பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்145

 

சாடுதல் - மோதி அழித்தல். இது, யானை மதிலையும் திண்ணையையும் அழித்த வகை. சாடும் - வினைமுற்றாகக் கொண்டு குதிரைகளை அழித்த வகையாகக் கொண்டுரைப்பாருமுண்டு. தெற்றி - திண்ணை. புடைஅணி - மதிலிலும் தெற்றிகளிலும் அழகு செய்வனவாகப் பக்கங்களில் அமைந்த அமைப்புக்கள்.

ஆடு உற்று - ஆடு - அடு என்பது முதனீண்டுவந்த தொழிற் பெயர். அடுதலைச் செய்து. அடு - அழித்தற்றொழில். ஆடல் செய்து என்பாருமுண்டு.

கைக்குலவரை - கையையுடைய மலைபோன்றது. உருவகம். கைமலை என்ப.

அணிசென் - அறிசெற் - என்பனவும் பாடங்கள்.

113

1379.

பாவக்கொடு வினைமுற்றிய படிறுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிர்முற்கொடு நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செறு பொருகைக்கரி யினையுய்த்திட வெருளார்
சேவிற்றிகழ் பவர்பொற்கழ றெளிவுற்றனர் பெரியோர்.

114

(இ-ள்.) பாவக் கொடுவினை ... கொடியோர் - பாவம் பொருந்திய கொடிய செயல் முதிரும் பொருட்டு வஞ்சனையை மேற்கொண்டு கொலைசெய்ய எண்ணிய கொடியோர்களாகிய சமணர்கள்; நாவுக்கரசு எதிர்முற்கொடு நணுகி - திருநாவுக்கரசரெதிரே முற்படக்கொண்டு அணுகிவந்து; செறு பொரு கைக் கரியினை - பகைவரைப் போர்செய்து கொல்லுகின்ற துதிக்கையினையுடைய யானையை; கருவரைபோல் ஏவி உய்த்திட - கரியமலை யொன்றினை ஏவுவதுபோல ஏவிச் செலுத்தவும்; பெரியோர் - பெரியவராகிய அரசுகள்; வெருளார் - சிறிதும் அஞ்சாதவராகி; சேவில் ... தெளிவுற்றனர் - இடபத்தின்மேல் விளங்குகின்ற சிவபெருமானது பொன்னார்ந்த திருவடிகளையே தெளிந்து கொண்டிருந்தனர்.

(வி-ரை.) பாவக் கொடுவினை முற்றிய - தாம் இதுவரைசெய்துவந்த வஞ்சனை - பொய் - கொலை - துரோகம் முதலிய பாவமுடைய கொடுந் தீவினைகள் எல்லாம் ஒன்றொன்றாகக் கூடி முதிரும்படி. முற்றிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். முற்றிய - உய்த்திட என்று கூட்டிமுடிக்க. முதிர்ந்தமையால் என்றலுமாம்.

முற்றிய படிறு - என்று பெயரெச்சமாகக் கொண்டு கூட்டி உரைப்பினுமமையும்.

படிறு - பொய். உண்மையை மறைத்துச் செய்யும் வஞ்சம். "படிற்று வாய்மொழி பலபா ராட்டி, யுள்ளத் துள்ளது தெள்ளிதிற் கரந்து, கள்ள நோக்கமொடு கை தொழு திறைஞ்சி" (திருவாரூர் - மும் - கோ. 19) என்ற திருவாக்கு இதன் தன்மையை நன்கு விளக்குகின்றது.

கருவரைபோல் ஏவி - கரியமலை ஒன்றினை ஏவுதல்போலச் செலுத்தி. ஏவுதல் - இவரைக் கொல் என்று பயில்காட்டி விடுதல். பழக்கப்பட்ட யானைகள், ஏவுதல் மொழியறிந்து ஏவின காரியங்களைச் செய்யவல்லன. வரைபோல் - கரியினை என்று கூட்டி உரைத்தலுமாம்.

உய்த்திடுதல் - மேற்செல்லச் செலுத்துதல்.

வெருளார் - வெருளாராகி. எதிர்மறை வினைமுற்றெச்சம்.

வெருளார் - தெளிவுற்றனர் என்று கூட்டி முடிக்க. வெருளார் சேவில் - என்று கூட்டி வெருட்சிமிக்க இடபம் என்றுரைப்பதுமாம். வெருட்சியாவது அடையலர்பால் நிகழச் செய்வது. "அண்ண லரண்முர ணேறும்" என்று தேவாரக் கருத்துக் குறிப்பு.

கழல் தெளிவுறுதல் - சிந்தித்து அதன் முதிர்ச்சியில் அழுந்தி நின்று அதன் வயப்படுதல். "தாணிழலைத் தலைக்கொண்டே - மூண்டமன நேர்நோக்கி முதல்வ