மறைச் சிறுவர் - வேதியர் குலத்துதித்த சிறுவர்; அடித்தலம் பொருந்திய உணர்வு - அடியினையே சிந்தித்து நின்ற உணர்ச்சி. "உள்ள மங்குடன் போக்கி மீண்டொருவகை யிருந்தார்" என்று முன்கூறிய நிலையை விளக்கியபடி. பயின்றார் - பயிலுதல் - அத்தன்மையில் தவிராது நிலைபெற்ற ஒழுகுதல். பொருந்திய - பயின்றார் என்று கூட்டிச் செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு, அடித்தலம பொருந்தும் பொருட்டு, அவ்வுணர்வுடன ஒழுகினார் என்றலுமாம். பின்பு சரித விளைவுக் குறிப்பும் காண்க. 1864 பார்க்க. பயின்று நின்ற ஒழுக்கத்தின் விளைவு மேல் வரும் இரண்டு பாட்டுக்களிலும் விரிப்பார். அறிவொடும் பயின்றார் -அறிவொடும் புணர்ந்தார் - என்பனவும் பாடங்கள். 35 1863. | சண்பை யாளியார் தாமெழுந் தருளுமெப் பதியும் நண்பு மேம்பட நாளிடைச் செலவிட்டு நண்ணி வண்பெ ரும்புக ழவருடன் பயின்றுவந் துறைந்தார். திண்பெ ருந்தொண்ட ராகிய திருநீல நக்கர். |
36 (இ-ள்.) சண்பை ஆளியார்...பதியும் - சீகாழி யதிபராகிய ஆளுடையபிளளையார் எழுந்தருளும எவ்வெத் தலங்களின கண்ணும்; நாள் இடைச்செலவிட்டு - இடையிடையில் பலநாள்கள் கழிந்தபின்; நண்புமேம்பட நண்ணி - அன்பு மேலீட்டினால் சென்று சேர்ந்து; திண்...நீலநக்கர் - திண்மையுடைய பெரிய தொண்டராகிய திருநீலநக்கர்; வண்பெரும்...உறைந்தார் - வண்மையுடன் பெரும் புகழுடைய அவருடனே பயின்றிருந்து மீண்டுவந்து அமர்ந்திருந்தனர். 36 (வி-ரை.) சண்பை யாளியார் - ஆளுடைய பிள்ளையார்; சண்பை - சீகாழியின் பன்னிரண்டு திருப்பெயர்களுள் ஒன்பதாவது திருப்பெயர். நாள் இடைச் செலவிட்டு எப்பதியும் - நண்பு மேம்பட நண்ணி என்க - பல நாள்கள் இடைகழிய அவருடன் கூடியிருத்தல் வேண்டுமேன்ற காதல் மிகுதியாக, அது காரணமாக, அவர் எழுந்தருளுவது எத்தலமாயினும் சென்று சேர்ந்தனர் என்பதாம். பயின்று வந்து உறைந்தார் - பிள்ளையார் பல தலங்களிலும் செல்ல, அவரது திருவடித்தலம் பொருந்திய உணர்வொடும் பயின்று சாத்தமங்கையிலிருந்த நீலநக்கர், அவ்வாறே அமைந்து இங்கே யிருந்தனரோ? எனின், அற்றன்று, பிரிந்து சிலநாள்கள் செல்ல அன்புமேலிட்டதனால், பிள்ளையார் சென்றருளியது எப்பதியாயினும் அங்குச் சென்று அவருடன் பயின்றிருப்பதும், பின் மீண்டு இங்கு வந்துறைதலுமா யிவ்வண்ண மிருந்தனர் என்பதாம். உறைதல் - அமர்ந்து வீற்றிருத்தல். பயின்று - உடனுறைந்து; வந்து - மீண்டு வந்து; எப்பதியும் - எத்தலமாயினும்; அங்கு - இவை திருப்புகலூர் முதலாயின. நண்பு மேம்பட -நண்பு - காதல் என்ற பொருட் குறிப்புப்பட வந்தது. மேம்பட - மேம்பட்டதனால் என்று காரணப் பொருளில் வந்த வினையெச்சம். மேம்படும் பொருட்டு என்றுரைப்பினு மமையும். வண் பெரும் புகழவர் - ஆளுடைய பிள்ளையாரது வள்ளன்மையாவது தற்பயன் கருதாது வரையாது கொடுத்தல். பெரும்புகழ் அவ்வள்ளன்மையால் வருவது. இவை பொதுவாய்ப் பிள்ளையாரது சரிதப் பல பகுதிகளிலும், சிறப்பாய், அவரது திருமணத்தில் வந்தார்க்கெல்லாம் முத்திப்பேற்றை நல்கிய பகுதியிலும் விளங்குவன. இக்குறிப்பினை மேல்வரும் பாட்டில் விரித்துக் கூறுதல் காண்க. திண்பெரும் தொண்டராகிய -திண்மை - உறைப்பு. இதனை இவர் சரிதத்தின் முன் இரண்டு பெரும் பகுதிகளிலும் காண்க. |