1390. (வி-ரை.) அப்பரிசு......பின்னர் - முற்றி - அத்தன்மைத்தாகிய கொடு வினைகளை அவ்வமணர் செய்வது இதனோடு முற்றியது; இனிச்செய்வ தொன்று மிலர் என்பது குறிப்பு. அப்பரிசு - முற்றி - அவ்விதம் நாயனாரை அலைபுரியும் தன்மை முடிவுற்றது; ஆனால் அவர்களது சமயத்துத் தீத்தொழில்கள் நாட்டில் இன்னும் முடிவுறாதிருந்தன என்பது அப்பரிசு அவ்வினை என்றதனாற் குறிக்கப்பட்டன. நாயனாரது சரிதத்திற் பின்னர்ப் பழையாறை வடதளியினைப் பற்றிய வரலாறும் (திருநா - புரா - 294 - 300), பிறவும் பார்க்க. அகன்று ஏகிய - விட்டுப்போயின. இதுவரை நாயனாரைப்பற்றி ஈர்த்து மிறை செய்து தொல்லை விளைத்தனர்; இனி இதனோடு விட்டு நீங்கினர் என்றதும் குறிப்பு. ஒப்பரும் ஆழ்கடல் - இத்தனை ஆழமுடைத்து என்று அளக்கலாகாதது என்பதாம். நாயனாரைச் சிரத்திற்றாங்கிட வருணன் தவம்செய்து பேறுபெற்ற கடலாதலின் (1395) இக்கடல் தன்னை ஒப்பரியதாயிற்று என்பதும் குறிப்பு. புக்க - நூக்கப்பெற்ற - புகுத்தப்பட்ட எனச் செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. மெய்த்தொண்டு உறைப்புடையர் என்க. உண்மையாகிய தொண்டில் உறைத்து நின்றவர் என்பது. உறைப்புடையமையாவது எதுவரினும் பிறழாது நிற்றல். அமணர் செய்வித்த இந்த நான்கு தீய மிறைகளினும் அஞ்சாது நின்ற நிலைக்கு அவர் இறைவனது தொண்டர் யாம் எனக்கொண்ட மன உறுதியொன்றே காரணமாயிற்று. "ஒருவர் தமர் நாம், அஞ்சுவ தியாதொன்றுமில்லை; அஞ்ச வருவது மில்லை" என்பனவாதி திருவாக்குக்கள் உலகுக்கு எடுத்துக் காட்டாக நின்று இதனை விளக்குவன. இத்தன்மைபற்றியே "நாணிலமண் பதகருடன், ஒன்றியமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி னுறைப்பாலே, வென்றவர்தந் திருப்பெயர்" (அப்பூதி - புரா - 13) என்று அப்பூதியடிகள் துணிந்து கூறியதும் காண்க. எப்பரிசாயினும்...என்று - எப்பரிசாயினும் என்றது எந்தநிலை நேரிடினும் என்ற பொருள் தந்து நின்றது. முன்னர்ச் சுடுநீற்றறையினுள் தீயின் இடையே இருத்தல் ஆயினது; இப்பொழுது கடலிடையே நீரினுள் இருக்கல் ஆயினது; எந்நிலையாயினும் என்க. இதற்கு ஆழினு மாழ்க - மிதக்கினும் மிதக்க - முடிவு எதுவாயினும் என்றுரைப் பாருமுண்டு. அது பொருந்தாமையறிக. திருவருள் காப்பது உறுதி என்ற உறைப்பில்லாதாரே அங்ஙனம் நினைகுவர். உறைப்புடை மெய்த்தொண்டர் என்ற அதனால் எந்நிலை வரினும் என்ற பொருளே நாயனார் ருத்துள் எழுந்ததென்பது, "கடலிற் பாய்ச்சினும்", "அடுக்கற்கீழ்க் கிடக்கினும்" என்பனவாதி இத்தேவாரங்கள் நாயனாரது திருவுள்ளப்பான்மையைவிளக்குவன. ஆக - ஆகும்படி. ஆக்கமுண்டாகும்படி ஏத்துவன். அமணர்கள் போம்படி எண்ணிச் செய்யினும் நான் ஆம்படி ஏத்துவன் என்பது. "அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான்" (மேகராகக் குறிஞ்சி - ஐயாறு - 1), "பையவே சென்று பாண்டியற் காகவே" (கௌசிகம் - திருவாலவாய் - 1) என்ற ஆளுடைய பிள்ளையாரது தேவார ஆட்சிகளின் ஆக்கப்பாடு கருதுக. எந்தை - தொண்டாக அடைந்த எம்மைக் காக்கும் கடமைப்பாடுடையவன் என்பது. என்று - எனத் துணிந்து. செப்பிய - அத்துணிபையும் அதற்கு உறுதிபெறத் துணையாகும் அருளையும் சொல்லிய. என்று என்பது இத்திருப்பதிகத்தி னுட்குறிப்பைக் குறிப்பது. வண்தமிழ் - வள்ளற்றன்மை எந்நாளும் வரையாது பயன் தந்து நிலவுதல். "வளப் பதிகம்" (1339) என்றது பார்க்க. |