பக்கம் எண் :


1054திருத்தொண்டர் புராணம்

 

பழமறை....புதியசெந்தமிழ் மொழிந்த - சிவன் தாமே அருளிய மறைமொழியும் பிள்ளையார்பானின்று மொழிந்த அருண்மொழியும் மொழியால் வேறுபடினும் பொருளாலும் பயனாலும் ஒன்றேயாம் என்பது. இவ்வுண்மை "எனதுரை தனதுரையாக" (இலம்பையங்கோட்டூர் - தேவா) என்ற பிள்ளையாரது திருவாக்காலும், அவர்தம் புராணத்தினுள் திருமறைக்காட்டின் நிகழ்ச்சியாலும் பிறவாற்றாலும் நன்கு விளங்கும்.

பூசுரன் -பூ - நிலம். சுரன் - தேவன். "நிலத்தேவர்" (திருஞான - புரா - 1994) மறையவர்களுக்குச் சிறப்புப்பெயர். இங்குக் குலப்பெயரின்றித், தேவர் காணப் பெயருமன்றித், தெய்வத், தன்மையாகிய சிவத்தன்மை குறித்த பெயராய் நின்றது. "சுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன்" (ஆளுடையபிள்ளையார் மும். கோ - 5) என்பது நம்பியாண்டார் நம்பிகளது திருவாக்கு.

புதிய செந்தமிழ்ப் பழமறை மொழிந்த - என்ற இத்தன்மையைபற்றிக் கூறிய குறிப்பு என்னை? எனின், திருநீலநக்கர் "ஞாலமிக்க நான்மறைப் பொருள் விளக்கிய நலத்தார் (1831) என்றபடி பழமறையினால் உலகு விளங்கச் செய்தனர். பிள்ளையாரது திருமணத்தின் வேள்வியை அம்மறை விதியினைக்கொண்டு "நம் பெருமான் பாதமேவு முள்ளத்தாற் செய்"பவர் (திருஞான - புரா - 1239). ஆனால் அததிருமணத்தில் மணமகனாகிய பிள்ளையார் "நம்பனேயுன் பாதமெய்ந் நீழல் சேரும் பருவமீது என்று" பாடி (மேற்படி 1245), அப் பழமறை விதிமணத்தினையே "கல்லூர்ப் பெருமணம் வேண்டா" (தேவா), என, என்றைக்கும்புதிய செந்தமிழினாற் பாடியருளுவார் என்று வரும் பின்னிநிகழ்ச்சியின் அருட்குறிப்பாமென்க.

எதிர்கொளும் பதிகளில் - என்று பாடங்கொள்வாரு முண்டு.

33

1861.

பிள்ளை யரெழுந் தருள,வத் தொண்டர்தாம் பின்பு
தள்ளு மன்புடன் கேண்மையுந் தவிர்ப்பில வெனினும்
வள்ள லார்திரு வருளினை வலியமாட் டாமை
உள்ள மங்குடன் போக்கி, மீண் டொருவகை யிருந்தார்.

34

(இ-ள்.) பிள்ளையார் எழுந்தருள - அவ்வாறு ஆளுடையபிள்ளையார் அங்கு நின்றும் புறப்பட; அத்தொண்டர்தாம் - அத்திருநீலநக்கரும்; பின்பு...எனினும் - ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து செல்லும்படி தம்மை உந்திச் செலுத்தும் அன்பும் கேண்மையும் தவிர்ப்பிவவாய் இருந்தன என்றாலும்; வள்ளலார்...வலிய மாட்டாமை - வள்ளலாராகிய ஆளுடையபிள்ளையாரது அருளிப்பாடாகிய திருவாணையினை வற்புறுத்தி மறுக்கமாட்டாமையால்; உள்ளம்...மீண்டு - தமது உள்ளத்தை அவர் செல்லுமிடங்களில் உடன்செல்லும்படி போக்கித் தாம் மீண்டு; ஒருவகை இருந்தார் - ஒருவாறு தங்கியிருந்தனர்.

(வி-ரை.) எழுந்தருள - அப்பதியை நீங்கிச்செல்ல. அத்தொண்டர் - திருநீலநக்கர். "சிறப்பித்து," "அதிக நண்பினை அளித்தருள"ப்பெற்ற அந்த என் அகரம் முன்னறிசுட்டு, தொண்டர் - பிள்ளையாருக்குத் தொண்டு பூண்டொழுகும் நிலையில் தம்மை வைத்தொழுகியவர் என்பது குறிப்பு. தொண்டராயும் அதிக நண்பு அளிக்கப்பெற்றாராயும் இருந்து தம் தலைவருடனே செல்லாதிருந் தமையை விளக்க எழுந்தது இப்பாட்டு; ஆதலின் இங்குத் தொண்டர் என்ற இத்தன்மையாற் சுட்டினார். தாம் - தாமும் என்ற சிறப்பும்மை தொக்கது.

பின்பு...எனினும் - பின்பு தள்ளும் - பிள்ளையார் பின் செல்லும்படி தள்ளும என்றும், தமது பின்பிருந்து பிடர்பிடித்து உந்தித் தள்ளும் என்றும் உரைக்க நின்றது. தள்ளுதல் - உந்திச் செலுத்துதல்.