(திருஞநன - புரா - 1086, 1087) என்பதும் இங்கு வைத்துச் சிந்திக்க. மனோவசீகரச் சாதகர் தம் வயப்படுத்தும் மாணவனை நோக்கிச் செய்யும் முறையும், பிறவும் கருதுக. நோக்குதல் அழுந்திப் பார்த்தல். செஞ்சடை நீண்முடிக் கூத்தர் - பிறையும், கங்கையும் சூடிநின்ற தன்மையால், அடைந்தவரைக் காக்கும் தன்மையை வெளிப்படப் புலப்படுத்தி நிற்பது இறைவனது சடைமுடி. நீண்முடி - அருட்பெருக்கில் ஒருகாலும் உலவாது நீளும் தன்மை குறித்தது. கூத்து - அருளின் வரும் நித்தமாகிய ஐந்தொழில். "அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததோர் கூத்தும்" என்பது இப்பதிகம். தேவர் பிரானார் - தலைவராம் பெரியவர். பெருந்தேவர் - மகாதேவர். வெஞ்சுடர்......இல்லையென்றென்றே - இது அத்திருப்பதிகத்தின் முடிபும், கருத்துமாம். வெஞ்சுடர் மூவிலைச்சூலம் - சூலம் இங்கு ஆயுதப் பொதுமையை உணர்த்தி யானையை அடக்கும் அங்குசத்தினையும் குறிப்பாற் பெற உட்படுத்துகின்றது. பாசமும் அங்குசமும் ஏந்திய சிவபெருமானது அருளவசரங்களையும் கருதுக. வெஞ்சுடர் என்றது அச்சூலம் எறிந்து பயன்படுத்தப் படாமலே, அதன் சுடரே குறித்த பயனை விளைவிக்கவல்லது என்றபடி. "சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு" என்ற நாயனார் திருவாக்கும் காண்க. "முளைத்தெழு மூவிலை வேலும்", என்ற பதிகக்குறிப்புப் பாராட்டப்பட்டது. வீரட்டர் - சமணர்களின் மிறைகளுட் பாடிய பதிகங்களுள் ஏனையவெல்லாம் பொதுப் பதிகங்களாயும் இஃது ஒன்று மட்டும் வீரட்டர் என்ற பெயர்பற்றி யருளப்பட்டதும் இக்கருத்துப் பற்றியது. தம் அடியோம் நாம் - "தமர் நாம்" என்ற தேவராக் கருத்தை விளக்கியபடி. தம் - அவர் விரும்பி ஆட்கொண்ட உரிமை குறித்தது. "ஆளுடைய பிள்ளையாராய்" (திருஞான - புரா - 69) என்பதும் ஆளுடைய அரசு முதலிய வழக்குக்களும் காண்க. நாம் - தம்முடன் உலகில் வரும் எல்லா அடியவர்களையும் உளப்படுத்திய பன்மை. "மண்ணுலகுய்ய எடுத்து" என்று முன்பாட்டிற் கூறிய கருத்துக் காண்க. அஞ்சுவதில்லை என்னெற்றே - இல்லை - என்ற குறிப்பு வினைமுற்று எதிர் காலத்துக்கு முரிய தாதலின் இப்போது நிகழ்காலத்து அஞ்சுவதியா தொன்றுமில்லை. இனி எதிர்காலத்தும் அஞ்சவருவதுமில்லை என்ற இத்தேவராரத்தின் பொருளோடொப்ப உரைக்க நின்றது. என்றென்றே - அஞ்சுவதில்லை; அஞ்சவருவதுமில்லை; என்று அத்தேவாரத்தினுள் வேறு பிரித்துக் கூறியதனைக் குறிக்க, என்று - என்று - என அடுக்கிக் கூறினார். ஏகாரம் தேற்றம். எதிர்காலத்தில் அஞ்சவருவதுமில்லை என்றது தம்மை இனியும் அமணர் செய்ய நின்ற, கல்லினோடு பூட்டிக் கடலிற் பாய்ச்சுவதாகிய மிறைச் செயலினைக் குறித்துத் தம்பொருட்டும், இனி உலகில் ஏனை அடியவர்கட்கு வரும் எல்லா ஏதங்களையும் குறித்துப் பிறர் பொருட்டும் எழுந்தது. அருந்தமிழ் - என்றது அஞ்ஞான்று தந்த பயனை எஞ்ஞான்றும ஒரு தலையாகப் பயந்தே விடும் இயல்பு குறித்தது. தமிழ் - ஈண்டுத் தமிழ்ப்பதிகம் குறித்துநின்றது. அறைந்தார் - அறைதல் - சொல்லுதல் - களிற்றினை நோக்கி "அஞ்சுவதில்லை" என்ற தமது உறைப்பினை அருந்தமிழ்ப் பாட்டினால் சொன்னார் என்க. அறைதல் - அடித்தல் என்ற குறிப்பும்பட நின்றது, பறை அறைதல் என்றாற்போல. உறைந்தார் - என்று பாடங்கொண்டு அன்பினில் உறைந்து நின்றார் என்றுரைப்பாருமுண்டு. "மலையே வந்து விழினு மனிதர்காள், நிலையினின்று கலங்கப் பெறுதிரேற், தலைவனாகிய வீசன் றமர்களைக், கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே" என்ற தனிக் குறுந்தொகை இச்சரிதப் பகுதியிற் போந்தபடி நாயனாரது |