பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1063

 

‘ஏத முறுக அருக'ரென்று - இங்கு அருகர் என்றது அவர்தம் கொள்கைகளையும் அவர்கள் சைவத்திற்குச் செய்த தீமைகளின் தொகுதியினையும் (1883); என்று - என்று கவன்றது (1876). பிறன்கேடுசூழ்தல் சைவத்தின் இல்லை. வையகமுந்துயர் தீர்கவே என்று வாழ்த்துதல் சைவத் திறம். ஆயின் இங்கு "ஏதமுறுக அருகர்" என்ற தென்னையோ? என்னின், அருவர் சைவத்துக்குச் செய்த தீமையை விலக்குமளவே என்க. பிற்சரித நிகழ்ச்சி காண்க. "குண்டர் அழிய" (1883) என்று விரிநூலுட் கூறியதும் இக்கருத்து. அன்று - அமணர் மதியாது அவமதியுரைத்த அப்பொழுதே - ஏகாரம் தொக்கது. ஏனைக்காலங்களைப் பிரித்தலின், பிரிநிலை, நாதன் - தலைவன். விளக்கெரித்தான் - நமிநந்தியே என்று முடிக்க. ஏகாரம் அசைநிலை.

பெயரும் பண்பும் தொகைநூல் உணர்த்தியது; ஊரும் பெயரும் பண்பும் திருத்தொண்டின்றிறமும் வகைநூல் வகுத்தோதிற்று. இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டு கொள்க.

விரி:- 1866. (இ-ள்.) வையம்...நாட்டில் - உலகத்தைக் காவல்புரியும் தனிச் செங்கோலையுடைய சோழர்களுடைய காவிரித் திருநாட்டிலே; செய்ய...புடையுடைத்தாய் - செந்தாமரைத் தடங்களை யுடைய பெரிய வயல்களையும் செழித்த நீர்த்தடாகங்களையும் எப்பக்கங்களிலும் கொண்டதாகி; பொய்தீர்...ஏறுஊர் - மலங்களை நீக்குந்தன்மையுடைய மெய்ப்பொருளைக் கூறும் அரிய வேதங்களிலும் அவற்றின் வழியாய நூல்களிலும் கூறும் விதிகளை யிடைவிடாது சிந்தித்துச் செய்யும் நல்லொழுக்க முடையோர்களின் புகழினாலே வருகின்ற பெருமையானது எல்லாத் திக்குக்களிலும் பரந்து செல்கின்ற ஊர்; ஏமப்பேறூர் - ஏமப்பேறூர் என்பதாம்; (ஆல் - அசை).

(வி-ரை.) வையம்...வளவர் - ஆசிரியரது காலத்தில் சோழ அரசரது ஆட்சி தலைசிறந்து பரந்து விளங்கியதனால் புரக்கும் என நிகழ்காலத்தாற் கூறியதுமன்றி, இவ்வாறு சிறப்பித்தும் கூறினார். வையம் புரக்கும் - என்பது அந்நாளில் நாடுகள் பலவற்றினும், கடல் கடந்தும் சென்ற சோழர் ஆட்சியின் பரப்புக் குறித்தது; தனிச்செங்கோல் - முடிமன்னராகித் தமக்கு எதிராவார் பிறரின்றி நின்ற தன்மை குறித்தது. "பற்றல ரிலாதாய்" (577); "மாறின்றி மண்காக்கின்ற"(578); என்று முன்னைநாடசிறப்பும். "வையம் பொதுக்கடிந் தினிது காக்குங், கொற்றவனநபா யன்பொற் குடைநிழற் குளிர்வது" (85) என்று அந்நாளின் நிகழ்காலச் சிறப்பும் கூறியவை சிந்திக்க.

வளவர் திருநாடு என்றும், பொன்னித் திருநாடு என்றும் கூட்டுக. வளவர் பொன்னி - தனது பயன் முழுதும் சோழநாட்டுக்கே தந்து வளம் படுத்தலால் வளவர்க்குரிய பொன்னி என்றுரைக்கவும் நின்றது.

பணையும் - தடமும் - புடையுடைத்து என்றது அந்நகரைச் சூழ்ந்து பக்கங்களில் வயல்களும் நீர்த்தடங்களும் உள்ள நீர்ச்சிறப்பும் நகரச் சிறப்பும் கூறியதாம்.

கமலத்தடம்பணை - தாமரைத்தடங்கள் வயல்களினிடையிடை உள்ளன என்பது. செழுநீர்த்தடம் - என்றது அவ்வயல்களுக்கு நீர்தீர அமைந்த பெரியநீர், நிலைகள், தடம்பணை என மெல்லொற்றுக் கெடாது நின்ற்து இசையின்பநோக்கி; இவ்வாறன்றித், தடம்பணை - இடமகன்ற பெருவயல்கள் என்றுகொண்டு, மேல் 1868இல் வரும் கருத்துக்குத் தோற்றுவாய் செய்தாங்கு வைத்துக் கமலங்கள் மலர்ந்துள்ள பெருவயல்கள் என்று கொண்டனர் முன் உரைகாரர். ஒரே கருத்து இருமுறை வரவுரைத்தல் சிறப்பிலதென்க. புடை - பக்கங்கள்; தன்னகத்தே என்றுரைப்பாருமுண்டு. புடையுடைத்து - பக்கங்களில் உடையது. "பணையுந் தடமும் புடைசூழு மொற்றியூர்" (சேரமாசி - புரா - 6).