செயல்பற்றிய குறிப்பு இத்தேவராத்தினுட் காணப்படுவதும் கருதுக. இவ்வாறே எலும்பைப் பெண்ணாக எண்ணியபோது ஆளுடைய பிள்ளையார் "தேவதேவனை ... அமுதைப் - பாவைபாகனை"ப் பரவிப் போற்றினார் (திருஞான - புரா - 1078) என்பதும் கருதுக. விண்ணவர் தம்பெருமான் என்றது துன்ப நீக்குதலையும், விடை உகந்தேறும் பிரான் என்றது இன்பந் தருதலையும் குறித்து நின்றன. இவையே நிக்கிரகம் அனுக்கிரகம் என்றும், கோபம் பிரசாத மென்றும் கூறப்படுவன. இத்தேவாரத்தினுள்ளும் "உரிவையுடையும்" என்றதனை அடுத்து "அண்ண லரண்முரணேறும்" என்றதும் கருதுக. "பதைத்தெழு வார்மனத் துள்ளே, கலமலக் கிட்டுத் திரியும் கணபதி யென்னும் களிறும்" (5), "வேழமுரித்த நிலையும்" (9) என்பனவும் இக்குறிப்புக்கொண்டன. சுண்ணவெண்......பதிகத்தை - பதிகத்தின் தொடக்கம் குறிக்கப்பட்டது. தொடுத்த - என்ற தொடருடன் தொடங்கி வைத்த. மண்ணுலகுய்ய எடுத்து - "இந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறு" (திருவாசகம்) என்றபடி வானிடத்தவரும் கீழிடத்தவரும் மண்ணிடத்தவராய் வந்து சிவ புண்ணியங்கள் செய்தே ஈடேற வேண்டியிருத்தலின், மூவுலகத்தவரு மென்னாது "மண்ணுலகுய்ய" என்றார். மேல் கீ ழுலகரும் மண்ணுலகில் வந்த ஞான்றே இப்பயன் பெறுவாராதலின் மண்ணுலகொடு புணர்த்திக்கூறினார். அன்றியும் பொற்கழல் தெளிவுற் றமர்ந்திருத்தலே யானையைத் தடுக்கத் தமக்கு அமையும்; பதிகம் ஓதுதல் வேண்டா; ஆதலின் பதிகம் அருளியமை உலகத்தவர் அதனை ஓதிப் பயன்பெறுமாறு பிறர்நலங் கருதியதேயாகும் என்பதும் மண்ணுலகுய் எடுத்துப்பாடுகின்றார் என்பதனாற் பெறப்படுதல் காண்க. மண்ணும், பிற உலகும் என்று உம்மைத் தொகையாக்கி உரைக்கவும் நின்றது. மகிழ்வுடனே - "வெருளார்" - (1379) என்றமையால் அவர்தம் மனத்தினுள் அச்சமின் றென்பதாயிற்று. மகிழ்வாகிய மனநிலை, யாவரும் பெறும் உறுதியாகிய நன்மை கருதி எழுந்தது. பாடுகின்றார் - முற்றெச்சம். பாடுகின்றாராகிப் - பாடி அறைந்தார் - என வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. "சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த என்று பதிகம்பாடத் தொடங்கிவிட்டமைகூறி, மேல்வரும் பாட்டில் "அஞ்சுவதில்லை என்றென்றே" என அப்பதிகத்தின் முடிபு கூறுகின்றாராதலின் பாடுவார் என்னாது பாடுகின்றார் என நிகழ்காலத்தாற் கூறினார். இப்பாட்டு அத்திருப்பதிகத்தின் சந்தத்தில் அமைத்துப் பாடிய யாப்பமைதியுங் கண்டு கொள்க. 115 1381. (வி-ரை.) விட்ட - கொல் என்ற ஏவி உய்த்திட்ட (1379). சினப் போர் மத வெங் களிறு - அடை மொழிகள் பலவும் புணர்த்தது யானை கொலைமூண்டு வந்த கொடுமையின் செறிவு குறித்தது. களிற்றினை நோக்கி - என்றென்றே பாடி அறைந்தார் என்க. களிற்றினை நோக்கிப் பாடி என்றது, தெளிவுற்று அழுந்திய நினைவின் பலன் அதனிடத்துச் சென்று அதன் கொடுமையை மாற்ற வேண்டியிருத்தலின் என்பது. நோக்குதலாற் கண் பார்வை பயன் செய்யுமென்பது ஞான சாத்திரமும் உலக நூலும் கண்ட வுண்மை. பார்வைத் தீக்கையின் உள்ளுறையும் அது. அருளுடைய ஆசாரியனது நோக்கினால் ஆன்மாவை அநாதியே கட்டி நானென்றெழுந்த ஆணவ மதமும் அடங்குமென்றால் இந்தக்களிறு மதந்தணிவது பெரிதாமோ? ஆளுடைய பிள்ளையார் திருமயிலையில் என்பு நிறைந்த மட்குடத்தைக்கண்டு, அருணோக்கால், அங்கமங்குடைய பூம்பாவை பேர் செப்பி, ‘உலகர் முன் வருக!' என உரைப்பார் |