இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. 1371. (வி-ரை.) முன் இருப்ப, ஊறின்றி என்பது சொல்லெச்சம். முன் - இறந்துபடுவார் என்றெண்ணிய அவர்கள் முன்பு. இருப்ப - இறவாது உயிருடன் இருக்க. அவ் விடம் - விடங்கலந்த அந்தப் பாற்சோறு என அகரம் முன்னறிசுட்டு. வெருக்கொண்டே - திடுக்கிட்டு; அஞ்சி. "வெருக்கோ ளுற்று" (260) என்றவிடத் துரைத்தவை பார்க்க. இவ்விடத்தில்.......என - இந்த அடி முற்றுமோனை. இவ்விடம் - இவன் - என்ற அண்மைச்சுட்டுக்கள் சாதலைச் செய்யும் நச்சரவுபோலப் பெருந்தீமை யொன்று தம்மை மிக அணுகிநிற்பதென்று கொண்ட அவர்களது அச்சமிகுதியான உணர்ச்சி குறித்தன. இறுதி என்ற கருத்துக் காண்க. இறுதி - இறுதி பயப்பதனை இறுதி என்றார். உபசாரம். (இறுதி) நேர்ந்தே விடும் என்பது சொல்லெச்சம். தெவ்விடத்துச் செயல் புரியும் காவலன் - தெவ் - பகைமை. மாதவரையும் தன்கீழ் வாழ்வாரையும் காக்கவும், பகைவரைக் கடியவும் கடமை பூண்டவன் காவலன் எனப்படுவான். "மாநிலங் காவல னாவான் ... அறங்காப்பா னல்லனோ?" (121) என்றது காண்க. இங்கு இம்மன்னவன் கடியும் தொழில் ஒன்றனையே மேற்கொண்டவன் என்பது. உற்றாரை மற்றாராகக் கொண்டு தெவ்விடத்துச் செய்யும் தொழிலை மேற்கொண்டனன் என்பதும் குறிப்பு. இங்கு இவ்வாறு நின்றனன்; பின்னர் அவனே "ஆண்ட அரசினைப் பணிந்து" (1410) செயல் புரிபவன் என்பதும் தொனி. தெவ்விடத்துச் செய்யவேண்டிய செயலை இவ்விடத்துப் புரியும் என்க. செப்புவார் - செப்புவாராகி. முற்றெச்சம். செப்புவார் - என்றார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. 106 1372. (வி-ரை.) ஊட்டிட - உண்ணச்செய்ய. "அமுதுசெயப் பண்ணினார்" (1368). விடம்தீர் தஞ்சமுடை மந்திரத்தால் - தஞ்சமுடை - பற்றுக்கோடாகவுள்ள - விடம் தீர்வு வேண்டுபவர்கள் தஞ்சமாகக் கொள்ளும் - மந்திரம். மந்திரத்தால் - மந்திரத்தின் உதவியினால். மந்திரம் - மந்திரத்தினாற் பெறும் பயன் குறித்தது. சாதியாவகை சாதித்தல் - சார்ந்து பலன் தருதல். சாதியா - விடம் சார்ந்து தனது தொழிலைச் செய்யாத. எஞ்சும் வகை - எஞ்சுதல் - குறைதல் - மீதமாகுதல். இங்குத் தம்மிடத்து நின்றும் - இப்வுலகினின்றும் - நீங்குதல் குறித்தது. எம்முயிரும் - துஞ்சுவது திடம் - என்றது சமயச் சோர்வுபடவரும் காலத்து வலிதாய் உயிர் துறக்கும் அவர்களது சமய வழக்குக் குறித்தது. நின்முறை - துஞ்சுவதுதிடம் - என்றது "உன்னுடைய நிலைநின்ற தொல்வரம் பின் நெறியழித்த" (1354) என்று தொடங்கியதனைப் பின்பற்றிக் கூறியதாம். அரசனாற் காக்கப்பட்ட சமய நெறியை அழித்தல் அரசநெறியை அழித்ததாகுமென்பது. துஞ்சுவதுதிடம் - துஞ்சுதல் - இங்கு அழிதல் என்ற பொருளில் வந்தது. அமணர்களை யறியாமலே தருவருளால் அவர்களது வாக்கில் வைத்துப் பின்னிகழவுள்ள உண்மை வெளிப்படுதல் காண்க. இது குறிப்பு என்னும் அணி. முன் உரைத்தவை பார்க்க. துஞ்சுதல் - இறத்தல் என அமங்கலக் குறிப்புப்பட நிற்பதும் குறிக்கொள்க. |