பக்கம் எண் :


1072திருத்தொண்டர் புராணம்

 

பொழுது செல்லும் - பகற்பொழுது போய்விடும்; எனவே விளக்கு எரிக்கும் நேரம் கழிந்துபோகுமாதலின். ஒழிந்து - அவ்வாறு தம்பதியிற் சென்றுவரும் கருத்தினைவிட்டு.

அங்கு அணைந்து - அவ்வூரில் (திருவாரூரில்) வெளியே அணைந்து. ஓர் மனையில் - திருக்கோயிலின் மேல்புறம் கமலாலயக் கரையினைச் சுற்றிலும் மனைகள் உள்ளனவாக அவற்றுள் ஓர் மனையில் என்க. அந்த மனைகளே திருக்கோயிலினை அடுத்துள்ளன. அந்நாளில் அங்குத் திருக்குளத்தின் இடங்களையும் தூர்த்து இடையூது விளைத்து அமணர்கள் தங்கள் மனைகளை அமைத்து நின்றனர் என்றும், அரசனால் தண்டிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் தண்டியடிகள் புராணத்தால் அறிகின்றோம்.1883-ம் பார்க்க.

நெய்வேண்டி உள்புகலும் - விரும்பி மனையினுள்ளே புகுதலும் என்க. அமணரிடம் அடியார் வேண்டினார் என்று கூற இசையாது புகுதலை மட்டும்கூறி மேல் வரும் பாட்டிற் கூறுமாறு அவர்களது மாறுபட்ட விடையினால் இவர் அவர்கள் வேண்டிக்கொண்ட செய்தியை உய்த்துணர வைத்தார். இது ஆசிரியரது அன்பின் மரபு.

அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று - அழிந்த நிலைமை - உண்மையினின்றும் பிறழ்ந்த நிலையுள்ள என்றபடி. கமலாலயக் குளக்கரை யழிந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்ட மனை என்பதும் குறிப்பு. ஆயிற்று - ஆயிற்றாதலின்; ஆயிட்டு என்பது ஆயிற்றெனப் பாடம் பிறழ்ந்ததோ என்பது ஐயப்பாடு. ஆயிட்டு என்பதற்கு ஆயிடலான் என்று ஆசிரியர் மாதவச் சிவஞான யோகிகள் பொருள் கொண்டணர்.

அங்கண் - அவ்விடத்து. அப்போது என்றலுமாம்.

உரைப்பார் - முற்றெச்சம். உரைப்பார் (ஆகி) - என்று உரைத்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிந்தது.

1875. (வி-ரை.) இப்பாட்டினால் "அருகர் மதியாது உரைத்த உரை" (1876) விரித்துக் கூறப்பட்டது.

கையில்.....மிகை காணும் - இது அந்த அமணர் சொல்லிய சைவத் தெய்வ அவமதிப்புச் சொல்.

விளக் கெரிப்பீராகில்....செய்யும் - என்றது அவர்கள் அடியாரைச் சொல்லிய அவமதிப்புச் சொல்.

நெய் இங்கு இல்லை - என்பது பொய்ச்சொல்.

திருத்தொண்டர்க்கு உரைத்தார் - தொண்டரின் பெருமை தேறாது என்பதும், தொண்டர்பால் சொல்லியது அவருள்ளத்து நிறைந்து தலைவர்க்குச் சொல்லியதாகும் என்பதும் குறிக்கத் தொண்டர்க்கு என்றார். இதுபற்றியே இறைவரது அருள்வாக்கு எழுந்த தொடர்ச்சியினை மேற்பாட்டிற் காண்க. தெளியாது என்றதும் இக்குறிப்பு. தெளியாது - உரைத்தார் என்று கூட்டி உரைக்கவும் நின்றது.

தெளியாது...புரைநெறி - இது சமண சமயத்தின் "அத்தி நாத்தி" என்னும் கொள்கை. ஒருபொருளே பொய்யு மெய்யும் ஆம் - "அஸ்தி - நாஸ்தி" என்பது அவர்களது மந்திரம். "மெய் யடுபவர் பொருளை யத்தி நாத்தியென றெழுதி" (திருஞான - புரா -814) என்பது காண்க. அஸ்தி - உண்டு; நாஸ்தி - இல்லை; ஒரு கடவுள் உண்டு இல்லை என்பது. சிவஞானபாடியம் - அவையடக்கம் - ஆருகதமதம் பார்க்க. கடவுளை மாத்திரம் உண்டு இல்லை என்பதன்று, அவர்களது பொருள்கள் ஏழும் அத்தகையனவே என்பது அவர் கொள்கை. தெளியாது - உண்மைப் பொருளின் தெளிவுபெறாது. புரைநெறியார் - குற்றமுள்ள நெறியில் நிற்கும் சமணர்கள்.