"சிந்தும் வல்வினை செல்வமு மாகுமால்", (நமசிவாயப் பதிகம் - கௌசிகம்) என்றும் வரும் ஆளுடைய பிள்ளையாரது திருவரக்குக்களும் காண்க. நமச்சிவாய என்று - அருஞ்செழுத்தை - பற்றிய உணர்வினில் - திருவைந் தெழுத்து ஓதுமுறைகளும் நிற்கும் முறைகளும் பலவுள. அவற்றுக்கேற்பப் பலன்களும் வெவ்வேறாகும். அவை யெல்லாம் அருளுடைய வழிவழித் தேசிகர் பாற் கேட்டுணரத் தக்கன. இங்கு நாயனார் சொல்லித் துதித்தது நகராதியாக வரும் இந்த முறையில் உள்ள திருமந்திரம் என்பார் என்று என்றார். "நகர முதலாகு நந்திதன்னாமமே", "நகராதி தான்மூல மந்திர நண்ணுமே" முதலிய திருமூலர் திருமந்திரங்களும் காண்க. அன்பொடு பற்றிய வுணர்வினில் - அன்பு வைத்தலும், உறைப்புடன் பற்றுதலும், உணர்வினில் அதன் உருவேபட ஒன்றி நினைத்தலும் வேண்டும். பயன் பெறுதற்கு இவை இன்றியமையாதன. "காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி, ஓதுவார்", "நம்பு வாரவர்", "நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்து" (பஞ்சாக்கரப் பதிகம் - கௌசிகம்) என்ற பிள்ளையாரது திருவாக்குக்கள் இக்கருத்தை விளக்குவன. அஞ்செழுத்தைப் பற்றிய உணர்வு என்றது, அதன் உள்ளீட்டை எண்ணிப் பிடித்தல். திருவருட்பயன் - ஐந்தெழுத் தருணிலை என்ற பகுதியுள்ளும், "எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே, நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன், சிவாயநம வென்னுஞ் திருவெழுத்தஞ் சாலே, அவாயமற நின்றாடு வான்", "ஆடு படிகேணல் லம்பலத்தா னையனே, நாடுந் திருவடியி லேநகரம், கூடும், மகர முதரம் வளர்தோள் சிகரம், பகருமுகம் வாமுடியப் பார்," "சேர்க்குந் துடிசிகரஞ் சிக்கனவா வீசுகரம், ஆர்க்கும் யகர மபயகரம் - பார்க்கிலிறைக், கங்கிநகர மடிக்கீழ் முயலகனார், தங்கு மகரமது தான்", "தோற்றந் துடியதனிற் றோயுந் திதியமைப்பிற், சாற்றியிடு மங்கியிலே சங்காரம் - ஊற்றமா, யூன்று மலர்ப்பதத்திலுற்ற திரோகதமுத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு", "மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ். சாயவ முக்கியரு டானெடுத்து - நேயத்தா, லானந்தவாரிதியி லான்மாவைத் தானழுத்தறானெந்தை யார்பாதந் தான்" என்பனவாதி உண்மைவிளக்கத்திலும், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் இவற்றுள் ஒன்பதாஞ் சூத்திரத்தினுள்ளும், திருமூலர் திருமந்திரம் - ஒன்பதாந் தந்திரம் - தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், அதிசூக்கும் பஞ்சாக்கரம், திருக்கூத்துத்தரிசனம், சிவானந்தக்கூத்து முதலிய பகுதிகளிலும், மற்றும் ஞானநூல்களுள்ளும் பார்க்க. இவை அருளும், அனுபவமுமுள்ள ஞான தேசிகர்கள்பாற் கேட்டுணரத் தக்கவை. அஞ்செழுத்தைப் - பாடினார் - "எந்தையை ஏத்துவன்" (1390) என்று துணிந்த நாயனார் திருவைந்தெழுத்தைப் பாடிய தென்னையோ? எனில், அதுவே எந்தையின் றிருநாமமாதலானும், அவனை ஏத்துதல் அஞ்செழுத்தை, உரு எண்ணுதலேயாம் ஆதலானும், "விதி எண்ணுமஞ் செழுத்தே" எனவும், "அஞ்செழுத்தா லான்மாவை" எனவும், ஞான நூல்களுள் அறிவிக்கப்பட்டபடி அஞ்செழுத்தை எண்ணலுறுவார்க்கு ஆன்மாவில் அரன் "மதியருக்க னணை யரவம்போற் றோன்றி"த் தண்ணிழலாம் என்பது துணிவாதலானும், பிறவாற்றானும் இங்கு அஞ்செழுத்தைப் பாடினார். "ஆலைப் படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு மஞ்செழுத்தி னாமத் தான் காண்" என்பது முதலியனவாய் இதன் விளைவை அறிந்து இன்பத்து ளழுந்திய நாயனாரது திருவாக்குக்களும் காண்க. இது முதல் நாயனாரது இந்தத் திருப்பதிகத்தின் சந்தப்பாட்டாகச் சரித வரலாற்றை யாத்த சிறப்பும் அமைதியும் கண்டுகொள்க. 126 |