பிறந்தருள - எழுந்தருள என்றதுபோல அருள் என்றது சிறப்புக் குறித்து நின்றது. பிறந்து உலகுக்கு அருள்செய்ய என்றுரைத்தலுமாம். உளதானால் - நாடு - உள்ள தென்றுணர்வோமாகில், திறம்பாடும் - சிறப்பினைப்பாடுகின்ற - எடுத்துக் கூறுகின்ற. "ஆதிதிறம்பாடி", "பாதத்திறம்பாடி" (திருவெம் - 14) "திறம்பாடல்பாடி" (தெள் - 8) என்பனவாதி திருவாசகங்கள் காண்க. திறம் - சிறப்பு. சீர்ப்பாடு - சதுரப்பாடு. பாடு - தன்மை. பாடு - பெருமை என்றலுமாம். "பாடு பெற்றசீ ருருத்திர பசுபதி யாராங், கூடுநாமம்" (1039). சீர்ப்பாடு நம் மளவினதோ? என்க. ஓகாரம் எதிர்மறை குறித்தது. திறம் - வரலாறு. தன்மை - என்றலுமாம். உலகுக்கு ஞானந்தரும் பயனே நாட்டின் சிறந்த பயன் என்பதாம். இப்பாட்டிற்கு, இவ்வாறன்றி, மணிகண்டர் - வாய்மைநெறி தரும் ஆலால சுந்தரரும், மணிகண்டர் அறம் தரும் திருநாவுக்கரசும் என்று தனித்தனிகூட்டி, எதிர் நிரனிரையாக்கி யுரைத்தலுமாம். ஆலாலசுந்தரர் வாய்மைநெறி தந்ததாவது திருத்தொண்டத் தொகையா லுலகு போற்றியுய்யத் தருதல். "தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர" (35) என்றது காண்க. மணிகண்டர் அறம் என்பது சிவதருமங்கள் எனப்படும். அவை சரியை முதலிய நான்குமாம். இந்நால் வகை நெறிகளிற் பொதுவகையானும், இவற்றுள் முதலாவதும் அடிப்படை யானதுமாகிய ஞானச் சரியையிற் சிறப்பு வகையானும் தாம் நின்று சரித்துக் காட்டித் தந்ததும், தமது ஆணைமொழிகளால் உபதேசித்துத் தந்ததும் திருநாவுக்கரசர் வாய்மைநெறி தந்த வகையாம். அவ்வுபதேச ஆணைமொழிகள் திருவங்கமாலை, "நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே", "இடர்கெடுமா றெண்ணுதியேல்" என்பனவாதி திருத்தாண்டகங்கள் முதலியவற்றால் அறியத்தக்கன. முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு - பாடு - என்பது சொற்பின் வருநிலையணி. தீநெறிமாள - என்ற பாடமுண்டு. 11 1277. | இவ்வகைய திருநாட்டி லெனைப்பலவூர் களுமென்றும் மெய்வளங்க ளோங்கவரு மேன்மையன; வாங்கவற்றுட் சைவநெறி யேழுலகும் பாலிக்குந் தகைமையினால் தெய்வநெறிச் சிவம்பெருக்குந் திருவாமூர் திருவாமூர். |
12 (இ-ள்.) வெளிப்படை. இவ்வகைப்பட்ட திருநாட்டில் பல்வாகிய எல்லா ஊர்களும் எக்காலத்தும் உண்மையைத்தரும் வளங்கள் ஒங்கவரும் மேன்மையினை யுடையன; ஆங்கு, அவற்றுள்ளே, சிவநெறியினை ஏழுலகங்களுக்கும் கொடுக்கும் தன்மையினால், தெய்வநெறியில் விளையும் சிவனத்தைப் பெருக்கும் அருளாகிய திருஆகும் ஊர் திருவாமூர் என்பதாம். (வி-ரை.) இவ்வகைய திருநாட்டில் - இத்திருநாட்டின் வகை நமதுள்ளத்தினுள் எஞ்ஞான்றும் அணுகவைக்கத் தக்கது என்பதுணர்த்த, அவ்வகைய என்னாது, அணிமைச் சுட்டினால் இவ்வகைய என்றார். எனைப்பலவூர்களும் என்றும் - உம்மைகளிரண்டும் முறையே இடமும் காலமும் குறித்த முற்றும்மைகள். எனைப்பல - பலதிறப்பட்ட - எல்லாம். "எனைப்பல கோடி யெனைப்பல பிறவும்" (திருவண்டப்பகுதி - 27) என்ற திருவாசகம் காண்க. மெய்வளங்கள் - உண்மையைத்தரும் வளங்கள் என்றது உண்மை ஞானத்தை விளைக்க வல்லன என்றதாம். சிவநெறிச் சாதனமாகும் வளங்கள் என்க. நீர் வளம் நிலவளம் முதலிய எவையும் சிவநெறி சாதனமாகும் அவ்வளவே மெய்வளமாவன என்பதும், அவ்வாறு சிவசாதன மல்லாத வளங்கள் எவையும் பொய்யா யொழிவன என்பதும் உணர்த்தப்பட்டன. |