கனலென முற்சின முடுகி" (1377) என்று பின்னர் விரிக்கின்றதனால் இங்கு அதன் சினமிகுதியே கூறப்பட்ட தென்பது. கொலைக்களிறு - கொல்லும் செயல்புரியும் யானை. கொல்லுதலிற் பழகிய என்க. மனிதரைக் கொல்லுதல் யானையின் இயல்பன்றாதலின், கொலையிற் பழகிய யானையை விடச்சொன்னான் என்பதாம். முன்பாட்டிற் கூறியபடி அமணர்கள் "கடக்களிற்றை விடுக" என்றனரேனும் அவர்கள் சொல்லால் மயங்கி மதிகெட்ட மன்னவன் அதினின்றும் மேற்பட்ட கடுமைத்திறமுடன் கூடக் "கோபாதி சயமான கொலைக்களிற்றை விட" என, மதத்துடன் கோபமும் கொலைப் பழக்கமும் உடைய யானையை விடுக என்றனன். குலக்களிற்றை - என்பதும் பாடம். 109 1375. | கூடத்தைக் குத்தியொரு குன்றமெனப் புறப்பட்டு மாடத்தைப் பறித்திட்டு மண்டபங்க ளெடுத்தெற்றித் தாடத்திற் பரிக்காரர் தலையிடறிக் கடக்களிற்றின் வேடத்தால் வருங்கூற்றின் மிக்கதொரு விறல்வேழம். |
110 (இ-ள்.) ஒருவிறல் வேழம் - ஒப்பற்ற வலிமையுடைய அந்த யானையானது; கூடத்தை ...... இடறி - யானைப் பந்திகளைப் பிடுங்கி, ஒரு மலைபோலப் புறப்பட்டு மாடங்களை இடித்து மண்டபங்களை எடுத்தழித்துக், குத்துக்கோற்காரர்களின் தலைகளைக் கால்வீச்சினாலிடறி; கடகளிற்றின்.......மிக்கது - மதயானையின் உருவத்தோடு வருகின்றதொரு கூற்றினைவிட மிக்கிருந்தது. (வி-ரை.) வேழம் - குத்திப் - புறப்பட்டு - பறித்திட்டு - எற்றி - இடறிக் - கூற்றின் மிக்கது - என்று கூட்டிமுடிக்க. கூடம் - யானைக்கூடம். கூடத்தைக் குத்துதல் யானைப் பந்தியைத் தகர்த்தல். குன்றமெனப் புறப்பட்டு - அசையா நிலையுள்ள மலை அசைந்து வருவதுபோலக் கிளம்பிவந்து. மெய்பற்றிவந்தவுவமம். மாடம் - வழியில் உள்ளவை; மக்கள் குடியிருப்பவை. மண்டபங்கள் - வழியிடைப்பட்ட பொது இடங்கள். தாடத்தில் - கால்வீசுதலினால். பரிக்காரர் - குத்துக்கோற்காரர்; கோல் ஏந்தி வழிவிலக்கிச் செல்வோர். எறிபத்த நாயனார் புராணம் பார்க்க. களிற்றின் வேடத்தால் வரும் கூற்றின் - கூற்று - இயமன் - உடலினின்றும் உயிரைக் கூறுபடுத்திப் பிரிப்பவன். "கூறு படுத்தலிற் கூற்றெனப்படுமே" (அகத்தியம்). களிற்றின் வேடத்தால் வரும் என்றது கூற்றுவன் இவ்வுலகில் மேற்கொண்டு வரும் பல உருவங்களுள் இங்கே களிற்றின் வேடத்தினால் வந்ததுபோல என்றதாம். மற்றும உலகில் நோய் உருவிலும், பகைவர் புலி முதலிய விலங்குகள் முதலாகிய உருவிலும் வந்து உயிர்கொள்வன் கூற்றுவன். இவை உயிர் பிரிப்பதற்கு வெளிக் காணப்படும் காரணங்களேயன்றி உண்மையில் இவ்வுருவங்களுள் மறைந்து கூற்றுவனே உயிர் கவர்கின்றான் என்பது துணிபு. திருவிளையாடற் புராணத்துட் பழியஞ்சிய திருவிளையாட்டின் வரலாறு இங்குச் சிந்திக்கத் தக்கது. கூற்றின் மிக்கது - அதனைவிட மிக்குக் கொடுமை காட்டிற்று என்பதாம். வினைபற்றி எழுந்த உவமம். ஒரு - ஒப்பற்ற. ஓர் என்று எண்ணுப் பொருளிலுரைப்பாரு முண்டு. மண்டபத்தை - மதித்திட்டு - மறித்திட்டு - மறுத்திட்டு - மிகைத்ததொரு - என்பனவும் பாடங்கள். 110 |