பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்157

 

தண்டஞ் செய்யும் களத்துக்கு தண்டச்சேவகர்பாற் சேர்த்து மிக்க பாதுகாவலுடன் அனுப்பும் முறை காண்க. அன்றியும் தருமசேனர் தரைமீது உயிருடன் பிழைத்திருந்தால் "எமக்கொல்லா மிறுதி" (1371) எனவும், அவர் ஒழியாவிட்டால் அரசனது அரச முறையும் ஒழிந்து போவது திடம் எனவும் உரைத்த அமணர் சொல்லினை நம்பி வசப்பட்டானாதலின், அவரைத் தரையின்மேல் தப்பவிடாது கடல் நீரினகத்துள்ளே நூக்கிக் கொன்றுவிடுதலையே நோக்கி இவ்வாறு கூறினான் என்பதுமாம். இனி நாயனார் இத்தீயவர் கூட்டத்தைவிட்டு நீங்கிச் சிவனது நெறியடைந்து அடியவர்பால் அணையச் செல்கின்றாராதலின், அவரும் உலகும் சேமம் அடையும்படி கொண்டுபோய் என்றதோருண்மைப் பொருளும் அரசன் வாக்கில அவனை யறியாது வெளிப்படுதல் காண்க. அவரைச் சேமமுறக் கொடுபோகி என்றதனால், அவரோடு பிணங்கிய இவ்வமணர் சேமந்தொலைய என்ற பொருளுந் தொனிப்பது காண்க. அரசன் உண்மையுணர்ந்து கொண்டதனால் அமண் அழிவுபட்டு அவர்தம் பாழிகளும் பள்ளிகளும் தொலைவதும், அரசனும் சைவனாகிச் சேமமுறுதலும் காண்க. நான் சேமமுற என்ற குறிப்பும் காண்க;

பாங்கு ஒருகல்லில் அணைத்து - பாங்கு - அதற்கேற்ற பண்புடைய. ஒருவன் தாங்கி மேல்வரக் கூடாத ஏற்ற கனமுடையதாகிய. பாங்கு - நாயனாரது திருமேனி தன்மேற் பொருந்தவரும் புண்ணியப் பண்பும், பின்னர் அதுவே சிவிகையாக மிதந்து அவரைத் தாங்கிக் கரைசேர்க்கும் நற்பண்பும் பொருந்திய என்றதொரு குறிப்பும் காண்க. ஒரு - என்ற சொற்குறிப்பும் அது. அணைத்தல் - பிறழாதபடி சேர்த்தல்.

ஓர் படகில் வீங்கொலி வேலையில் எற்றி - கடலினகத்துப் பாரமேற்றிச் செல்லும் பெரும் படகுகளும் நாவாய்களும் அந்நாள் தமிழ் நாட்டில் வழங்கியன என்பது நாட்டுச் சரிதத்தா லறியப்படும். "திரைகட லோடியும் திரவியந்தேடு" என்ற முதுமொழியும், காரைக்காலம்மையார் சரித வரலாறும் கருதுக. வீங்கொலிவேலை - என்றதனால் கடலினகத்து ஆழத்தில் என்பது குறிப்பு. ஏற்றி என்பது பாடமாயின் படகில் ஏற்றி என்க.

விடுத்தான் - இதுவே அரசன் இவ்வாறு செய்யும் தீய ஆணைகளின் இறுதியாதலின் அக்குறிப்புப்பட விடுத்தனன் - விட்டான் என்றார். "அறிவிலாப் பிணங்களை நாமிணங்கிற் பிறப்பினொடு மிறப்பினொடும் பிணங்கிடுவர்; விடுநீ" (சித்தி - 11 - சூத்) என்ற ஞானநூலும் காண்க. "காவலரே யேவி விடுத்தாரேனும் கடவமலோம்" என்ற நாயனாரது திருவாக்கும் காண்க.

கேட்டவ்வரசன் - செம்மை பெறக்கொண்டு - என்பனவும் பாடங்கள்.

123

1389.

அவ்வினை செய்திடப் போகு மவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று மேவிட நாவுக்கரசர்
செவ்விய தந்திரு வுள்ளஞ் சிறப்ப வவருடன் சென்றார்;
பௌவத்தின் மன்னவன் சொன்ன படிமுடித் தாரப் பதகர்.

124

(இ-ள்.) வெளிப்படை. அத்தொழிலைச் செய்திடப் போகின்ற அவர்களோடும் போய் அமணர்களாகிய கொடுவினையாளர்களும் சென்று சேரத், திருநாவுக்கரசர் செம்மையாகிய தமது திருவுள்ளம் சிறப்படைய அவர்களுடனே போயினர்; அரசன் சொன்னபடி கடலினிடையே அந்தக் கடையோர் தஞ்செயலினை முடித்தனர்.

(வி-ரை.) வினை - முன்பாட்டில் "அவ்வினை மாக்கள்" என்ற கருத்தைத் தொடர்ந்து கொண்டது.