பூ. புதிய பூக்களே பூசைக்குச் சிறப்பா யுரியன என்பது விதி. சென்ற சென்ற தலங்கோடாறும் அவ்வப்போது வெவ்வேறு பதிகங்களாற் போற்றுதலின் பதிக நாண்மலர் என்றார். மலர் - இங்கு மலர்மாலையைக் குறித்தது; ஆகுபெயர்.

கொண்டு - கருவிப் பொருளில் வந்த மூன்றாவதன் சொல்லுருபு. மலர் கொண்டு பரவியதனை இங்குக் கூறுவதனால் முன் பாட்டில் தொடை புனைந்தார் என்பதற்கு மாலை அமைத்தனர் என்று பொருள்கொள்ளப்பட்டது.

மலர்கொண்டு பரவி - பரவி - இங்கு அலங்காரம் செய்யும் வினையாற் - போற்றுதல் என்ற பொருள்தந்து நின்றது.

அதிக நண்பு - நண்பு - இவர் அவர் உள்ளத்திலும் அவர் இவருள்ளத்திலுமாக ஒன்று போல வைத்து ஊன்றியிருக்கும் அன்புரிமையின் தொடர்பு. அதிக நண்பு - பின்னர்த் தனது திருமணத்தில் வேள்விபுரி சடங்குசெய்து உடன்செல்லும் சிறப்புரிமையின் அருட்குறிப்புப் பெற அதிகம் என்றார். அளிததருளி என்ற குறிப்பும் அது. அளித்தல் - அளியோடு வழங்குதல். அளி - கருணை.

எதிர்தொழும் பதிகள் - எதிர் - எதிர்காலத்தில். இடத்தால் எதிர்ப்படும் என்று இடத்தாலும் எதிர்வு குறித்தது. தொழும் - தொழப்படும். செயப்பாட்டுவினை செய்வினையாக வந்தது. பதி - இறைவர் விளக்கம் பெறப் பதிந்து கிடத்தல் குறிப்பு. பிள்ளையாரும் ஏனை எந்தம் பெருமக்களும் சென்று வணங்கிய தலங்களில் சிவபெருமான் பண்டும் இன்றும் என்றும் பதிந்து விளங்குதல் குறிப்பு.

எழுந்தருளினார் - செல்வதற்குப் பயணமாகப் புறப்பட்டனர் என்ற பொருளில் வந்தது.

என்றும் புதிய செந்தமிழ் - தெய்வத் தமிழ்மொழியின்பால் ஆசிரியர்கொண்ட ஆர்வம் விளங்கும் பல இடங்களுட் சிறந்த இடம் இது. "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" (970) என்றவிடத்துரைத்தவை பார்க்க. என்றும் மிகுத்தலும், புதுமை பயத்தலும், செம்மை தருதலும் தமிழ்க்குரிய சிறப்பியல்புகளாக என்றும் புதிய (எக்காலத்திலும்) வழங்குதலன்றி அழிதல், சிதைத்தல், பெருகுதல், சிறுகுதல் முதலிய குறைவுகளின்றிப் புதியதாகவே யிருத்தல், "என்று முளதென்றமிழியம்பி யிசைகொண்டான்" என்றதும் காண்க. புதுமையாவது பழைமை பெற்றன என்று கழிக்கப்படுமாறின்றிப் புதுமைகளைத் தந்துகொண்டிருத்தல். இது மாறாத இளமை என்றும், தெய்வத்தன்மை என்றும் பேசப்படும். "கன்னித் தமிழ்" என்ற வழக்கும் இக்கருத்து. "அகிலாண்டகோடியீன்ற அன்னையே பின்னையுங் கன்னியெனமறை பேசும்" என்று தாயுமானார் அம்மையைப் போற்றுதல் தமிழுக்கும் பொருந்தும். செம்மை - அழியாத பேரின்பம். இவ்வியல்புகள் எல்லாம் பிள்ளையார் திருவாக்குக்களுக்குச் சிறப்பாயுரியன என்பது. பழமறை என்றதனால் அவற்றுள் இவை மிக்கில்லாமையால் அவை தமிழல்லாமையும் கருதப்படும். இவையிரண்டின் பொருள் பற்றியமொழிபற்றியும் பிணங்கிப் பூசலிடுவோர் இக்கருத்துக்களை உன்னிப் பிணக்கொழிவார்களாக.