பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1073

 

விளக்குமிகை என்றவர்கள் அதற்கு மாறாக விளக்கெரிப்பீர் என்று முன்பின் மாறுபடக் கூறுதலும், எரியும் விளக்கினை அவிக்கும் தன்மை கொண்ட நீரினால் விளக்கெரிப்பீர் என்று முரண்படக் கூறுதலும், அவர்களது, "ஒரு பொருளே பொய்யு மெய்யுமாம்" என்னும் புரை நெறியினைக் காட்டுவன என்ற குறிப்பும் காண்க. புரைநெறி மேற்கொள்பவர் ஒழுக்கெல்லாம் அவ்வாறேயாம் என்பதும் குறிப்பு.

ஒரு பொருளை - என்பதும் பாடம்.

10

1876.

அருகர் மதியா துரைத்தவுரை யாற்ற ராகி யப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்துபிறை யணிந்த
முருகு விரியு மலர்க்கொன்றை முடியார் கோயின் முன்னெய்தி
யுருகு மன்பர் பணிந்துவிழ, வொருவாக்கெழுந்த துயர்விசும்பில்,

11

1877.

"வந்த கவலை மாற்றுமினி மாற விளக்குப் பணிமாற
 இந்த மருங்கிற் குளத்துநீர் முகந்து கோடுவந் தேற்று"மென
 அந்தி மதிய மணிந்தபிரா னருளா லெழுந்த மொழிகேளாச்
 சிந்தை மகிழ்ந்து நமிநந்தி யடிகள் செய்வ தறிந்திலரால்.

12

1876. (இ-ள்.) அருகர்....ஆகி - சமணர் மதியாமற் சொன்ன சொல்லைக் கேட்டுத் தரியாதவராகி; அப்பொழுதே.....போந்து - அப்போதே மனத்திற்பெருகும் வருத்தத்துடன் அங்கு நின்றும் நீங்கிப்போய்; பிறையணிந்த....எய்தி - பிறையைச் சூடியமணம்வீசும் கொன்றைப் பூவையணிந்த முடியினையுடையாரது திருக்கோயில் முன்புசேர்ந்து; உருகும் அன்பர் பணிந்து விழ - மணம் உருகும் அன்பர் பணிந்து வீழ்ந்தாராக; ஒரு வாக்கு உயர் விசும்பில் எழுந்தது - உயர்ந்த ஆகாயத்தினின்றும் ஒரு திருவாக்கு உதித்தது.

11

1877. (இ-ள்.) வந்த...என - "வந்த கவலையை மாற்றிக் கொள்ளும்; இனி இடையறாது திருவிளக்குப் பணியைச் செய்வதற்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குளத்தின் நீரினை முகந்து கொண்டுவந்து விளக்கேற்றுவாயாக" என்று; அந்தி...கேளா - அந்தியிற் றோன்றும் பிறையினைச் சூடிய சிவபெருமானது திருவருளால் எழுந்த மொழியினைக் கேட்டு; சிந்தை...அறிந்திலரால் - நமிநந்தியடிகள் மனமகிழ்ந்து செய்வதறியமால் நின்றனர்.

12

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண் டுரைக்க நின்றன.

1876. (வி-ரை.) மதியாது உரைத்த உரை - அவமதிப்பான உரை; மதியாமையே அவமதிப்பாம் என்பதுமமையும்.

விளக்கு நெய் வேண்டி அடியார்க்கு அதுதர இசையாராயின், அமணர் அவ்வாறே, யாம் தரமாட்டோம்; அது எமது சமயக்கொள்கைக்கு இழுக்கு, என்று கூறி அமைந்திருந்தால் அதுவே சாலும், அவ்வாறமையாது, மேற்கூறியபடி நிந்தையும் அவமதிப்பும் செய்தது மிகைபட்ட செய்கையாம். தண்டியடிகள் புராணமும், பிறவும் பார்க்க.

ஆற்றாராகி - சைவத் தெய்வநிந்தையும் அடியாரை அவமதிப்பும் செய்ததனைக் கேட்கத் தரியாராய்; தம்மை அவமதித்தார் என்பதன்று; "மறைக னிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும்" என்று நந்நிபெருமான் வரங்கேட்டமை காண்க. தம்மை அவமதிப்பதனை ஆற்றாமை ஆணவத்தின் வரய்ப்பட்டுச் சான்றோரால் விலக்கப்படுவது.