யாம் என்று சிந்திக்கவல்லராகிப் பின் எழுவாராய். எழுதல் - வீழ்ந்த நிலையினின்றும் மேல் எழுதல். திகைப்பு நீங்கி அவ்வருளின்படியே செய்வது துணிந்தெழுவார் என்ற குறிப்புமாம். எழுவார் - எழுந்தாராகி என்று இறந்த காலக் குறிப்புடன் நின்றது. காலவழு வமைதி. நன்னீர் - இறைவரருளால் தீயை வளரச் செய்து அருள் வெளிநாட்டுதற்கும் அன்பர் மனங்களிக்கவும் அல்லாதார் தேற்றம்படவும் உள்ள நிகழ்ச்சிக் கருவியாய் நின்ற நீர். நன்மை - உலகம் நலம் பெற்றோங்கக் கருவியாதல். நாதர் நாமம் நவின்று - முதல்வரது திருநாமமாகிய திருவைந்தெழுத்து என்னும் மகாமந்திரச்தைச் சொல்லி.. பெருஞ்செயலுட்புகுவார் இவ்வாறு திருநாமஞ் சொல்லிப் புகுதல் அவரருளின் துணையுள் தம்மை ஒப்புவித்தலாம். அமர்நீதி யன்பர் துலை ஏறும்போதும் (544), திருநாவுக்கரசர் கயிலைமலைச்சாரலில் ஆணை வழியே தடத்தினுள் முழ்கியபோதும் (1635), புகழ்ச்சோழர் எரியினுட் புகுந்த போதும் (புகழ்ச் - புரா - 39) இவ்வாறு செய்த அருண்மரபும் பிறவும், இங்கு வைத்துக் காணத்தக்கன. அகலுள் - திரிமேல் - என்க. ஓர் அகலினுள், "சோதி விளக்கொன் றேற்றுதலும்" என மேற்பாட்டிற் கூறுதல் காணக். அகலுள் - என்றது அகலின் உள்ளிடம் நிறைய என்றும், திரிமேல் - என்றது திரி நனைந்து சுடர்பிடிக்கத் துணை செய்ய என்றும் கொள்க. முறுக்கும் திரி - விரைந்து எரிந்து போகமல் நின்று ஒரு சீர்பட எரிதற்கும், சுடர் முதலிற் பற்றுதற்கும், திரியை முறுக்குதல் ஆம். ஒன்று - விளக்குப் பலவும் ஏற்றாது அகல் ஒன்றினுள் நீர் நிறைந்து ஏற்றிய தென்னை?; திருவருளுண்மையில் நாயனார் ஐயங் கொண்டனரோ? எனின், அற்றன்று; திருவருள், எல்லாஞ் செய்ய வல்லது என்பதும், தாம் கேட்டது அந்த அருண்மொழியாகிய கட்டளை என்பதும் உண்மை என்று துணிந்து கொண்ட பின்னரே நாயனார் இவ்வாறு பொய்கைப் புகுதல், நாமமேத்தி நீர் முகத்தல், ஏறிக் கோயிலுட்புக்கு விளக்கில் நீர்வார்த்தல் என்றிவ்வளவும் செய்தனர். ஆயின் கடல் பெரிதாயினும் அதனுள் முகக்கும் கொள்கலத்தினவே நீர் நிறையும்; அதுபோல் திருவருள் பெரிதாயினும் அதனைக் கொள்ளத் தமது தகுதியினளவு எத்துணையோ என்று அஞ்சியே விளக்கு ஒன்றேற்றினர் என்க. "முதிருங் களிப்பினுடன்" என்று பின் கூறுவது மிக்கருத்து. இது பெரியோரியல்பு என்க. பின்னர்க் கோவில் அடைய விளக்கேற்றிய தென்னையோ? எனின் தம்மையும் பொருளாக ஆக்கித் தகுதி பெறுவித்து இறைவர் அருள் புரிந்தது தெளிந்தாராகலின் முன்னர், "எண்ணில் தீப மேற்றுவதற் கெடுத்த கருத்து"க் கொண்டமையால் அன்பு மேலீட்டால் அவ்வாறு செய்தனர் என்க. அப்பர் - அரனெறியுடைய பெருமான். அரனெறியப்பர். முந்நீர் - கடல். உலகைப் படைத்தலாதி முத்தொழிலும் உடைமையின் இப்பெயர் போந்ததென்பர். இங்கு நீர் தன்னியல்பு மாறிச் செயல் செய்தமையின் முந்நீர் - என்று நீரினைப் பற்றிக் கூறினார். அதிசயிப்ப - அதிசயித்துக் காண. "அதிசயம் கண்டாமே" (திருவா). 13 1879. (வி-ரை.) விளக்கு ஒன்று சோதி ஏற்றுதலும் என்க; ஒன்று - ஒன்றின்கண்; ஏழனுருபு தொக்கது. சோதி ஏற்றுதல் - திரியில் தீக்கொளுவுதல். கோயில் அடைய - கோயில் எங்கணும் - முழுதும். அடைய - அடையும்படி. என்று கொண்டு ஆதி முதல்வராய்ப் பேரொளிப் பிழம்பாகிய சிவபெருமான் திருவருள் இக்கோயிற் பணியின்மூலம் அடையும்படி என்றுரைத்தலுமாம். |