பக்கம் எண் :


1068திருத்தொண்டர் புராணம்

 

யாம இரவும் பகலும் - துயில்வந்தெய்த அதனால் வழிபாட்டு நினைவை யாவரும் மறக்கும் காலம் இரவாதலின் அப்போதும் இந்நாயனார் அந்நிலையுணர்வுடனிருக்கும் சிறப்புப்பற்றி இரவை முன்வைத்தார். உம்மை இரண்டும் எண்ணின் கண்வந்தன. யாம இரவு=நள்ளிரவு என்றலுமாம். அபிடேகம் பெற்ற நிலையினையுடையோர்க்கு நடு இரவின் வழிபாட்டு விதியுண்மையும் கருதுக. உணர்வு ஒழியா இன்பம் - என்றதனால் இரவின் எல்லாயாமங்களினும் இந்நிலையுணர் வின்பம் எய்தினார் என்றுரைக்கப்பட்டது.

அருமறைநூல் புரிந்த சீலப்புகழ் - (1866) என்றதனால் அவ்வூரந்தணர்களின் பொது வைதிக இயல்பும். நீற்றுச் சைவநெறி - வாழந்தணர்தம் ஓங்குகுலம் என்றதனால் நாயனா ரவதரித்த குலத்தின் வைதிக சைவத் சிறப்பியல்பும் கூறிய ஆசிரியர், முன்பாட்டினும் இப்பாட்டினும் அக்குலத்து வந்த நாயனாரது வைதிக சைவத் சிறப்புடனே மிக்க சிவஞானச் சிறப்பை விளக்கியதோடு சரித நிகழ்ச்சிக்குத் தோற்றுவாயும் செய்த நயம் கண்டுகொள்க.

வைதிக ஒழுக்கம் அவ்வூர் விளைநிலம் காட்டவும், ஊர் அச்சீலப்புகழ் ஏறவும், ஊரவர் காலங்களில் வேதவொலி பயிலவும், குலத்தவர் நீற்றுச் சைவநெறி யொருமை நெறிவாழவும், ஆக இத்தகைய அமைப்புக்களி னிடையே வந்தவதரித்தவர் நாயனார் என்ற நயமும் காண்க. இப்பாட்டிற் கூறிய பெருமைபற்றித் "தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை, யாவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும், நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன், கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே" என்ற ஆளுடைய பிள்ளையார் திருவாக்கும் கருதுக.

5

1871.

அவ்வூர் நின்றுந் திருவாரூ ரதனை யடைவா ரடியார்மேல்
வெவ்வூ றகற்றும் பெருமான்றன் விரைசூழ் மலர்த்தாள் பணிவுறுவ
தெவ்வூ தியமு மெனக்கொள்ளு முடையார் பலநாளுந்
தெவ்வூ ரெரித்த வரைச்சிலையார் திருப்பா தங்கள் வணங்கினார்.

6

(இ-ள்.) அடியார்மேல்...எண்ணமுடையார் - அடியார்மேல் வரும் வெவ்விய வற்றினை நீக்கும் சிவபெருமானுடைய மணங்கமழு மலர்போன்ற பாதங்களைப் பணியும் தன்மை பெறுவதுவே எல்லாவூதியமும் ஆகும் என்று கொள்ளும் எண்ணமுடைய அந்நாயனார்; அவ்வூர்நின்றும்...அடைவார் - அந்த ஏமப்பேறூரினின்றும் திருவாரூரை அடைவாராகி; பலநாளும்...வணங்கினார் - பகைவர்களுடைய மூன்றூர்களையும் எரித்த மலையாகிய வில்லையேந்திய சிவபெருமானது திருப்பாதங்களைப் பலநாள்களிலும் வணங்கினார்.

(வி-ரை.) எண்ணமுடையார் - அடைவார் - வணங்கினார் என்பது வினை முடிபு.

அவ்வூர் - தாமிருந்த முன் சொல்லிய (1866) ஏமப்பேறூரகிய அந்த ஊர். அகரம் முன்னறிசுட்டு. நின்றும் -நீக்கப் பொருளில் வந்த ஐந்தாவதன் சொல்லுருபு, நின்றும் - முன்சொல்லியபடி "வழிபட்டொழுகும் தன்மைநிலை யாம இரவும் பகலுமுணர் வொழியா வின்ப மெய்திய" (1870) நிலைபெற்றிருந்தும் அதனாலன்பு நிரம்பாமல் என்ற குறிப்புப்படவும் நின்றது. "பூசனை நியதியை விதியினான் முடித்து - நாய னாரையு மருச்சனை புரிந்திட நயந்தார்?(1834) என்றும்?பூசனை நிரம்பியு மன்பினானிரம்பார்" (1837) என்றும் வந்தமை காண்க.

அடியார்மேல் வெவ்வூறு - அடியார் மேலதாய் நின்ற கொடிய ஆணவ மலமாகிய பிணி. பிறவிக்கு வித்தாய் நின்று ஊறுகள் எல்லாவற்றுக்கும் காரணமாய உடம்பை மீளமீளத் தருதற்கேதுவாதலின் ஆணவம் வெவ்வூறு எனப்பட்டது.