பக்கம் எண் :


நமிநந்தியடிகணாயனார் புராணம்1079

 

பணியிற் புகுவாராயினும் தமது நியதியாகிய ஆன்மார்த்த பூசைக் கடமையை முடித்தபின்பே புகுதல் வேண்டும் என்பது விதி. இவ்விதியில் வழுவாது ஒழுகியவர் இந்நாயனார் என்பது "ஈசர்கழ லிறைஞ்சி யேத்தப் பெற்ற தவத்தருமை புரிவர்" (1869) என முன் காணப்பட்டது.

ஆரூர் நகரின் மீண்டும்(ம்) அணைந்தார் - திருவாரூர்ப் பெருமானை வழிபடுதலே எவ்வூதியமுமாகும் என்று கொண்ட கொள்கையினாற் பலநாளும் வந்துவந்து வழிபடுவார் அன்று மீண்டும் அவ்வாறே அணைந்தனர் (1871) என்பது மட்டுமன்றி, முன்னை நாளிற் றாம்பெற்ற திருஅருட் பேற்றின்தின்ப ஆராமையால் மீண்டும் பணி செய்து திருவருட் பெருக்கினிற் றிளைத்து வழிபடும் திறத்தால் மீண்டும் அணைந்தனர் என்ற குறிப்புமாம். இறந்தது தழுவிய எச்சவும்மை விரிக்க. அணைந்தவுடன் அரனெறியார் கோயில் வலங்கொண்டு வழிபட்டனர் எனவரும் பாட்டில் கூறும் குறிப்பும் காண்க.

16

1882.

வந்து வணங்கி, யரனெறியார் மகிழுங் கோயில் வலங்கொண்டு
சிந்தை மகிழப் பணிந்தெழந்து, புறம்பு முள்ளுந் திருப்பணிகண்
முந்த முயன்று பகலெல்லா முறையே செய்து, மறையவனார்
அந்தி யமையத் தரியவிளக் கெங்கு மேற்றி, யடிபணிவார்;

17

1883.

பண்டு போலப் பலநாளும் பயிலும் பணிசெய் தவரொழுகத்,
தண்டி யடிக ளாலமணர் கலக்கம் விளைந்து சார்விலமண்
குண்ட ரழிய வேழுலகுங் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் றொண்டர்கழ லமரர் பணியு மணியாரூர்.

18

1882. (இ-ள்.) வெளிப்படை. முன் சொல்லியவாறு ஒருப்பட்டு வந்து சேர்ந்து வணங்கி, அரனெறியப்பர் விரும்பி விளங்க வீற்றிருக்கும் கோயிலினை வலமாக வந்து மனமகிழ்ச்சியோடும் கீழே விழுந்து பணிந்து எழுந்து, அத்திருக்கோயிலின் புறத்திலேயும் உள்ளேயும் செய்யத்தக்க திருப்பணிகளை, முந்த முயன்று, அந்த நாளிற் பகற்கால முழுமையும் முறைமைப்படி செய்து, மறையவனாராகிய நமிநந்தியடிகள் மாலைக் காலம்வர அப்போது அரிய திருவிளக்குக்களை ஏற்றி அடிபணிவாராய்.

17

1883. (இ-ள்.) பண்டுபோல.....ஒழுக - முன்போலவே பல நாள்களிலும் பயிலும் திருப்பணி செய்து அவர் ஒழுகி வந்தாராக; தண்டியடிகளால்...அழிய - தண்டியடிகளால் அமணர்களுக்குக் கலக்கம் சேர்ந்ததனால் நற்சார்பு இல்லாத சமணர்களாகிய கீழ்மக்கள் அழிந்தொழியவே; அண்டர்......அணியாரூர் - தேவர் தலைவராகிய தியாகேசருடைய அடியார்களது பாதங்களைத் தேவர்கள் போற்று தற்கிடமாகிய திருவாரூரின்கண்; ஏழுலகும்....நிலவியது - எழுலகங்களும் போற்றும் பெருமை நிலவியது.

18

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.

1882. (வி-ரை.) திருவருள் வெளிப்பட்டபின் பிற்றைநாள் அவ்வருளின் பெருமையை உட்கொண்டு நாயனார் திருப்பணிசெய்தஆர்வமிகுதியைக் கூறிற்று. வணங்கி, வலங்கொண்டு முயன்று, பணிந்தெழுந்து, செய்து, ஏற்றிப் - பணிவார் என்று பகலுமிரவும் செய்த திருப்பணிகளை எல்லாம் விரித்துக் கூறுதல் காண்க.

"புலர் காலை"யில் தமது ஆன்மார்த்த பூசையினை முடித்து வந்துவிட்டமையால் இரவு நியமத்துக்குச் செல்லும்வரை நாள் முழுமையும் அரனெறிக் கோயிலில் பணிசெய்திருந்தனர் என்க.