சோலைகளின் மணமும் பொருந்திய என்க. "நறையாற்றுங் கமுகு" (1272), "மருமேவு மலர்" (1273), "மலர்ச்சோலை" (1274) என்றவை குறிக்க. வயற்பயிர்க்கண் வியல் இடங்கள் - வியல் இடங்கள் - நன்செய் நிலங்களினிடையில் புன்செய்ப் பயிர் செய்யவும், காவலாட்கள், எருதுகள் முதலியன தங்கவும், விளைபொருள்களைச் சேமிக்கவும், உதவுவனவாய் நிறுவப்பெறும் பரந்த மேட்டிடங்கள். பல - இவ்வாறு அனேக முள்ளன என்பதாம். பலவற்றின் கண்ணும் என ஏழனுருபும் முற்றும்மையும் விரிக்க. பரந்து - உயர் - நெற்கூடுகளும் - இடமகன்றனவாகவும் உயரமாகவும் அமைக்கப்படும் நெற்கூடுகளின்மேலும். அடைமொழிகள் நெற்கூடுகளை அமைக்கும திறத்தைக் குறிப்பன. நெற்கூடு - நெல்லைச் சேமித்துவைக்கும் வைப்பிடம். 1105-ம், கோட்புலி நாயனார் புராணம் (3-5) பாட்டுக்களும் பார்க்க. "மருங்குவளர் கதிர்ச்செந்நெல்" (1271) என முன்னர்ச் சேய்மை யிடங்களிலும் நெற்பயிர் கூறினாரேனும், அவ்விளை பொருள்களைக் காவல் வசதியின் பொருட்டு நகரணிமையிற்றானே கொணர்ந்து சேமித்தல் பெரும்பாலும் இயல்பாதலின் இங்கு மாடங்களினணிமையில் நெற்கூடுகளைக் கூறினார். "சேர்" என்ற வழக்கும் காண்க. மயிற்குலமும் ழகிற்குலமும் - கூடுகளும் மாடமும் - மேவி - மருங்கு ஆடும் என்க. ஏழனுருபுகள் தொக்கன. உயர் நெற்கூடுகளின்மேல் முகிற்குலமும், மாடங்களின்மேல் மயிற்குலமும் என எதிர் நிரனிரையாக்கி உரைத்துக்கொள்க. நெற்கூடுகள் உயர்வாகிய மேட்டிடங்களில் உயரமாக அமைக்கப்படுதலால் மேகந்தவழுமளவுயர்ந்தன என்பதாம். உயர்வு நவிற்சியணி. "ஈடுபெருக்கிய போர்களின் மேகமிளைத்தேற" (926) என்றதும் இங்கு நினைவு கூர்தற்பாலது. கூடுகளிற் சேமித்த நெற்கொண்டு செய்யப்படும் அறங்களின் பயனாக முகிற்குலம் சூழ்ந்து மழைபெய்ய வரும் என்பதோ ருட்குறிப்பும் கண்டுகொள்க. மயில்குலம் - மயில் குறிஞ்சிக் கருப்பொருளாயினும் இங்கு வந்தது திணைமயக்கம். "தண்டலை" (1272), "மலர்ச்சோலை" (1274) முதலியவற்றில் மயில்கள் வந்து இரைதேடிக் களித்து உலாவுதலும், அவ்வாறு வந்தவை அருகில் உள்ள மாடங்களின் மேல் வந்து ஆடுதலும் இயல்பாகும். அன்றியும் பதிகளில் மயில்களை மக்கள் வளர்த்தலுமுண்டு. வெயிற் கதிர்மென் குழைமகளிர் - கதிர் வெயில் என்க. வெயில் - ஒளி. கற்றையாக ஒளி வீசும் என்பதாம். மென்குழை - அணி பூணும் மகளிரின் மென்மை அணியின் மேலேற்றப்பட்டது. மெல்லிய குழை என்பாருமுண்டு. குழை - மகரகுண்டலம். குழைவையுடைய மகர வடிவினதாய் அமைக்கப்படுதலின் இப்பெயர் பெற்றது போலும். மயிற்குலழம் முகிற்குலழம் மாறாட மருங்கு ஆடும் - மயிற்குலம் என்றதனால் மயில்களேயன்றி மயில்போன்றசையும் ஆடற்பெண்களும் என்பதும் குறிப்பு. நகர்ப்புறத்தில் மாடங்களின் ஆடரங்குகளில் ஆடற்பெண்கள் நடனமாடுதலும் அந்நாள் வழக்கு. "வலம்வந்த மடவார்க ணடமாட முழவதிர" (மேகரா - ஐயாறு - 1) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் பிறவும் காண்க. மாறு ஆட - எதிரெதிராக மாறுபட்டு ஒன்றையொன்று விஞ்சுவனபோல அசைய. ஞாயிற்றின் ஒளியில் மேகங்கள் கருமைமிக்க உருவுடன் பல நிறமும் காட்டுதலானும், கீழிருந்து வானத்தின்மேற் பரந்து செல்வதானும், பசுமை மிக்க உடலிற் பன்னிறங்காட்டிச் சிறைபரப்பி அசைந்தாடும் மயிற்குலத்துக்கு உவமை |