பக்கம் எண் :


1058திருத்தொண்டர் புராணம்

 

தொழில்தரும் மறையவர் என்க. மறையவர் என்றதனால் வேதம் பயில்பவர் என்றும், தருதொழில் அவர் என்றதனால் மறையினால் விதிக்கப்பட்ட தொழில் புரிகின்றவர் என்றும் குறித்தபடியாம். மறைதரு தொழிலவர் - என்று கூட்டி உரைத்துக்கொள்க.

திருமறையவர் - என்றதனால் "நான்மறைப் பொருள் விளக்கிய நலத்தார்" (1831) என்ற கருத்தும், தருதொழில் என்றதனால் "வேத உள்ளுறை யாவன...இரண்டுமே செய்கருத் துடையார்" (1832) என்றதும், -1833-1834 திருப்பாட்டுக்களிற் கூறியவையும் ஆகிய பொருள்களும் முடித்துக் காட்டப்பட்டன. "நிறையினார்" என்றது தேவாரம். ஈதற்றொழிலையுடைய மறையவர்கள் வாழும் சாத்தமங்கை என்றலுமாம். தருதல் - ஈதல்; மறையவர்களின் அறு தொழில்களுள் ஒன்று. இங்குத் தருதலாவது "வேட்டுலகை மிகவளிப்போர்" (தேவா) என்ற படி தமது வேத வொழுக்கத்தின் பயனை உலகுக்கு அளித்தல்.

முதற்பெரும் நீலநக்கர் - மேற்கூறியபடி அடியார் பூசையும் ஆண்டான் பூசையும் செய்துவந்த தொழிலின் றிறத்தாலே தரப்பட்ட ஆளுடைய பிள்ளையாரது திருக்கூட்டப்பேறும். அதுகாரணமாக முதற் பெருந்திருவாகிய முத்தியை அடைதலாகிய பேறும்பெற்றவர் என்ற சரிதவரலாறுகளைக் குறிப்பிற்காட்டி முடித்தபடி,

சாத்தமங்கையினில் "வரும்" - என்றதனால் "ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க்கடியேன்" (தொகை) என்று முதனூலும், "நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர்" (பிள் - தேவா) என்ற தேவாரமும் போற்றி வற்புறுத்தி உணர்த்தப்பட்டன.

வணங்கி உரைப்பாம் - வணங்கி அவ்வருள்பெற்ற துணைகொண்டு உரைக்கப் புகுகின்றோம் என்பது.

இருபிறப்பு உடை அந்தணர் - அந்தணர் என்றதனாலேயே வைதிகச் சடங்கினால் எய்தும் இருபிறப்புடைமை பெறப்படுவதாகவும், ஈண்டு இருபிறப்படை (அந்தணர்) என்றது உபநயனச் சடங்கின்மேலும், சிவாகம விதியால் சிவபூசை செய்தற்குரிமை தரும் சிவதீக்கைப் பேறும் உடைமையை உணர்த்தி நின்றது. "சூத்திரர் முதலிய சாதிகளை எடுத்து, சுவாகாந்த மூலத்தால் மூன்றாகுதிகள் செய்து, பின்னர்ச் சிவனைக் குறித்து இவ்வாறு கூறுக : பகவனாகிய பரமேசுவரனே! உணவு எண்ணங்களால் வந்த குற்றங்களினின்றும், பிறப்புவாய், வித்து, உடல்களின் குற்றங்களினின்றும் இவ்வுயிர் தூயதாகி இருபிறப்புடையதாகுக" எனவரும் காமிகாம வசனங்களால் சிவதீக்கையால் இருபிறப்புடையராதல் அந்தணர் முதலிய நால்வருணத்தார்க்கும் உண்டென்பது காணலாம். ஆதலின் சிவதீக்கையால் இருபிறபபுடைமையில்லாத அந்தணரை நீக்கலின் பிறிதினியைபு நீக்கிய அடை. இது ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகளின் குறிப்பு. செஞ்ஞாயிறு என்புழிப்போல இயற்கை யடைமொழி என்பாருமுண்டு. அஃது இந்நாயனாரது சரிதத்தின் இரண்டு பெரு நிகழ்ச்சிகளின் குறிப்புப்பெறவும் நின்றது.

ஒருமை உய்த்து உணர் - ஒருமை - "ஒன்றியிருந்து நினைமின்கள்" (தேவா) என்றபடி பிறிதொன்றினும் செலுத்தாது சிவன் திருவடியினிலே உய்த்தல். உய்த்தல் - செலுத்துதல்.

தொழில் - திருத்தொண்டின் செய்கை என்ற பொருளில் வந்தது. "நீரால் விளக்கிட்டமை நீணா டறியுமன்றே" (தேவா) என்றபடி அவரது செயல் உலக மறிய விளக்கியதனால் அதனை தொழில் என்று குறிப்பிட்டார்,