பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்163

 

பதிகக் குறிப்பு :- எந்த நிலையினும் வரும் வந்தத் துன்பத்தினையும் காக்க வல்லது திருவைந் தெழுத்தாகும் என்பது. இதனை முன்னிரண்டு பாட்டுக்களாலும் ஆசிரியர் அறிவித் தருளினர். இத்திருப்பதிகப் பாட்டுக்கள் ஐந்தடி யுடையனவாகி முதனான்கடி ஒரு பொருள் வேலனவாகவும், ஈற்றடி மேல்வைப்பாக வேறாகவும் எல்லாப் பாட்டுக்களுக்கும் பொதுவாகவும் பதிகக் கருத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளனவாதலின், அச்சிறப்பியல்பு குறிக்க இரண்டாக வகுத்து இரண்டு பாட்டுக்களிற் கூறினார். இவ்வாறமைந்துள்ள "மாதர் பிறைக்கண்ணி யானை" என்ற நாயனாரது பதிகத்துக்கும், "இடறினும் தளரினும்" என்ற ஆளுடையபிள்ளையாரது பதிகத்துக்கும் இவ்விரண்டு பாட்டுக்களாற் சரித அமைதி சொல்லிப்போகும் குறிப்பினையும் கருதுக. ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு என்ற பெயர்களும் கருதுக.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சொற்றுணை வேதியன் - எவ்வகையானும் துணையாய் நிற்கும் வேதத்தைச் சொன்னவன் - வேதத்தின் பொருளாய் விளங்குபவன் - என்க. வேத நடுவில்விளங்கும் சிவ என்ற சொல்லையே துணையாக அடைந்து நின்று அஞ்செழுத்தைப் பாடப் புகுகின்றாராதலின் இவ்வாறு தொடங்கினார். இருளிடத்து வழிகாட்டி யருள்வான் என்பார் சோதிவானவன் என்றார். "இருளிடத்துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" திருவாசகம். பொருந்த - விடாது பிடித்துப் பற்றி. "ஒட்டிட்ட பண்பிற்" பொருந்தும்படி; கைதொழ - தொழுதால் - கைதொழவே - நற்றுணையாவது - என்று முடிக்க. கற்றுணை ..... பாய்ச்சினும் - சரிதக் குறிப்பு. "கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர், ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால், நெல்லி னீள்வயல் நீலக் குடியரன், நல்ல நாம நவிற்றியுய்ந் தேனன்றே" என்றதும் காண்க. - (2) இப்பாட்டினுள் அருங்கலம் - பயன் பலவற்றுள்ளும் சிறந்தது என்ற பொருளில் வந்தது. பூவினுக்கு - பூக்களுள். பொங்கு - சிறப்புடைய. சிறப்பாவது கலைமகள் - அலைமகள் - மலைமகள் என்ற மூவரும் வீற்றிருத்தல். "பூவெனப் படுவது பொறிவாழ் பூவே" என்றது காண்க. ஆவிற் படுபயன்கள் பற்றி 1224-1227-ல் உரைத்தவை பார்க்க. கோவினுக்கு .... இல்லது - அரசன் ஒருபாற் கோடாது யாவர்க்கும் ஒப்ப முறை செய்யக் கடவன். கோட்டம் - ஒருபாற் கோடுதல். நாயனாரை அலைத்த அரசன் இதினின்று நீங்கியமையால் "புலைத் தொழிலோன்" (1374) எனப்பட்டான். கலமாதலும், ஆடுதலும், கோட்டம் இல்லதும் போல "நமச்சிவாய" மந்திரமுரைத்தல் நாவினுக் கருங்கலமாம் என்க. உவம உருபு தொக்கது ..... (3) விண்ணுற அடுக்கிய - பேரளவுள்ள என்பது பொருள். உண்ணிய புகில் - உண்ணும் பொருட்டுப் புகுந்தால். அவை ஒன்று மில்லையாம் - எல்லாம் எரிந்து தீர்ந்துவீடும்; அதுபோல, என உவம உருபுதொக்கது. பண்ணிய வுலகினிற் பயின்ற பாவம் - உலகில் வருவதற்குக் காரணமாய் முன் செய்தனவும், அவை காரணமாய்ப் பிறந்த பின்னர் அவை கொண்டு பெருக்கியனவுமாகிய அளவற்ற பாவங்களின் பெருக்கை. நண்ணி - நின்று அறுப்பது - புக்கு, போமளவும் உடனின்று தீர்ப்பது - (4) எவ்வகைத் துன்பம் நேரினும் சிவனைத்தவிர வேறு எவரையும் "அதுதீர்க்கும் தலைவரே" என்று உய்தி கேட்க மாட்டோம். தலைமேல் மலையே வீழ்ந்து நின்று அமிழ்த்தினும், துன்பம் தவிர்ப்பது - ஆதலின் என்க. பின்னிரண்டடிகள் காரண முணர்த்தியன.- (5) அருங்கலம் என்றது வேண்டப்பவது என்ற பொருளில் வந்தது. வெந்நீறு - திருநீறு - (6) சலமிலன் - வேண்டுதல் வேண்டாமையிலன். சார்ந்தவர்க்கலால் நலமிலன் - சிவன் சலமிலனாயினும் சார்ந்தாரே நலம் பெறுவர். நாடொறும்நலன் நல்குவான் என்க. சலமிலனாகி அவன் நாடொறும் யாவர்க்கும் நலன் நல்குவானாகிலும் சார்ந்தவரே அதனாற் பயன்பெறுவர். குலம் - சாதி குலம் முதலியவையும்,