பக்கம் எண் :


1088திருத்தொண்டர் புராணம்

 

வந்து; ஞானமறையோர்.....எதிரகன்றார் - திருவாரூர்ப் "பிறந்தார்களெல்லாம் ஞான மறையோர்களாய் நம் சிவகணங்களேயான பரிசினை நாம் காட்ட நீ காண்பாயாக" என்று அருளிச் செய்து அவர் எதிரே மறைந்தருளினர்.

27

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1891. (வி-ரை.) ஆயபொழுது - ஆய "கடிதணைந்தா"ராய. கடிது அணைந்தாராயினும் அப்பொழுதினுள்; அருளாலேயோ? - அயர்வாலோ - அறியோம் - ஓகாரங்கள் ஐயப் பொருளில் வந்தன; அறியோம் என்றது, மனையார் வருவதற்குள் சிறிதும் தாழாதே உறக்கம் வந்தணைதலின் காரணம் அறியோம் என்றபடி. குளித்துப் பூசைக்கடன் முடித்தலினை எதிர்நோக்கியும், மனைவியார் விரைந்து நன்னீர் கொணர்தலினை எதிர்பார்த்துமிருந்த நாயனாருக்கு இவ்வாறு மிக விரைவில் உறக்கம் வந்தது; அன்றியும், விழிப்புநிலை நீங்குதலுக்கும் உறக்க நிலை புகுதலுக்கும் இடையில் வேண்டும் சிறிது காலம் பெறாது இறையும் தாழாதே உறக்கம் வந்தது; ஆதலின் இதற்குக் காரணம் மேனியசைவின் அயர்ச்சியன்று; பின்சரித நிகழ்ச்சிக்குரிய திருவருளே யாம் என்பது இவ்வினாக்களின் கருத்து. அருளாலேயோ என முன் வைத்தமை இக்குறிப்புத் தருவதாம். அருளாலோ என்னாது அருளாலேயோ என்ற ஏகாரமும் இக்குறிப்புப்பட வைத்ததாம். "தம் மேலைச் சார்புணர்ந்தோ? சரரும் பிள்ளைமைதானோ?" (திருஞான புராண - 63) முதலியவை காண்க. இவ்வாறு கருதவைத்து கூறுதல் ஆசிரியரது தெய்வக் கவிநலச் சிறப்புக்களுள் ஒன்று.

இறையும் தாழாதே மேய உறக்கம் வந்து அணைய - இறையும் - சிறிதும் மேய - பொருந்திய - அருட்குறிப்புப் பொருந்திய. வந்து - விரும்பாது தானேவந்து.

விண்ணோர் பெருமான் - தியாகேசர். "தேவர் பெருமான்...... விண்ணவர்தங் காவலாளர்" (1887). கழல் நினைந்து - துயில் கொண்டார். "மருட் கேவலமுண்டர்க்கும் உறக்க மெய்தாது நின்மலாவத்தை யெய்தி யுறங்கினர் எனக் கொள்க" என்பது ஆறுமுகத் தம்பிரானாருரை. விழிப்பு மாறிய உறக்க நிலையிலும் இறைவரது நினைவு மறக்கப்படா தொழுகுதல் பெரியோர்களது தன்மை. விழிப்பு நிலையினும் மறத்தல் எம்போன்ற கீழோர் இயல்பு. தூய அன்பர் - என்பதும் இக்குறிப்பு. தூய்மையாவது ஆணவ மறைப்பினால் அடிமைத்திறம் மறைக்கப்படாமை.

கனவின்கண் - விதிவிடங்கப் பெருமான் - வந்தருளி - என்றருளிச் செய்து - அகன்றார் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.

1892. (வி-ரை.) வீதிவிடங்கப் பெருமான் - அன்பர் பூசனைக்கு வருவார் போல - நமிநந்தியடிகள் இனிக் குளித்துத் தூய்மை செய்து செய்யவிருக்கும் பூசனையை ஏற்றுக்கொள்ள முன்வருவார்போல, இதனால் நமிநந்தியடிகளார் தமது பூசனையை ஏற்றுக்கொள்ள முன்வருவார்போல. இதனால் நமிநந்தியடிகளார் தமது நித்திய பூசையில் தியாகேசரையே தம் ஆன்ம பூசைக்குரிய நாயகராகக் கொண்டு நியமமாகப் பூசித்தனர் என்பதும், அவ்வாறு செய்யும் பூசைகொள்ளத் தினமும் வரும் வழக்கபோல இறைவர் வந்தருளினர் என்பதுமாம். எங்கும் நிறைந்த இறைவரைத் தமது பூசை முடியும் வரையில் பூசைக்காகக் கொண்ட இலிங்கத் திருமேனியினிடத்து விளக்கமாக எழுந்தருளி யிருக்கவேண்டுமென்று விண்ணப்பித்தலும் அவ்விதமே ஆகுக என்று அவர்அருளுதலும் ஆகிய சிவபூசை ஆகம விதிமுறையும் இங்குக் கருதத் தக்கது.

மேன்மை விளங்கும் திருவாரூர் விளங்கும் - இன்றும் விளங்குதற்கிடமாகிய; மேன்மையாவது திருவாரூரில் தியாகேசர் ஆட்சி புரிந்தருளுதல்.