(திருஞான - புரா - 698) என்பதும் காண்க. சமணர்கள் மந்திரம் முதலிய கலை ஞானங்களில் வல்லவர்களாயினமையால் அறிவில்லா மக்களை இவ்வாறு மயக்க வல்லவராயினர் என்க. ஒழித்திட - நீக்க. அவரது மந்திர சாதகத்தை வலியிலதாகச் செய்ய. ஒழிந்திட - என்பது பாடமாயின், நாங்களே மந்திரவலிமையாற் செய்யக்கூடியதாயினும் போதிய காலமின்மையால் அதனை நாங்கள் செய்யாதொழிய என்று உரை கொள்க. களிற்றெதிரே விடுவது - மதமுடைய யானையை அவன் எதிரே விடுத்து இடறச்செய்தல். செய்யத்தக்க உபாயம் என்பது சொல்லெச்சம். மதச் செருக்குடைய யானை மந்திரத்தால் அடங்காதென்பது அவர் கருத்து என்பது இராமநாத செட்டியா ருரைக்குறிப்பு. இடுவதென - இடுகவென - என்பனவும் பாடங்கள். 108 1374. | மாபாவிக் கடையமணர் வாகீசத் திருவடியாங் காபாலி யடியவர்பாற் "கடக்களிற்றை விடு" கென்னப், பூபாலர் செயன்மேற்கொள் புலைத்தொழிலோ னவர்தம்மேற் கோபாதி சயமான கொலைக்களிற்றை விடச்சொன்னான். |
109 (இ-ள்.) வெளிப்படை. பெரும் பாவிகளுள்ளும் கடையராகிய சமணர்கள் வாகீசத் திருவடிகளாகிய, காபாலி யடியவர்மேல், "மதயானையை ஏவி விடுக!" என்று சொல்ல, உலக காவலரின் தொழில் பூண்டும் புலைத்தொழில் செய்வோனாகிய அந்த மன்னவன் கோப மிகுதியுமுடையதாகிய கொலை யானையை அவர் மேல் விடும்படி சொன்னான். (வி-ரை.) மாபாவிக் கடை - வஞ்சனையும், கொலையும், பாதகமும், பொறாமையும், தமது சமயத்தினுமிழிபும் உடையாராதலின் அவர்களது கீழ்மையை இவ்வாறு எடுத்துக் கூறினார். வாகீசத் திருவடி - திருநாவுக்கரசு என்ற பெயர் சூட்டப்பட்ட பேரடியவர். திருவடி - அடிமைக்கட் சிறந்த பெரியோர்க்கு வழங்கும் சைவ மரபுப்பெயர். முனிவர். வாகீசர் - திருநாவுக்கரசர். காபாலி யடியவர் - காபாலி - பிரமன் தலையோட்டைக் - கபாலத்தைக் - கையில் ஏந்தியவர். சிவபெருமான். உலகம் படைக்கும் பிரமன் றலையை ஏந்தித் தாம் அழிவில்லாதிருக்கும் பெருமா னடியவராதலின் யானையினால் அழிவின்றி இருப்பர் என்பது குறிப்பு. விடமுண்ட பெருமானடியவராதலின் நஞ்ச மமுதமாவதும் அற்புதமாமோ? என்று முன்னர்க் (1370) கூறிய கருத்தையும் இங்குக் கருதுக. பூபாலர் - புவியிலுள்ள எல்லா உயிர்களையும் காக்கின்றவர். செயல் - உலகங் காவல்புரிதல். அதனை மேற்கொள் புலைத்தொழிலோன் என்றது காக்கக் கடவியனா யிருந்தும் அதனைவிட்டு நீதிமுறையில்லாத கொலைத் தொழிலைச் செய்வோன். புலைத்தொழில் - நீதியற்ற கொலை என்ற பொருளில்வந்தது. அரசர் ஒருபாற் கோடுதலில்லாது எஞ்ஞான்றும் நீதிதவறாது உலகங் காக்கக்கடவர் என்ற உண்மையினை வற்புறுத்திய ஆசிரியரது அமைச்சுரிமைக் கவித்திறம் காண்க. கோபாதிசயமான - யாவரும் வெருட்சியடையத்தக்க மிக்க கோபம் மூண்டதான. அதிசயம் - இங்குப் பெருமிதம் விளைக்கும் மிகுதி குறித்தது. கோபாதிசயம் - பட்டத்து யானையின் பெயர் என்றுரைப்பாருமுண்டு, "பட்டவர்த்தனமாம்" (561) என்றதுபோல. "கடலிற்படு கடையின், முடிவிற் |