பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1065

 

மேகம் பயிலும் மாடங்கள்:- மாடங்கள் மிக உயர்ச்சி யுடையனவாயிருத்தலின் மேகங்கள் அவற்றில் தவழ்வன என்பது.

இருள் - இங்கு, நிழல் என்ற பொருளில் வந்தது.

காலை பயிலும் வேத ஒலி - காலை என்புழிப் பொழுது இடமாயிற்று; அதுகாலை நேரத்தை மாத்திரம் உணர்த்தாமல் காலப்பொதுமையை உணர்த்தி நின்றது; மற்றைக் காலங்களினும் வேதம் பயிலப்படுதலின்.

கழுநீர்ச்செய் - செய்களில் கழுநீர் பூக்க இருப்பது நீர்ச்சிறப்புக் குறிக்கும்.

2

1868.

பணையில் விளைந்த வெண்ணெல்லின் பரப்பு மீது படச்செய்ய
துணர்மென் கமலமிடையிடையே சுடர்விட் டெழுந்து தோன்றுவன
புணர்வெண் புரிநூ லவர்வேள்விக் களத்திற் புனைந்த வேதிகைமேன்
மணல்வெண் பரப்பி னிடையிடையே வளர்த்த செந்தீ மானுமால்.

3

(இ-ள்.) பணையில்...பட - வயல்களில் விளைந்த வெள்ளிய நெற்பயிர் பரந்த இடத்தின் மேலே தோன்றும்படி; செய்ய...தோன்றுவன - இடையிடையே ஒளிவிட்டு எழுந்து தோன்றுவனவாகிய சிவந்த பல மெல்லிதழ்களையுடைய தாமரைமலர்கள்; புணர்மென்...வேதிகைமேல் - பொருந்திய வெள்ளிய முப்புரிநூலணிந்த வேதியர்கள் வேள்விக்களத்தில் அழகுபட அமைத்த வேதிகையின் மேலே; மணல்...மானுமால் - வெள்ளிய மணற்பரப்பி னிடையிடையே வளர்த்த செந்தீயை ஒத்திருக்கும்.

(வி-ரை.) தோன்றுவன(வாகிய) - கமலங்கள் - செந்தீ மானும் என்று கூட்டி முடிக்க. ஆல் - அசை.

பணை - வயல். பண்ணை என்பது பணை என நின்றது.

வெண்ணெல்லின் பரப்பு - நெல் - விளைந்த நெற்பயிரினைக் குறித்தது. பரப்பு - பரந்த இடம், பரப்பியது போன்ற பயிர்

பரப்பு மீது பட - பரப்பின் பயிரின்மேல் தோன்றும்படி. படுதல் - உண்டாகுதல் - தோன்றுதல் என்ற பொருளில் வந்தது. ஏற்பாடு என்புழிப்போல.

துணைமென் கமலம் என்பது மாடமாயின் நெருங்கிய - பலவாகிய - என்க.

கமலம் நெல்லின் இடையிடையே தோன்றுவன - என்றது நெற்பயிரின் இடையிடை அங்கு முளைத்துப் பூக்கும் தாமரை மலர்களை; இது நீர்வளத்தாலாவது.

புணர் - பொருந்தும். பிரமசரிய முதலிய நிலைகளுக்கேற்றவாறு புணரும்.

வேள்விக் களம் - யாகஞ்செய்யுமிடம் - யாகசாலை.

வேதிகை - யாகத்தீவளர்க்கும் மேடை - யாகத்திண்ணை (1064) பார்க்க.

மணல் வெண் பரப்பு - தூய்மையின் பொருட்டு வெண்மணலைப் பரப்பி அதன் மேல் எரிவளர்த்தல் மரபு.

இடையிடை வளர்த்த செந்தீ - வேள்விக்களத்தில் பல திக்குக்களிலும் உரிய பல தெய்வங்களுக்கு ஆகுதி தருதற் பொருட்டுப் பலவாகத் தீ வளர்த்தல் முறை யாதலின் இடையிடையே வளர்த்த - தீ என்றார்.

பணை = வேதிகைக்கும்; வெண்மை நெல்லின் பரப்பு = மணல் வெண்பரப்புக்கும்; கமலம் (மலர்) = செந்தீக்கும் ஆகத் தொடர்ந்து உரு பற்றி வந்த விரியுவமம். புராணமுடைய நாயனார் வேதியராதலானும், அந்நகர் மறையவர் ஊராதலானும், ஆங்குச்சூழும் இயற்கைப்பொருள்கள் இவ்வாறு ஆசிரியரது தெய்வக்கண்ணுக்குப் புலனாகின்றன. முன்னர் 866 - 867 - 1042ல் உரைத்தவை பார்க்க.

3