அவர்தந் தமைக்ககையார் திலகவதி யம்மையாருக்கு மணம் பேசிய கலிப்பகையார் அரசர் சேனைத்தலைவராய் "வேந்தற் குற்றுழி வினைமேற்" சென்று போர் புரிந்த செய்திபற்றியும் குறிப்புப் பெறும்படி இவ்வாறு வேளாண்மையும் போர்த் தொழிலும் பொருந்த உவமை கூறினார். நிறை மருதம் - நிறை - வளம் - பயன் - நிறைந்த; மருதம் - மருதநிலம் வளங்களின் தோற்றங்கள். மருதம் அதன் தோற்றங்களுக்கு வந்தது ஆகுபெயர். கதிர்ச்சாலி - துரங்கம்போல் - என்பனவும் பாடங்கள். 6 1272. | நறையாற்றுங் கமுகுநவ மணிக்கழுத்தி னுடன்கூந்தற் பொறையாற்றா மகளிரெனப் புறம்பலைதண் டலைவேலித் துறையாற்ற மணிவண்ணச் சுரும்பிரைக்கும் பெரும்பெண்ணை நிறையாற்று நீர்க்கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால். |
7 (இ-ள்.) நவமணி...மகளிரென - நவமணி யணிகளணிந்த கழுத்தினோடு கூந்தலின் பாரத்தைப் பெறுக்கலாற்றாது அலையும் மகளிர் போல்; நிறையாற்றும் கமுகு - மணமிக உடைய கமுகுமரங்கள்; புறம்பு அலை தண்டலை வேலித்துறை - புறம்பே அசைகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள விடங்களில்; ஆற்ற...நிலைமையதால் - மிக்க அழகு பொருந்திய மேனியையுடைய வண்டுகள் சத்திக்கும் பெண்ணையின் நிறைந்த ஆற்று மேற்படர்ந்து ஏறும் நிலைமையதாகும். (வி-ரை.) மகளிரெனக் கமுகுபுறம்பு அலை - என்க. கமுகின் கழுத்து என்னும் பகுதியானது பல மணிகளின் நிறங்காட்டும் பூவும் காயும் பழமும் கொண்ட குலைகளைச் சுற்றிலும் கொண்டிருத்தல், பெண்கள் நவமணியிழைத்த அணிகளைக் கழுத்தைச் சுற்றி அணிந்திருத்தல் போன்றதென்பது. "எண்ணார் முத்த மீன்று மரகதம் போற்காய்த்துக், கண்ணார் கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழி" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க. பெண்களின் கழுத்துக்குக் கமுகுக் கழுத்து உவமிக்கப்படுவதனையும் கருதுக. கூத்தற்பொறை - நீண்டு செறிந்த - கமுகிலைகளின் தோற்றம் மகளிர் கூந்தல் போன்ற தெனப்பட்டது. பொறை - சுமை. மிகுதி குறித்தது. பொறை ஆற்றா...தண்டலை - தோற்றம். கமுகஞ் சோலைகளில் புறம்பு ஒரங்களில் உள்ள முதிர்ந்து வளர்ந்த கமுகுகள் காற்றினால் தலை அசைந்து அலையும் நிலை, கூந்தலையுடைய பெண்கள அப்பாரம் பொறுக்கலாற்றாது அசைதல் போன்ற தென்பதாம். தண்டலை வேலி - பெண்ணையின் இருகரையினும் கமுகஞ் சோலைகள் வரிசையாய்த் தொடர்ந்துள்ள நிலை ஆற்றுக்கரையில் வேலியிட்டதுபோல உள்ள தென்றார். இவ்வாறன்றித் தண்டலையின் வேலிகளின் துறையில் என்று கொண்டுரைப்பினு மமையும். வேலித்துறை - துறை - இடம். ஆற்ற - மிகுதியும். மணிவண்ணச் சுரும்பு - அழகிய மேனியையுடைய வண்டுகள். மணி - நீல மணி என்றலும், மணிகள் போன்ற ஒளிதரும் பல நிறங்களையுடைய என்றலுமாம். பொன் வண்டு - பொறிவண்டு முதலிய பெயர் வழக்கும் காண்க. மணி - நீல மணி என்றற்குக் "கச்சி - மணிவண்ணா நீகிடக்க வேண்டா" முதலியவை காண்க. பெண்ணையாற்று நிறை நீர்க்கொழுந்து என்க. நீர்க்கொழுந்து - ஆற்று நீர்ப் பெருக்கில் மேலே மெல்லச் சென்றேறிப்படரும் அலைகள் தாவரங்களின் கொழுந்து போல்வன. கொழுந்தென்றதனால்மென்மையும் தண்மையும் செம்மை நிறமும் குறிக்கப்பட்ட சுவையும் காண்க. |