(இ-ள்.) நமிநந்தி அடிகள் இன்ன....செய்தே - நமிநந்தியடிகளார் இத்தன்மையாகப் பற்பல திருப்பணிகளையும் செய்து கொண்டே; ஏழுலகும்...மன்னர் - ஏழுலகங்களிலும் நிறையும் பெருமையுடைய திருவாரூர்ச் செல்வத் தியாகேசர்; அடியார்....அருள - அடியார்களது அன்பின் வழியே நிற்பாரதலின் அவர் விண்ணப்பித்தபடியே திருவிளையாடல்களைக் கொண்டருளினாராக; எந்நாளும் நன்மை பெருக நாம் உய்யத் தொழுதார் - எந்நாளும் எல்லா நன்மைகளும் பெருக நாம் உய்யும்படி தொழுதனர். (வி-ரை.) இவ்வாறு திருப்பணிகள் பலவும் செய்தொழுகினர்; திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பாராதலின் அவர் பணிசெய்து விண்ணப்பித்தபடி திருவிளையாட்டாடி யருளினர்; அவ்வாடல்களை நமிநந்தியார் எந்நாளும் நன்மை பெருக நாமுய்யத் தொழுதனர் என்று முடித்துக்கொள்க. அடிகள் பணிசெய்தொழுகியமையால் மன்னர் ஆடியருளினர்; ஆடியருளியமையால் அடிகள் தொழுதனர் தொழுததனால் நாம் உய்யும் பேறு பெற்றோம் என்று காரண காரிய முறையில் வைத்தும் கண்டு கொள்க. திருப்பணிகள் பலவும் - திருவிளக்கிட்டமையும், நித்திய நைமித்திகங்கள் பெருகச் செய்தமையும் போல அவ்வாறுள்ள சிவஞானம் பெருகுதற்கேதுவாகிய பல திருப்பணிகளும், இவை அடியார்க் கமுதூட்டுதல், அடியார்களை ஆக்குதல் சிவஞான தானம் செய்தல், திருக்கோயில் புதுக்குதல், திருக்குளம் பெருக்குதல் - முதலாயின. ஏழுலகும்....மன்னர் - எங்கும் நிறைந்த பெருமையுடையாராயும் திருவாரூரில் விளங்க எழுந்தருளியிருந்து ஆட்சி புரிபவர். திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஏழுலகங்களையுங் ஆட்சிபுரியும் அரசர் என்றலுமாம். மன்னர் - என்ற குறிப்புமது. மன்னர் அடியார்வழி நிற்பார் - தாம் ஏழுலகும் காவல் புரியும் தலைவராகிய மன்னரேயாயினும் அடியார் வழியில் தாம் அமர்ந்து ஒழுகுபவர். அடியார் - தமது திருவடியைப் புகலாகச் சார்ந்தவர். வழிநிற்றலாவது - அவர் எண்ணியபடி தாம் நின்று அவர் வேண்டுங்குறைகளை நிறைவேற்றியருளுதல். நிற்பார் - நிற்பாராதலின். திருவிளையாட் டாடியருள - திருவிழாக் கொண்டருள. எந்நாளும்....நாமுய்ய - எந்நாளும் தொழுதார்; நன்மை பெருகத்தொழுதார்; தாமுய்யத் தொழுதார் - என்று தனித்தனி கூட்டுக. நாமுய்ய என்றது பின்வரும் உலகர் யாவரும் தம் பெருமை கண்டு தாங்களும் அவ்வாறே தொழுது நன்மையடையும் பொருட்டு. எம்மனோர் போல் நமிநந்தியடிகள் தமது நலங்கருதித் தொழாது உலக நலங்கருதித் தொழுதனர் என்பதாம். "தாமென்று மனந்தளராத் தகுதியரா யுலகத்துக், காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்" (பிள்ளை - தேவா); "வையகமுந்துயர் தீர்கவே" (தேவா); "எங்களை வாழமுன்னா ளேடுவை கையினி லிட்டார்" (திருஞான - புரா - 1230); "தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்" (சண் -புரா -60) முதலியவை காண்க. அன்றியும் இறைவர் திருவிழாக் கொண்டாடுதல் உலகமுய்யச் செய்யப்படுதலும் காண்க. 1887. | தேவர் பெருமா னெழுச்சிதிரு மணலிக் கொருநா ளெழுந்தருள யாவ ரென்னா துடன்சேவித் தெல்லாக் குலத்தி லுள்ளோரும் | |