பக்கம் எண் :


14திருத்தொண்டர் புராணம்

 

கருமேதி வாவியினுட் படிதல் மேகம் கடலினுட் படிதலுக்கு உருவும் மெய்யும் தொழிலும் பற்றி வந்த உவமம். கன்றுபோல் வரால் மடிமுட்ட என்பது மெய்யும் தொழிலும்பற்றி வந்த உவமம். இவை தன்மை நவிற்சியினை உள்ளுறுத்த நிலையம் காண்க. மேதி வாவிகளுள் மேயப் படிந்து உழக்குதலும்வரால் முட்டுதலும் கண்கூடாகக் காண உள்ள
காட்சிகள்.

வாள்கொண்டு வெட்டினான் என்புழிப்போல மேதிதனைக் கொண்டு என்பதில் கொண்டு என்றதனைக் கருவிப்பொருளில் வந்த ஆல் உருபாகக் கொண்டு மேதிகளால்வாவி திரை கரை புரள்வ என்க.

வாவி - கடல்; மேதி - மேகம்; வரால் - மேதிக்கன்று; வரால் முட்டுதல் - கன்று முட்டுதல்; மேதி பால் சொரிதல் கன்றென நினைந்து சொரிதல்போன்றன என்றிவ்வாறு உவமம் தொடர்ந்து பொருத்திக் கொள்க.

திரை கரைபுரளுதல் மேதி படிந்துழக்குதலால் ஆவதனைப், பால்சொரிந்த பெருக்கினால் ஆவதாகக் காட்டும் குறிப்புடன் கூறிய நயமும் காண்க. மேதி படி தல் - வரால் பாய்தல் - பால் பெருகுதல் மூன்றும் வாவித்திரை கரையிற்புரளக் காரணமாதலும் காண்க. மேதிகளையும் உடன்கொண்டு புரள்வன என்றலுமாம்.

மலர் மேய்வான் - பருமேனி - என்பவனவும் பாடங்கள்.

8

1274.

மொய்யளிசூழ் நிரைநீல முழுவலயங் களினலையச்
செய்யதளிர் நறுவரிலிற் செழுமுகையி னகஞ்சிறப்ப
மெய்யொளியி னிழற்காணு மாடியென வண்மதியை
வையமகள் கையணைத்தாற் போலுயர்வ மலர்ச்சோலை.

9

(இ-ள்.) வெளிப்டை. மொய்த்த வண்டுகள் சூழ்ந்த வரிசைகள் முழுநீல மணிகளழுந்திய வளையல்களைப் போல அலைய, சிவந்த தளிர்களாகிய விரல்களும் செழித்த அரும்புகளாகிய நகங்களும் கொண்ட கையினால், நிலமகள், தனது மெய் ஒளியின் நிழலைக்காணும் கண்ணாடி இது என்று, வெண்மதியை அணைத்தது போல மலர்ச் சோலைகள் வானத்தில் உயர்வன.

(வி-ரை.) இப்பாட்டு மெய்யும் தொழிலும் பற்றி யெழுந்த பல உவமங்களை உள்ளுறுத்த உருவகமும் தற்குறிப்பேற்றமும் தொடர்ந்து விரவிய கலவையணி.

வையம் - மகள்; மலர் சோலையின் நீண்ட மரநிரைகள் - அவளது கைகள்; அவற்றைச்சுற்றிச் சூழ்ந்த கருவண்டின் குலம் - கைகளைச் சூழ்ந்த நீலவளையல்கள்; மரங்களின் சிவந்த தளிர்கள் - கைவிரல்கள்; அரும்புகள். விரல்களின் நகங்கள்; மரங்கள் வானளவோங்குதல் - மகள் கையினால் மதியைக் கண்ணாடி என அணைத்தல்; அவ்வாறணைப்பது - மெய்யொளியி னிழற்காணும் ஆடி என; என்று அணிகளைத் தொடர்ந்து விரித்துக் கொள்க.

வலயங்களின் - இன் - உவமப் பொருளது. அலைய - சூழ. தளிர் - விரல். உருவகம். விரலில் - நகம் சிறப்ப என்க. இல் - ஏழனுருபு.

முகையின் - முகை - அரும்பு. முகையாகிய, இன் - பண்பு குறித்த சாரியை.

மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி - கண்ணாடியிற் காணும் ஒரு பொருளின் வடிவம் அப்பொருளின்மேற் படிந்த ஒளியின் நிழலேயாகும் என்பது நிழற்காணும் ஆடி என்பதனாலுணர்த்தப்பட்டது. இது நவீன ஒளிநூலோர் முயன்று கண்டதோர் உண்மை. ஆடி - கண்ணாடி என வழங்கப்படும். மதியை ஆடி என - உருவுவமம். வெண்மையாலும, நிலத்தின் நிழல்போன்ற முயற்கறை எனப்படும் தோற்றத்தாலும் ஆடியின் பண்பு மதிக்கு ஏற்றப்பட்டது.