சூழ்வினை - தீமையினை எண்ணிச்சூழும் வஞ்சகத்தொழில். சூழ்ச்சியும் - வினையும் இங்கு வஞ்சகமாகிய தீய சூழ்ச்சியினையும் தீவினையையும் குறித்தன. துறை நின்றார் - வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்" (1347) என்று தொடங்கிய தனையே தொடர்ந்து செய்து அவ்வழியில் நின்றவர். நின்றார் - நின்றாராகிய அமணர். வினையாலணையும் பெயர் சுட்டுப்பெயராய் நின்றது. இவ்வாறன்றி, வினைமுற்றாகவே கொண்டுரைப்பினு மமையும். நிரைமுறையும் - நும்முறையும் - துஞ்சுமது - என்பனவும் பாடங்கள். 107 1373. | மற்றவர்தம் மொழிகேட்டு மதிகெட்ட மன்னவனுஞ் "செற்றவனை யினிக்கடியுந் திறமெவ்வா" றெனச்செப்ப, வுற்றவரு "மந்திரசா தகநாங்க ளொழித்திடநின் கொற்றவயக் களிற்றெதிரே விடுவ" தெனக் கூறினார் |
108 (இ-ள்.) வெளிப்படை. மற்று அவர்களுடைய சொல்லைக்கேட்டு, மதிகெட்டவனான மன்னவனும், "நமது நெறியை அழித்த அவனை இனித் தண்டிக்கும் திறம் எவ்வாறு?" என்று கேட்க, உற்ற அவர்களும், "மந்திர சாதகங்களை நாங்கள் நீக்க, உனது வெற்றியுடைய வலிய யானையை அவன் முன்னே விட்டு இடறச் செய்வதுவே செய்யத்தக்க உபாயம்" என்று சொன்னார்கள். (வி-ரை.) மதிகெட்ட மன்னவனும் - ஒருமுறைக் கிருமுறையும் அவர்களது சொல் பயனற்றுப் போதலைக்கண்டும் அவர்களுடைய சூழ்ச்சியினுட்பட்டு உண்மையறிந்து கொள்ளமாட்டாது மயங்கி மதியிழந்து நின்றதனால் மதிகெட்ட என்றார். கேட்டுச் - செப்ப என்று கூட்டுக. கேட்டு - அஞ்சுவது திடம் என்ற சொல்லைக்கேட்டு. கேட்டுக் - கெட்ட என்றுகூட்டி மதிகெடுதலுக்குக் காரணம் கூறியதாகக் கொண்டுரைத்தலுமாம். செற்றவனை - நமது நெறியை என்பது அவாய் நிலையான் வந்தது. "நின்முறையும்" என முன்பாட்டிற் கூறியதும், "தொல்வரம்பி னெறியழித்த" (1354) என்றதும் காண்க. இனிக்கடியும் திறம் - இனி என்றது முன்னர்ச்செய்த இரண்டு திறமும் வலியில்லாத தொழிந்தமையின் அவ்வாறு ஒழியாத வகையில் இனிச் செய்வது என்ற குறிப்புப்பட நின்றது. கடியும் என்றது தண்டிக்கும் என்ற பொருள்தரினும், இங்கு உயிர் போக்குதலாகிய கொடுந்தண்டம் குறித்தது. உற்றவர் - உற்ற அவர் என்பது உற்றவர் என நின்றது. அரசன் தனக்கு உற்றவராகக் - நன்மை புரிபவர்களாகக் - கொண்ட அவர் என்பது குறிப்பு. உற்ற - கற்றுக்கொண்ட, அரு - அரிய - என்றது இராமநாத செட்டியா ருரைக்குறிப்பு. மந்திர சாதக நாங்கள் ஒழித்திட - "மந்திரத்தாற் சாதியா வகைதடுத்தான்" (1372) எனத் தாமே கூறினார்களாதலின், அவ்வாறு உள்ள மந்திர பலத்தினை எவ்வாறு தடுப்பது என அரசன் ஐயப்படாதபடி, அதனை நாங்கள் அதற்கெதிர் மந்திரங்களால் தடுத்து விடுவோம் என்று பின்னர்க்கூறப்போகும் தமது தண்டச் சொல்லை முகவுரைப் படுத்திக்கொண்டனர். ஒரு மந்திரத்தின் பலத்தை அதனினும் பெரியதொரு மந்திரம் போக்கிவிட வல்லது என்பது நமது நாட்டில் பெரியோர் கைகண்ட முறை. கந்தபுராணத்தில் உயுத்த காண்டத்தில் வரும் பல போர்களிலும் இம்முறையைக் காணலாம். "வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்" என்ற பட்டினத்தடிகள் திருவாக்கு இதனைக் கருதியது. "ஆதிமந்திர மஞ்செழுத் தோதுவார் நோக்கு, மாதிரத்தினு மற்றைமந் திரவிதி வருமே" |