பொய்தீர் வாய்மை - பொய்யைப் போக்கும் மெய்ப்பொருள் - பொய் என்றது இங்குப் "பிறவிப்பிணி"க்குக் காரணமாகிய மூலமலத்தைக் குறித்து நின்றது; "பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே" (திருவா) என்பது காண்க. தீர் -தீர்க்கும் - நீக்கும். இதற்குப் பொய்யிலா மெய்யர் என்றாற்போல விசேடியப் பொருளே கொண்டு மெய்மையான என்றுரைகொண்டனர் முன்னுரை ஆசிரியர். மறைநூல் - மறைகளும் அவற்றை உள்ளிட்ட விதிநூல்களும். புரிந்தசீலம் - இடைவிடாது கொண்டொழுகிய நல்லொழுக்கம். எண்திசையும் ஏறுதல் - எங்கும் சென்று பரவுதல். "ஏமப்பேறூர்" - (அரசுகள் - க்ஷேத் - கோவை - 3); இதனால் நாட்டுவளமும், நகரவளமும், குடிச்சிறப்பும் கூறியதுடன் அவ்வூர் சீல மறையவர் நிறைந்த நகரம் என்றும் கூறி நாயனாரது சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தார். 1 1867. | மாலை பயிலுந் தோரணங்கண் மருங்கு பயிலு மணிமறுகு; வேலை பயிலும புனல்பருகு மேகம் பயிலு மாடங்கள்; சோலை பயிலுங் குளிாந்தவிருள்; சுரும்பு பயிலு மரும்பூகங்; காலை பயிலும் வேதவொலி; கழுநீர்பயிலுஞ் செழுநீர்ச்செய். |
2 (இ-ள்.) மணிமறுகு - அழகிய வீதிகளில்; மருங்கு - பக்கங்களில்; மாலைபயிலும் தோரணங்கள் பயிலும் - மாலைகள் மிக்குத் தொங்கவிடப்பெற்ற தோரணங்கள் மிக விளங்குவன; மாடங்கள் - மாடங்களின்மேல்; வேலை பயிலும் மேகங்கள் பயிலும் - கடலில் நிறைந்த நீரை உண்ணும் மேகங்கள் பொருந்தியுள்ளன; சோலை....இருள் - குளிர்ந்த இருண்டநிழல் சோலைகளிற் பொருந்தும்; சுரும்பு...பூகம் - அரிய கமுகுகளில் வண்டுகள் படிவன; காலை...ஒலி - உரிய காலங்களில் வேதவொலி மிக்கு இருப்பன; செழுநீர்ச்செய் கழுநீர் பயிலும் - செழிப்புடைய நீர்வயல்களில் கழுநீர் மலர்கள் மிக்குள்ளன; (வி-ரை.) பயிலும் - என்பது இப்பாட்டில் மிக்கு விளக்கவுள்ள தன்மைகுறிக்கப் பன்முறையும் மிக்குப் பயின்றுவந்தது. சொற்பொருட் பின்வரு நிலை. மாலை பயிலும் தோரணங்கள் - (மலர்) மாலைகள் ஓர் அளவுபட அறுத்துத் தோரணங்களில் தொங்கவிடுதல் அணிவகைகளுள் ஒன்று. "மாலை, துணையுற வறுத்துத்தூங்க நாற்றி" (முருகு);மருங்கு - தமது பக்கங்களில்; பயிலும் - பயில உள்ளன. மாலை பயிலும் - வேலை பயிலும் - பயிலும் - பெயரெச்சங்கள்; இப்பாட்டில் ஏனைய ஆறு இடத்தும் பயிலும் என்பவை வினைமுற்றுக்கள். தோரணங்கள்; மேகம், இருள் சுரும்பு, வேதவொலி, கழுநீர் என்பன ஆ!றும் அம்முற்றுக்களுக்கு எழுவாய்கள். மறுகு, மாடங்கள், சோலை, பூகம், காலை, செய் என்னும் ஆறும் ஏழாம் வேற்றுமை யுருபு தொக்கு வந்தன. மேகம் புனல் பருகுதல் - ‘முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்து' (திருவா - திருவெம்) என்றபடி கடல்நீர் ஞாயிற்றின் வெப்பத்தால் ஆவியாயெழுதலால் மேகமிகுவதனை இவ்வாறுரைப்பது ஒரு மரபு. நீர், ஆவியாய் மேகத்தைச் சார்தலும் மேகத்தாற் குறைக்கப்படுதலும் ஆகிய இருநிகழ்ச்சிகளுமுண்டு; "நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகிவிடின்" (குறள்) என்பதும் அதன் உறையும் காண்க; இவ்வியல்பு கடல்வாழ் மாந்தரும் கப்பல் செலுத்துவோரும் கண்கூடாகக் கண்ட வுண்மை. |