பக்கம் எண் :


1066திருத்தொண்டர் புராணம்

 

1869.

பெருமை விளங்கு மப்பதியிற் பேணு நீற்றுச் சைவநெறி
யொருமை நேறிவா ழந்தணர்த மோங்கு குலத்தி னுள்வந்தார்
இருமை யுலகு மீசர்கழ லிறைஞ்சி யேத்தப் பெற்றதவத்
தருமை புரிவார் நமிநந்தி யடிக ளென்பா ராயினார்.

4

(இ-ள்.) பெருமை....பதியில் - பெருமையினால் விளங்கும் அந்தத்தலத்தில் பேணும்......வந்தார் - பேணுகின்ற திருநீற்றுச்சார்புடைய சைவ நெறியில் ஒருமைப்பாடுற்ற வழியில் வாழும் அந்தணர்களின் ஓங்கும் குலத்தில் வந்தவதரித்தாராய்; இருமை...அருமைபுரிவர் - இருமையாகிய உலகிலும சிவபெருமான் றிருவடிகளை வணங்கி வாழ்த்தும் பேறுபெற்ற தவத்தினை அரியவகையினால் இடைவிடாது செய்துவருபவர்; நமிநந்தியடிகள் என்பார் - நமிநந்தியடிகள் எனப்படுபவர்; ஆயினார் - உள்ளவரானார்.

(வி-ரை.) பேணும் நீற்றுச் - சைவநெறி - பேணுதல் - காத்தல் - தவிராது காத்தல்; அடைந்தாரைக் காக்கும் நெறி என்றும், அடைந்தாரால் தவிராது காக்கப்படும் நெறி என்றும் உரைக்க நின்றது. உயர்ந்தோர் பேணும் நெறி என்றலுமாம். நீற்றுச் சைவநெறி - சைவநெறியின் சிறப்புரிமை திருநீறு என்பதாம். "திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின்" (610), "திருநீற்றுச் சார்புடைய வெம்பெருமான்" (649), "கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்" (திருஞான - புரா - 562) முதலியவை பார்க்க. சைவநெறி - சைவதீ்க்கையுடைய என்ற குறிப்பும் தருவது.

சைவநெறி(யில்) ஒருமைநெறி வாழ் - என்க. ஒருமை நெறி என்றது அதனையே தமது உறுதியான குறிக்கோளாகக்கொண்டு ஒன்றுபட்ட எண்ணத்துடன் உணர்ந்து வாழ்தல், "இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணி" (தேவா) : ஒருமை வழி - என்பதும் பாடம்.

நீற்றுச் சைவநெறி...அந்தணர்தம் ஓங்குகுலம் - என்றதனால் சிவாகம விதிப்படி சிவதீக்கைபெற்றுச் சைவ சித்தாந்த நெறியின் வழிவந்த மகா சைவராகிய அந்தணர் குலம் என்க. வேதநெறியினை மட்டும் உடம்பட்டுச் சிவாகமநெறியில் வாராத சார்பினரை வேறுபிரிக்க இவ்வாறு கூறினார். இவர்கள் சிவாகம விதிப்படி ஆன்மார்த்தமாகச் சிவபூசையியற்றற்குரியார் என்பதனையும் மேல் வலியுறுத்துதல் காண்க. திருநீலநக்கர் "மெய்த்த வாகம விதிவழி வேதகா ரணரை, நித்தல் பூசனை புரிந்தெழு நியமமுஞ் செய்"தனர் (1833) என்பதும் ஆண்டுரைத்தவையும் நினைவு கூர்க.

இருமையுலகும்....அருமைபுரிவார் - முன்னர்த் திருநீலநக்கருக்கு உரைத்தபடியே உரைத்துக்கொள்க. இருமையுலகு - இம்மையும் அம்மையும். இம்மை - பெத்தநிலை. அம்மை - முத்தநிலை. "இம்மையேதரும் சோறுங் கூறையும்....அம்மையே சிவலோக மாள்வதற்கு" (தேவா - நம்பி) தவம் - சிவபூசை. தவத்து அருமை புரிவார் - அருமைத் தவத்தினை இடைவிடாது செய்வார். அத்து - சாரியை அருமைத்தவம் புரிவார் என்க. புரிதல் - இடைவிடாது நிலைத்தல் என்றுகொண்டு, ஏத்தும் பேறுபெற்ற தவத்தினை அருமையினை எப்போதும் எண்ணுவர் என்றலுமாம். "ஈசர்கழல் முறைபுரிந்த முன்னுணர்வு" (திருஞான - புரா - 61), தவத்தின் அருமையாவது எளிதில் அடையப்படாமை. இறைஞ்சி ஏத்தப்பெறும் தவம் தமக்குக் கிடைத்தமையை எண்ணி மகிழ்வர் என்பது. "இறுமாந் திருப்பன்கொலோ லீசன் பல்கணத் தெண்ணப்பட்டு" (திருவங்கமாலை).