பக்கம் எண் :


1062திருத்தொண்டர் புராணம்

 

27. நமிநந்தியடிகணாயனார் புராணம்

தொகை

"அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்"

-திருத்தொண்டத் தொகை

வகை

"வேத மறிக்கரத் தாரு ரரற்கு விளக்கு நெய்யைத்
 தீது செறியமண் கையாட் டரவிடத் தெண்புனலால்
"ஏத முறுக வருக"ரென் றன்று விளக்கெரித்தான்
 நாத னெழிலேமப் பேறூ ரதிப னமிநந்தியே"

- திருத்தொண்டர் திருவந்தாதி - 31

விரி

1866.

வையம்புரக்குந் தனிச்செங்கோல் வளவர் பொன்னித்திருநாட்டிற்
செய்ய கமலத்தடம்பணையுஞ் செழுநீர்த் தடமும் புடையுடைத் தாய்ப்
பொய்தீர் வாய்மை யருமறைநூல் புரிந்த சீலப் புகழதனால்
எய்தும் பெருமை யெண்டிசையு மேறூ ரேமப் பேறூரால்.

1

புராணம்:- நமிநந்தியடிகள் என்ற பெயருடைய அடியாரது சரிதவரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்தமுறையானே, திருநின்ற சருக்கத்தில் ஏழாவதாக நமிநந்தியடிகளது சரிதங்கூறத் தொடங்குகின்றார். அடிகள் - பெரியார்களைக் குறிக்கும் சிறப்புப் பெயர்.

தொகை:- அருநம்பியாகிய நமிநந்தி என்ற பெரியாரது அடியார்களுக்கும் நான் அடியேனாவேன். அருநம்பி - "தொண்டர்க்கரணி" என்று, திருத்தொண்டின் பெருமையை அளவு காணுதற்குக் கருவியாயமையும் பண்புடைய பெரியார் எனத் திருநாவுக்கரசர் போற்றும் அருமைப்பாடு குறித்தது. நம்பி - ஆடவருட் சிறந்தவர். இவர்பெயர் "நம்பிநந்தி" என்றும் "நந்தி" என்றும் தேவாரத்தினுட் குறிக்கப்படுவது காண்க.

வகை:- வேதம்...அரற்கு - வேத உருவமாகிய மான் கன்றைக் கையில் ஏந்திய திருவாரூர்ச் சிவபிரானுக்கு; விளக்கு...அட்டாவிட - விளக்குக்கு வேண்டிய நெய்யினைத தீயநெறியிற்செல்லும் கிழ்களாகிய சமணர்கள் வார்க்காது விடவும்; ஏதம்...என்று - இந்த அமணர்கள் கெடுதியை யடைவாராக என்று எண்ணி; தெண்புனலால் - தெளிந்த நீரினால்; விளக்கு எரித்தான்...நமிநந்தியே - விளக்கு எரித்தவர் எமது தலைவராகிய அழகிய ஏமப்பேறூர் - அதிபராகிய நமிநந்தியேயாம்.

வேதமறி - மறி வேத உருவாகுதல் அதன் நாதச்சிறப்பால் என்க. வேதங்கள் போற்றும் மறி என்றலுமாம். தீது செறி அமண் - விளக்குக்கு நெய்வார்க்கரது விடுத்ததோடு கொடுமையாகிய அவமான மொழிகளையும் சொல்லிய தீமையும் (1875), அக்காலத்தில் தமிழ்நாடு முழுதும் பரவிச் சைவத்திற்குச் செய்த பல தீமைகளும் கூடியதனால் செறி என்றார். கையர் - கீழ்கள். தெண்புனல் - ஒரு விளக்கில் விட்டு எரித்துக்கண்டபோது அது அருளால் எரியும் தன்மையுடையது என்று தெளிந்துகொண்ட புனல். (1879)