பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1061

 

நீலநக்கருடைய மனைவியார்; இது இறைவரிடத்து, (நூல் விதி கடந்து) தாயன்பு போன்ற அன்பின் செய்கை. (1839)

(11) திருமேனியின் மேல் வாய்நீர்பட ஊதித் துமிந்தசெயல் பூசை முறையில் அநுசிதமாம் எனக் கொண்டு மனைவியாரைக் கடிந்து நீத்தனர் திருநீலநக்கர். அடிமைத் திறத்தில் இதுவும் (நூல் விதிப்படி) அன்பினால் நிகழ்ந்த செய்கை, (1842)

(12) திருத்தொண்டில் விதிகடந்த பேரன்பானிகழும் செயலும் விதிப்படி நிகழும் செயலும் முரண்பட்டபோது இறைவர் இரண்டினையும் ஏற்றவாறு அமர்ந்து அருள்வர். தம்மை மறந்து விதிகடந்து நிகழும் தொண்டின் செயலை மிகவும் உகப்பர். கண்ணப்பர் சிவகோசரியாா வரலாறுகள் சிந்திக்கத்தக்கன.(1845)

(13) திருவருள் சிறக்கும் பெரியாரது செயலைக் கேட்டபோது மன மகிழ்ந்து அவர்பா லன்புசேர நிகழ்வது பெரியோர்தன்மை. திருநாவுக்கரசா ஆளுடைய பிள்ளையார் திறங்கேட்டவுடனே அவரைக்கண்டு வணங்கச்சென்ற திறம் கருதத் தக்கது. (1849)

(14) மதங்கசூளாமணியாருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்மோடு வரத், திருக்கூட்டத்துடன் ஆளுடையபிள்ளையார் தமது பதியில் எழுந்தருளியது கேட்டவுடனே தமது திருமனையையும் நகரையும் அலங்கரித்துச்சென்று எதிர் கொண்டு அழைத்துவந்து அமுதுசெய்வித்தனர் திருநீலநக்கர். குருபத்தியிலும் அடியார் பத்தியிலும் பயில்பவர் இவ்வொழுக்கத்தினைப் பின்பற்றுதல் நன்மை பயக்கும். (1850 - 1855)

(15) திருநீலகண்டப்பாணனாரும் பாடினியாரும் தமது மனையில் இரவு தங்குவதற்குத் தமது நடுமனைவேதியின் பாங்கர் இடங்கொடுத்தனர். திருமறைய வராகிய திருநீலநக்கர். அப்போது அவ்வேதியில் அறாத செந்தீ வலஞ்சுழிதது ஓங்கி முன்னையினும் மிக்கு விளங்கித் திருவருட் பெருமையினை விளக்கிற்று. இது பாணனாருடைய சாதிகுலம்பற்றி யன்றி அன்பின் பெருமைபற்றி நிகழ்ந்தஅருட் செயலாகும். (1858)

(16) அடியார்களது அன்பின்பெருமை அவர்களை ஆண்ட பரமரைப் போற்றும் திருப்பதிகத்தினும் வைத்துப் பாராட்டத்தக்கது. (1859)

(17) குருவழிபாட்டிற் சிறக்க ஒழுகுவோர்க்கு அக்குரு வெளிப்பட்டுவருவர். பின் அவர் அக்குருவருளினாலே முத்தியடைகுவர். (1862 - 1864)

தலச்சிறப்பு :- திருச்சாத்தமங்கை - காவேரிக்குத் தென்கரையில் 81ஆவது தலம். அயவந்தி என்பது இத்தலத்துக்கோயிலின் பெயர். திருநீலநக்கநாயனாரது தலம் என்று அவர் பெருமைபற்றி உலகம் எடுத்துப் போற்றும் பெருமை பெற்றதென்று ஆளுடையபிள்ளையாராற் றிருப்பதிகத்தினுள் வைத்துப் போற்றப்பட்டது. "அயவந்தி" என்ற பெயரால் அயன் (பிரமன்) போற்றிய தலம் என்பது கருதப்படும். நாயனாரது திருவுருவமும் அவரது தேவியார் திருவுருவமும் அம்மை சந்நிதியில் தாபிக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசு நாயனாரும் ஆளுடையபிள்ளையாரும் வணங்கிப்போற்றிய சிறப்புடையது. சுவாமி அயவந்தி நாதர்; அம்மை - மலர்க்கண்ணியம்மை. பதிகம் 1.

இத்தலம், நன்னிலம் என்ற இருப்புப்பாதை நிலயத்தினின்றும் கிழக்கே மட்சாலையில் நான்கு நாழிகையளவில் உள்ள திருப்புகலூரை அடைந்து, அங்கிருந்து கிழக்கே மட்சாலைவழி மூன்று நாழிகையில் உள்ள திருமருகலினின்றும் வடகிழக்கே மட்சாலையில் ஒரு நாழிகையளவில் அரிசொல் ஆற்றுக்கு வடகரையில் உள்ளது. ஆற்றுக்குப் பாலம் உண்டு. திருச்செங்காட்டங்குடியி னின்றும் வடகிழக்கே மட்சாலை வழி இரண்டு நாழிகையிலும் இதனை அடையலாம்.

_________