எனைப்பலவூர்கள் - திருக்கோவலூர், திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், திருத்துறையூர் முதலாயின பலவூர்களும் மெய் வளங்கள் ஒங்கவரும் மேன்மையுடையன என்பது அவ்வத் தலவிசேடங்களாலும், அவ்வூர்களில் அவதரித்து அருள்பரப்பி நிற்கும் திருநாவலூர் நம்பிகள், மெய்கண்டதேவர், அருணந்தியார் முதலிய பரமாசாரியர்களின் வரலாறுகாளலும் அறியப்படுதலும் இங்கு நினைவுகூர்தற்பாலுது. ஆங்கு அவற்றுள் - ஆங்கு - அத்திருநாட்டினுள், அவற்றுள் - அவ்வூர்களுள். சைவநெறி ஏழுலகும் பாலிக்கும் தன்மை - பாலித்தல் - கொடுத்தல். "இன்னம் பாலிக்கும் மோவிப் பிறவியே" (கோயில் - குறுந்). பாலித்தல் - காத்தல் என்றுரைப்பினுமமையும். ஏழுலகும் பாலித்தலாவது இங்கு அவதரித்த திலகவதியம்மையாரும், திருநாவுக்கரசு நாயனாரும் எல்லாவுயிர்க்கும் சைவநெறியை வழி காட்டியருளிய திறம். சிவபெருமானை வேண்டிக்கொண்டு அவரருளினால் தம்பியாரைப் பரசமயக் குழிநின்று எடுத்தருளிச் சைவத்தில் வழிப்படுத்திச் சமயா சாரியாராக ஆக்கியதுவும், "அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி" (1299) மனைத்தவம் புரிந்திருந்ததுவூம், "திருப்பணிகள் செய்ததுவும்" (1309), பிறவும் அம்யைார் சைவநெறி பாலித்ததிறம். கயிலையில் இராவணனைச் சிவபெருமானிடத்து வரிப்படுத்தியதுவும் உண்டு என்பர். இத்திருவவதாரத்தில் நிலத்தின் கிழிருந்து வந்த செம்பொன்னும் நவமணியும் பொருளல்ல என்று வாவியினிற்புக வெறிந்த அதனால் கீழுலகத்தவர்களையும், வேதவருலகத்திலிருந்து போந்த அரம்பையர்களைமாயப் பவத்தொடக்காமிருவினைகளென்று காட்டியவதனால் விண்ணுலகத் தவரையும் தெருட்டிச் சைவநெறி பாலித்த வகையும் காணலாம். ஏழுலகு - எழு வகைப் பிறப்பு என்றலுமாம். தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திரு - தெய்வநெறியால் அடையப்படும் சிவத்தை மேன்மேல் எல்லாவுயிரும் பெறும்படி வளரச்செய்யும் அருளாகிய திரு என்க. பாலித்தல் - சாதனமும், சிவம் பெருக்குதல் - பயனுமாம். திரு - இங்கு சிவசம்பந்தமாகிய அருட்டிருவைக் குறித்தது. தெய்வநெறி - தெய்வத்தன்மை வாய்ந்தநெறி, தெய்வத்தால் ஆக்கப்பட்ட நெறி, தெய்வத்தைப் பயப்பிக்கும்நெறி எனப் பலவரறும் உரைக்க நின்றது. சிவம் - செம்மை, சிவமாந்தன்மை என்ற பொருளில்வந்தது. "சைவப் பெருமைத் தனிநா யகனந்தி, உய்ய வகுத்த குருநெறி யொன்றுண்டு, தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய, வையத் துளார்க்கு வகுத்துவைத் தானே" (560) என்ற திருமந்திரம் காண்க. திரு ஆம் ஊர் திருஆமுர் - திரு ஆகும் ஊர் என்னும் பொருள்தர நின்றது என்று ஊரின் பெயர்ப்பொருரளை விரிக்கின்ற நிலையில் உண்மையினை உணர்த்தினார். ஆம் - பெருக்கும் - என்பன முக்காலத்துக்கும் ஒத்தியல்கின்ற நிகழ்காலப் பெயரெச்சம். என்றும் என்ற கருத்தும் காண்க. இவ்வாறு திருத்தலங்களின் பெயர்களை உண்மை யுணர்த்துமுகத்தால் சொற்பின்வருநிலை யணிச் சுவைபட வைத்து விளக்குவது ஆசிரியரது மரபு. "தலத்தின் மேம்படு மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர்" (1031), "கமழ்சாறூர் கஞ்சாறூர்" (866) முதலியவை காண்க. தலமேழும் - தன்மையினால் - சிவம் பெருகும் - என்பனவும் பாடங்கள். 12 1278. | ஆங்குவன முலைகள்சுமந் தணங்குவன மகளிரிடை; ஏங்குவன நூபுரங்க; ளிரங்குவன மணிக்காஞ்சி; ஒங்குவன மாடநிரை; ஒழுகுவன வழுவிலறம் நீங்குவன தீங்குநெறி; நெருங்குவன பெருங்குடிகள். |
13 |