பக்கம் எண் :


144திருத்தொண்டர் புராணம்

 

மிக விரைந்து சென்று; அடுசெயலில் ... கனலென - அழிக்கும் தொழிலில் பொங்குகின்ற கடலினுள் ஊழி முடிவில் எழுகின்ற வடவைத் தீயைப்போல; முற்சின முடுகி - பெருஞ்சின மிகுந்து; கடுகியதே - (அந்த யானை) வேகத்துடன் வந்தது.

(வி-ரை.) இடி உற்று எழும் ஒலி - இடி - மின்னலின் தாக்கு. உற்று - உவம உருபு. எழும் ஒலி - அந்தத் தாக்குதலினால் கிளம்பும் ஓசை. இங்கு ஒலி என்றது ஐம்பூதங்களுள் வானினது சிறப்புக் குணத்தை.

திசை இபம் - திக்கசங்கள். எட்டுத் திக்குக்களிலும் உலகங்காக்க எட்டு யானைகள் நிறுவப்பட்டு உள்ளன என்பது மரபு. திசையிபம் - யானை நோக்கி வரும் அந்தத் திக்கிலுள்ள திக்குக் கசம் என்றதுமாம். உட்குதல் - அஞ்சுதல்.

அடியிற்புக்கு உறப் படிநெளிய - என்க. யானை வேகமாகச் செல்லும்போது காற்சுவடு நிலத்தில் அழுந்துதல் குறித்தது.

படர் பவனக்கதி - விசையாக அடிக்கும் காற்றின் வேகம். கதி - விசையிற் - கடிதுற்று என்ற மூன்றும் விரைவு குறித்தன. மிக்க வேகத்தில் என்றபடி.

அடுசெயலில் கிளர்கடல் எனவும் அடுசெயலிற் படுகனல் எனவும், அடுசெயலில் முடுகி எனவும் கூட்டியுரைக்க நின்றது. கிளர்கடல் - பொங்கி மேல்வரும் கடல். கடலிற் படுகனல் - குதிரை முகத்தையுடைய வடவை என்ற பேருடையதொரு தீயானது கடடிலின் வயிற்றினுள் அவியாது நிற்பதென்றும், அது ஊழிக்கடையில் பெருகிக் கடலையும் சுவறச்செய்து உலகை அழிப்பதென்றும் கூறுவர்.

கனலென முற்சினம் - வினைபற்றி வந்த உவமம்.

கடுகுதல் - விசையில் அணுக வருதல்.

எட்டுத்திக்கு யானைகளாவன :- கிழக்கில் ஐராவதம்; தென்கிழக்கில் புண்டரிகம்; தெற்கில் வாமனம்; தென்மேற்கில் குமுதம்; மேற்கில் அஞ்சனம்; வடமேற்கில் புட்பதந்தம்; வடக்கில் சாருவபூமம்; வடகிழக்கில் சுப்பிரதீபம் என்னும் பெயருடைய யானைகள் என்ப.

படிபுக்கற - கடிதுற்றிடு - செலவிற்கிளர் - என்பனவும் பாடங்கள்.

112

1378.

மாடுற்றணை யிவுளிக்குல மறியச்செறி வயிரக்
கோடுற்றிரு பிளவிட்டறு குறைகைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதிறெற்றிகள் சரியப்புடை யணிசெற்
றாடுற்றகல் வெளியுற்றதவ் வடர்கைக்குல வரையே.

113

(இ-ள்.) அவ் வடர்கைக் குலவரையே - கொலைசெய்யும் கையினையுடைய மலைபோன்ற அந்த யானையானது; மாடுற்று ... மறிய - பக்கத்தில் வருகின்ற குதிரைக் கூட்டங்கள் அழியவும்; செறிவயிரக்கோடு ... முறிய - திணிந்த வயிரமுடைய கொம்பினால் இரண்டு பிளவாகக் கூறுபடுத்தி அவ்வாறு இற்ற துண்டத்தைக் கையிற்கொண்டு முடியும்படியாக; சாடுற்றிடும் - அழிவு செய்யப்படும்; மதில் ....... செற்று - மதிலும் திண்ணைகளும் சரியும்படிக்கு அழகு அங்கங்களை அழித்தும்; ஆடுற்று - இவ்வாறாகிய அழிவுச் செயல்களைச் செய்து; அகல்வெளியுற்றது - பரந்த வெளியிடத்திற் சேர்ந்தது.

(வி-ரை.) மாடுற்று அணை இவுளிக்குலம் - மதயானை செல்வதால் இருபுறமும் வழி விலக்கிவரும் வீரர்கள் ஏறிவரும் துணிபால் விலகாத குதிரைகள். இவுளி - குதிரை.

செறி வயிரக்கோடு - முதிர்ந்து முற்றியதால் வயிரம் பாய்ந்த கொம்பு. வயிரமணிகளழுத்திய கிம்புரியினையுடைய கொம்பு என்றலுமாம்.

கோடுற்று.....சாடுற்றிடும் - கொம்பினாற் குத்தி இருபிளவாக்கி அதில் ஒரு துண்டத்தைக் கையிற்கொண்டு ஏனைப்பகுதியை அழியும்படி சாடும் மதில்தெற்றி.