வஞ்சமொழிகள். பொய்யினாற் பிறரை மயக்கும் அவர்களது வஞ்சனையின் திண்மை இதனால் நன்கு விளங்கும். 121 1387. | அல்லிரு ளன்னவர் கூற வரும்பெரும் பாவத்த வன்பின் "தொல்லைச் சமய மழித்துத் துயரம் விளைத்தவன் றன்னைச் சொல்லு மினிச்செய்வ" தென்னச் சூழ்ச்சி முடிக்குந்தொழிலோர் "கல்லுடன் பாசம் பிணித்துக் கடலிடைப் பாய்ச்சுவ" தென்றார். |
(இ-ள்.) வெளிப்படை. இரவிருள் போன்ற அமணர்கள் இவ்வாறு சொல்ல, அரும்பெரும் பாவச்செயலோனாகிய அரசன், அதன்பின்பு, பழைமையாகிய நமது சமயத்தை அழிவு செய்து துன்பம் விளைத்த தருமசேனனை இனிச் செய்வதென்ன என்று சொல்லுமின்" என்ற கேட்கத், தாங்கருதிய வஞ்சனையையே முடிக்குந் தொழிலுடையோராகிய அவ்வமணர்கள் "கல்லினோடு சேர்த்துக் கயிற்றாற் கட்டிக் கடலினுள்ளே பாய்ச்சுவது (இனிச் செய்யக் கடவது)" என்று சொன்னார். (வி-ரை.) அல்லிருள் அன்னவர் - பகலிலும் இருள் உளதாயினும் அது வலிகெட்டுத் தன் செயலின்றி நிற்றலின் அல்லிருள் என்றார். இதற்கு, யாமஇருள் - நள்ளிருள் - என்பாருமுண்டு. பொருட்பயன் மொழி என்று கொண்டு, மிக்க இருள் என்றலுமாம். "ஒருபொருளுங் காட்டா திருள்" (திருவருட்பயன்) என்றபடி உலகப் பொருள்களைக் காண முடியாதவாறு கண்ணை மறைப்பதனால் உண்மை காணாதபடி மன்னனறிவை மறைத்த அமணர்க்கு இருள் உவமையாயிற்று. அவர்களது உடம்பும் கருகு முருட்டுடம்பு என்பர். எனவே பண்பும் வினையும் பற்றி எழுந்த உவமம் என்க. "இருட்குழாம்" (1349), "காரிருண்ட குழாம்போலுமுருவுடைய" (1365) என்றவிடத் துரைத்தவையும் பார்க்க. அல்இருள் - அல்லாத - தீய - இருள் என்றலுமாம். அரும் பெரும் பாவத்தவன் - அரசன். "அருள்கொண்ட நெறிகோடி - மருள் கொண்ட மன்னவன்" (1355), "பெருகுசினக் கொடுங்கோலான்" (1361), "அமண்சார்பாற் கெடும் மன்னன்" (1368), "புலைத்தொழிலோன்" (1374) என்று முன்னர்க்கூறிய ஆசிரியர் இங்கு அவன் சொன்னது முன்சொன்ன கொடுங்கோன்மைத் தீர்ப்புக்களினும் மிகப் பாவமுடையதும் கடையாவதுமாதலின் அதனைச் சொன்ன அவனை அரும்பெரும் பாவத்தவன் என்றார். பின் - என்னத் - தொழிலோர் - பாய்ச்சுவது என்றார் என முடிக்க. தொல்லைச் சமயம் - புதிதாய் உண்டானதாயினும், அமணர்சொற்கேட்ட அரசன் சமண சமயத்தில் வைத்திருந்த மயக்கவுணர்வினால் அது மிகத்தொன்மையது என்றான். (இன்பம் விளைக்காது) தொல்லை - துன்பம் - விளைப்பது என்ற உண்மைக் குறிப்பும் அரசனை அறியாமல் அவன் வாக்கிற் போந்தது காண்க. இனிச்செய்வது - சொல்லும் - என்க. செய்வது - யான் செய்வதனை - என்னாற் செய்யக்கடவதனை. இரண்டனுருபு விரிக்க. துன்பம் விளைத்தவன் - "நின்சீர் பங்கப்படுத்தவன்" என்று அமணர் சொன்னதை நம்பி அரசன் இவ்வாறு கொண்டனன். சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் - வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்" (1347) என்றபடி உண்மையுணர்ந்து அரசன் சைவனாகாமலும், தமது சீவனத் தொழில் சிதைவாக்காமலும் இருத்தல் வேண்டிப் பொய்யினைக்கற்பித்த சூழ்ச்சியினையே முடிக்கும் தொழிலில் நின்ற அமணர். உண்மையில் நில்லாதவர் என்றபடி. சூழ்ச்சி - கேடு நினைந்து சூழும் செயலுக்கு வந்தது. "கல்லுடன்...பாய்ச்சுவது" - இனிச்செய்யக்கடவது என்பது சொல்லெச்சம். "செய்வது சொல்லும்" என்று மன்னவன் கேட்க அதற்கு அவர்களது விடை. |